[ பி.பி.சி ]
அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது.
குறைந்தது இரண்டரை ஆண்டுகள் காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தத் அகதிகளை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு நஷ்டஈடும் புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டதை எதிர்த்து அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்கு தொடர தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டால் இவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்று கருதப்பட்டு, குடிவரவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்திலேயே இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் தடுத்துவைக்கப்பட்டது எதேச்சதிகாரமான செயல் என்றும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டின் 9ஆம் ஷரத்தை மீறும் செயல் என்றும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் 18 பேர் அடங்கிய ஐநா குழு கண்டறிந்துள்ளது.
2009 மார்ச் மாதத்துக்கும் 2010 டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த இந்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் முதலில் கிறிஸ்துமஸ் தீவில் இறங்கியிருந்தவர்கள்.
இவர்களில் ஐந்து பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டு முதலில் இந்தோனேஷியாவில் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.
தாம் ஏன் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறோம் என்று தமக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் தமது தடுப்புக்காவலை எதிர்த்து மறுஆய்வு மனு தொடுக்கும் சட்ட வழிமுறைகள் தமக்கு இல்லை என்றும் இந்த அகதிகள் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஏழு பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு, அவுஸ்திரேலிய சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ஐநாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten