தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 augustus 2013

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா கூறுவது தமிழர்களுக்கு செய்த துரோகம்!- தா. பாண்டியன்!



கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும் அதை மீட்க முடியாது என்றும் இந்திய மத்திய அரசு கூறியிருப்பது தமிழக மீனவர்களுக்கு இழைத்திருக்கும் பச்சைத் துரோகம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோரி வருவதுடன் தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவும், தமிழ்நாடு அரசும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கச்சதீவு கேட்பார் அற்று கிடந்தது என்றும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக இலங்கை நாட்டிற்கு கச்சதீவு சொந்தமாகி விட்டது என்றும் கூறியுள்ளது.
இது கடும் கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு கச்சதீவு சொந்தமென்றால், இருநாடுகளும் 1974-ல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? .
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், மீன்களை பறிமுதல் செய்வதும், படகுகளை உடைப்பதும், பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதும் மீனவர்களை கைது செய்து சிறையில், அடைப்பதும், சுட்டுக்கொல்வது போன்ற வன்முறைகளை மேற்கொண்டுவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு வழங்கியுள்ளது.
கச்சதீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திட்ட மத்திய அரசின் நயவஞ்சக செயலை வன்மையாக கண்டிப்பதுடன், கச்சதீவை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழக அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க முன்வர வேண்டுகிறோம்.
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போராடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதுடன் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmp6.html#sthash.IAvXVeBa.dpuf

Geen opmerkingen:

Een reactie posten