இலங்கையை விமர்சிப்பதற்காக தாம் இலங்கைக்கு வருகை தரவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நாட்டில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவே வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் அவரது பணிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை அடுத்தே தாம் இங்கு வருகை தந்துள்ளேன்.
முன்னரே தன்னை இலங்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகும் வரை தாம் காத்திருந்தேன். நான் இலங்கையில் பல இடங்களுக்கு விஜயம் செய்ய இருக்கின்றேன். இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கையிடுவேன்.
என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை நான் முன்வைக்கப் போவதில்லை. இலங்கை உட்பட சர்வதேச நாடுகளில் மனித உரிமைகளின் தரத்தினை ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.
மேலும், தனிப்பட்ட விஜயமாக 1973ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றேன். மனித உரிமைகள் ஆணையாளராக, இது இலங்கைக்கான முதல் விஜயமாகும் என்றார்.
இன்று கொழும்பு சென்றடைந்த நவநீதம்பிள்ளை கொழும்பில் உள்ள விடுதியொன்றில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை சந்திப்பதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
: http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp6.html#sthash.o17qd34Q.dpuf
Geen opmerkingen:
Een reactie posten