சர்வதேச அரங்கில் ஒரு காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், இணைந்து அமெரிக்க எதிர்ப்பை தீவிரமாக வெளிப்படுத்திய தலைவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்து விட்டது.
கடைசியாக இந்த அணியில் இருந்து விலகியிருப்பவர் ஈரானின் ஜனாதிபதியாக இருந்த, மஹ்மூட் அகமடிநிஜாட்.
அண்மையில் ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை.
காரணம், இரண்டு தடவைகளுக்கு மேல், ஜனாதிபதி பதவிக்கு எவரும் போட்டியிட முடியாது என்று ஈரானிய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
இலங்கையிலும் அத்தகைய சட்டம் ஒன்று இருந்தது.
இரண்டாவது, தடவையாகத் தெரிவு செய்யப்பட்டதும் முதல் வேலையாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலமைப்பில் 18வது திருத்தத்தைக் கொண்டு வந்து அந்த விதியை நீக்கிவிட்டார்.
இப்போது அவரால், மூன்றாவது பதவிக் காலத்துக்காகவும் போட்டியிட முடியும்.
ஆனால், சர்வதேச அரங்கில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த மஹ்மூட் அகமடிநிஜாட் அவ்வாறு செய்ய முடியாது போனதால் அவர் இப்போது முன்னாள் ஜனாதிபதியாக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த 4ம் திகதி ஈரானின் புதிய ஜனாதிபதி யாக ஹசன் ரௌஹானி பொறுப்பேற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஈரானின் உயர்சபை பேச்சாளர் அறிவித்திருந்தார்.
ஆனால், ஈரானில் இருந்து அழைப்பு வந்திருந்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈரான் செல்லவில்லை.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும், பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவையுமே அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பங்கேற்காது போனதற்கு, என்ன காரணம் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை.
எனினும், தற்போது, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் சுமுகமற்ற சூழலில், ஈரான் செல்வது அமெரிக்காவின் கோபத்தைக் கிளறிவிடும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஈரானின் எண்ணெயில் தான் இலங்கை பெரிதும் தங்கியிருந்தது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால், ஈரானின் எண்ணெய்யை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.
இலங்கைக்கு எண்ணெய் விற்பதில் அமெரிக்கா தடைகளை சற்று தளர்த்தியிருந்தாலும், டொலராக அதற்குப் பணம் செலுத்த முடியாத இழுபறி நிலை உள்ளதால், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், ஈரானின் நட்பை மேலும் வலுப்படுத்த முனைவதை புத்திசாலித்தனமான காரியமாக இலங்கை கருதாமல் விட்டிருக்கலாம்.
ஏனென்றால், அமெரிக்காவுக்குச் சவால் விட்டுப் பேசுகின்ற மறைமுகமாக குத்திப் பேசுகின்ற தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே இப்போது இருக்கிறார்.
முதல்முறை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற போது, ஈரானில் மஹ்மூட் அகமடிநிஜாட், லிபியாவில் முவம்மர் கடாபி, வெனிசுவேலாவில் ஹியூகோ சாவேஸ், மியான்மாரில் தான் ஸ்வே என்று அமெரிக்காவுக்கு சவால் விடும் தலைமைகள் இருந்தன.
வடகொரியா, கியூபா என்று பல நாடுகள் அமெரிக்காவுக்குச் சவாலாக இருந்தாலும், மஹிந்த ராஜபக் ஷ, மஹ்மூட் அகமடிநிஜாட், முவம்மர் கடாபி, ஹியூகோ சாவேஸ், தான் ஸ்வே போன்றவர்கள் அமெரிக்காவுடன் எப்போதும் கடும் போக்குடன் செயற்பட்டனர்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அமெரிக்காவைப் போட்டுத் தாக்குவது இவர்களின் வழக்கமாக இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்கா மனித உரிமை விவகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்ள, அதற்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அமெரிக்காவுக்கு எதிரான அணிக்குள் தானாகவே போய் சிக்கினார் மஹிந்த ராஜபக்ச.
இதனால், ஈரானின் மஹ்மூட் அகமடிநிஜாட்டும், லிபியாவின் முவம்மர் கடாபியும், வெனிசுவேலாவில் ஹியூகோ சாவேசும், மியான்மாரில் தான் ஸ்வேயும் இவருக்கு நெருக்கமான நண்பர்களாயினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமெரிக்க எதிர்ப்பு நண்பர்கள் குழாமுடன் இணைந்து கொண்டதும், அவர்களுக்கு இலங்கையில் செங்கம்பளம் விரித்ததையும், மேற்குலகம் அருவருப்போடு தான் பார்த்தது.
ஈரானிய ஜனாதிபதியாக இருந்த மஹ்மூட் அகமடிநிஜாட், கடந்த ஆண்டு அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய போது, மேற்குலக நாடுகளுக்கு எதிரான, மூன்றாம் உலக நாடுகளின் பலமான சக்தியாக, அணிசேரா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அதையடுத்து, ஜியோ 20 மாநாட்டுக்காக சென்றிருந்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார்.
அப்போது அவர், அமெரிக்காவுக்கு எதிரான, புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்தக் கருத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே குறிப்பிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள், மாட்டியும் விட்டன.
அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளைக் கொண்டு, ஒரு மாற்று உலக ஒழுங்கை, உருவாக்க முயன்ற அணி, மஹ்மூட் அகமடிநிஜாட்டின் ஓய்வுடன் வலுவிழந்த புயலாகி விட்டது.
முன்னதாக, லிபியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட புரட்சி, கடாபியை உயிர்ப்பலியெடுக்க, இந்த நண்பர்கள் குழாம் ஆடிப் போனது.
அதற்கு முன்னதாகவே, மியான்மாரின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து, இராணுவ ஆட்சியளரான ஜனாதிபதி தான் ஸ்வேயை கைக்குள் போடத் தொடங்கியது.
ஒருகட்டத்தில், அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்வதை விட, அமெரிக்காவுடன் இணங்கிப் போவதே மேல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
அமெரிக்கா சொன்னதையெல்லாம் தட்டாமல் செய்யத் தொடங்க, மியான்மாரில் மெல்ல மெல்ல ஜனநாயகக் காற்று பரவத் தொடங்கியது.
ஆக, இப்போது அமெரிக்காவுக்கு எதிரான நண்பர்கள் குழாமில், மியான்மார் ஜனாதிபதி தான் ஸ்வேயும் இல்லை.
அடுத்து, புற்றுநோயுடன் போராடிய வெனிசுவேலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், மரணத்தை அடைய, இந்த நண்பர்கள் குழாம் சிறுத்துப் போனது.
ஈரானின் ஜனாதிபதியாக இருந்த, மஹ்மூட் அகமடிநிஜாட்டும், ஓய்வு பெற்றதும் மஹிந்த ராஜபக்சவின் நண்பர்கள் குழாம் முற்றாகவே கலைந்து, அவர் மட்டும் இப்போது தனியனாக இருக்கிறார்.
இப்போது அவரோ, அல்லது அவரது அரசாங்கத்தில் உள்ளவர்களோ அமெரிக்காவுக்கு எதிராக வாய்திறப்பதை பெரிதும் தவிர்த்துக் கொள்கின்றனர்.
வெலிவேரிய தாக்குதல், தொடர்பாக அமெரிக்கா கண்டனத்தை வெளியிட்ட போதும், யாருமே அதற்கு எதிராக வாய்திறக்கவில்லை.
நண்பர்கள் குழாம் பலமாக இருந்த முன்னைய சூழலில் என்றால், ''எங்களின் வேலையை நாங்கள் பார்க்கிறோம், கருத்துச் சொல்ல நீங்கள் யார்'' என்ற தொனியில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்போது அடங்கிப் போக வேண்டிய சூழல் என்பதால், அடக்கி வாசிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஈரானிய ஜனாதிபதியாக இருந்த மஹ்மூட் அகமடிநிஜாட்டைப் போலவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், கொமன்வெல்த் மாநாட்டை, பிரமாண்டமாக நடத்திக் காட்ட ஆசைப்படுகிறார்.
ஆனால், மஹ்மூட் அகமடிநிஜாட்டைப் போன்று அவர், மாற்று உலக ஒழுங்கு பற்றியோ, இன்னொரு அணி குறித்தோ இனிமேல் பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஏனென்றால் அவ்வாறு ஒருங்கிணைவதற்கு அவருடன் யாருமே முன்வரப் போவதில்லை.
எனினும், தனக்கெதிரான அமெரிக்க நகர்வுகளை முறியடிப்பதற்காக, கொமன்வெல்த்தில் உள்ள நாடுகளையும், ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அவர் தன் கைக்குள் போட்டு வருகிறார்.
இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளில் இலங்கை மீதான நடவடிக்கைகளை தடுப்பதற்காகவேயன்றி, அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணிக்காக அல்ல.
அத்தகைய கூட்டணி தனக்கெதிரான அமெரிக்காவின் சீற்றத்தை திருப்பி விடும் என்ற யதார்த்தத்தை அவர் ஓரளவுக்காவது விளங்கிக் கொண்டிருக்கிறார்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten