தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

நவநீதம்பிள்ளை இலங்கையை வந்தடைந்தார்!

யாழில் நவநீதம்பிள்ளையின் அரசியல் கட்சிகளுடான சந்திப்புக்கள்! கவனம் செலுத்தும் கபே அமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 07:28.49 AM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது குழுவை மட்டும் சந்திக்கவிருக்கும் வாய்ப்பு தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது குழுவை மட்டும் மனித உரிமை ஆணையாளர் சந்தித்தால், இதன் மூலம் தேர்தல் நெறிமுறைகளுக்கு அப்பாலான சாதக நிலைமை தேர்தலில், அந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு கிடைக்கும்.
போர் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனைகளில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கவனம் செலுத்தப்பட்டமை சாதகமான விடயமாகும்.
இப்படியான சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தை கேந்திரமாக கொண்டுள்ள ஊடகங்கள் நவநீதம்பிள்ளையின் யாழ்ப்பாணம் விஜயம் தொடர்பாக அதிக கவனத்தை செலுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையாளர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது குழுக்களை மாத்திரம் சந்தித்தால், அது அந்த கட்சிகளுக்கு தேர்தலில் சாதகமாக அமைவதை தவிர்க்க முடியாது.
வடக்கில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை அவர் சந்திப்பதாக இருந்தால் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
மனித உரிமை தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகளை கடைபிடிக்க கடமைப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சமநிலைமையான நியாயத்தை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfoy.html#sthash.RLMVC5Uw.dpuf

நவிபிள்ளையிடம் மலையக பிரச்சினைகள் செல்லாமைக்கு மூலகாரணம் சுயநலவாத தலைமைகளே!- மனோ கணேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 08:24.32 AM GMT ]
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று இலங்கை வந்துள்ளார். இவரிடம் வடகிழக்கு உரிமை மீறல்கள், முஸ்லிம் மக்களின் பள்ளியுடைப்பு அக்கிரமங்கள் ஆகிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெலிவேரிய கிராமத்து சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகூட அவர் கவனத்துக்கு சென்றுள்ளது.
வடகிழக்கு தமிழர், முஸ்லிம், சிங்கள மக்களின் இந்த பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்துவதில், இந்நாட்டு மனித உரிமையாளர்களுடன் இணைந்து நானும் பல்வேறு தளங்களில் இருந்து பங்களித்து வருகின்றேன். இது நாடறிந்த உண்மை. இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது.
ஆனால் 200 வருடங்களாக, முதலில் பிரிட்டிஷ் காலனியாதிக்க வாதிகளாலும், பின்னர் கடந்த 65 ஆண்டுகளாக உள்நாட்டு இனவாத அரசுகளாலும் உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஐநா சபை படியேறவில்லை.
இந்நிலைமைக்கு முழுமுதல் மூல காரணம், இன்று மலையகத்தில் வன்முறையையும், சாராயத்தையும் மூலதனமாக கொண்டு நாட்டாண்மை செய்து திரியும் தூரநோக்கற்ற சுயநலவாத தலைமைகளே என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யானை சின்னத்தில் போட்டியிடும் முன்னணியின் வேட்பாளர்கள் ராஜ்குமார், சந்திரகுமார் ஆகியோரின் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள், இந்த நாட்டுக்கு இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களை தென்னிந்தியாவில் இருந்து கடத்தி வந்தார்கள். அந்த மக்களின் மீது பாரிய உரிமை மீறல்களை கொண்டு நடத்தி, தனது ஏகாதிபத்திய வர்த்தக நோக்கங்களை நிறைவேற்றி கொண்டபின், அவர்களை அம்போ என்று கைவிட்டு விட்டு பிரிட்டிஷ் மகாராணியாரின் அரசாங்கம் கப்பல் ஏறி சென்று விட்டது.
அதன் பின்னர் சாஸ்திரியின் இந்திய அரசு, இந்திய வம்சாவளி மக்களை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் செய்துகொண்டு, இந்த மக்களின் அரசியல் பலத்தை பாதிக்கு மேல் குறைத்து நட்டாற்றில் விட்டுள்ளது. இலங்கை அரசாங்கங்களை சந்தோசப்படுத்தும் ஒரே நோக்கில் இந்திய மத்திய அரசு இந்த உரிமை மீறல் கைங்கரியத்தை செய்து முடித்தது.
கடந்த 65 வருடங்களாக இலங்கையின் அரசுகள் இந்த மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அடித்து,துவைத்து நவீன கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றன. இந்த மகிந்த அரசின் கீழ் இந்த மக்களுக்கு இருந்த ஒரே ஒரு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது.
100வருடங்களுக்கு மேல் மலையக பூமியில் வாழும் மலையக தொழிலாளர்களுக்கு, இங்கே இன்று காணியுரிமை இல்லை. வீட்டுரிமை இல்லை. கணிசமானோருக்கு வாக்காளர்களாக தம்மை பதியும் உரிமை மறுப்பு, தேசிய பாடசாலை கல்வி மற்றும் உயர் கல்விக்கான மலையக பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்கும் உரிமை மறுப்பு மற்றும் கட்டாய கர்ப்பத்தடை, சிசு மரணம், வறுமை, போசாக்கின்மை, சிறுவர் பணிக்கமர்த்தல் ஆகிய எத்தனையோ உரிமை மறுப்புகள் சர்வ சாதாரணமாக ஆண்டாண்டு காலங்களாக நடைபெற்று வருகின்றன.
ஆனால் இவை எதுவும் இன்னமும் சர்வதேச சமூகத்தின் வாசலை எட்டவில்லை. ஐநா சபையின் படியேறவில்லை.நேற்று நடந்த தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலையும், வெலிவேரிய சம்பவத்தையும் நாம் ஐநாவின் கவனத்துக்கு கொண்டு போகும் போது, நூறு வருடங்களுக்கு மேலான மலையக கொத்தடிமை உரிமை மீறல்களை உலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாமைக்கு நான் மனம் வருந்துகின்றேன்.
இதற்கு காரணம் மலையகத்தில் இன்று நந்தி மாதிரி அமர்ந்துகொண்டு இருக்கும் தலைமையாகும். இது தானும் செய்யாமல், செய்ய விரும்புபவர்களையும் செய்ய விடாமல் நாட்டாண்மை செய்கின்றது.
வன்முறையையும், சாராயத்தையும் பயன்படுத்தி அப்பாவி மலையக இளைஞர்களை தவறாக வழி நடத்தி வாக்கு கொள்ளையில் ஈடுபடுகின்றது.
மலையகம் சம்பந்தமாக நாம் எது செய்தாலும், அதை தடுத்தி நிறுத்தி, மலையகத்துக்கு தாம் மாத்திரமே ஏக போக உரிமை கொண்டவர்கள் என ஊளையிடுகின்றது.
இந்த ஊளையிடும் சாராய வன்முறை சாம்ராஜயத்தை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரித்து எங்கள் வேட்பாளர்களான படித்த இளைஞர்களை, மலையகத்தின் சிந்திக்க கூடிய தொழிலாளர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், தோட்ட துறை ஊழியர்கள் ஆகியோர் முன்னின்று தெரிவு செய்ய வேண்டும்.
இதுதான் மலையகத்தையும் சர்வதேச உரிமை மீறல் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வர ஒரே வழி. இதுதான் மலையகத்தின் மறுமலர்ச்சிக்கு ஒரே வழி.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfoz.html#sthash.4lbHbFPX.dpuf

நவநீதம்பிள்ளை இலங்கையை வந்தடைந்தார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 05:18.36 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை 9.50 மணியளவில், ஜேர்மனியிலிருந்து யுஎல்558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். எமது விமான நிலைய செய்தியாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவருடன் நான்கு பிரதிநிதிகள் வருகை தந்ததாகவும் எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 7 நாட்கள் இங்கு தங்கியிருப்பதோடு வடக்குக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கையில் நிலவும் மனிதவுரிமைகளின் நிலைமைகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட அவலங்கள் பற்றி அவர் ஆராய்வதுடன், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை பெறவுள்ளார்.
அத்துடன், தமது இந்த பயணத்தின் பின்னர் அவர் பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீளக் குடியமர்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் அவதானிக்கவுள்ளார்.
 http://www.tamilwin.net/show-RUmryIRZMVgx1.html#sthash.MVkyJBBW.dpuf

Geen opmerkingen:

Een reactie posten