தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

இரகசிய முகாம்கள் பற்றி முறையிடுவோம்!- காணாமல்போனோர் உறவினர்கள் - பரந்தனில் நாளை ஆர்ப்பாட்டம்!

வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம்!- இரா.சம்பந்தன் பேட்டி
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 01:27.34 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை.  இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அவ்வாறு வெற்றிபெற்றால்தான் தமிழ் மக்கள் ஒரு கணிசமான சுயாட்சியைப் பெற்று தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தங்களுடைய நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ விரும்புகிறார்கள் என்ற செய்தியை நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும், ஏனைய மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நாங்கள் தெளிவாக கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தேர்தல் நிலைவரம், கனடா, இங்கிலாந்து பயணம் தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் பின்வருமாறு;
கேள்வி: வட மாகாண சபைத் தேர்தலை ஐரோப்பிய நாடுகள் பலவும் நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு பலரைச் சந்தித்து உரையாடியிருந்தீர்கள். இத்தேர்தல் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு எந்தளவில் இருக்கிறது? அவர்கள் வடமாகாண சபைத் தேர்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் எவ்வாறு இருக்கின்றது?
பதில்:  நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் சென்று வந்துள்ளோம். நாங்கள் அங்கு செல்வதற்கு முக்கியமான காரணம், அந்த நாடுகளில் வாழும் எமது புலம்பெயர்ந்த மக்களைச் சந்திப்பதற்காக. அந்த இரு நாடுகளிலும் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்து வருகிறார்கள். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைகளும் அந்த நாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த கிளைகளூடாக புலம்பெயர் சமூகத்தினரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டியது.
வடமாகாண சபைத்தேர்தல் எந்தச் சூழ்நிலையில் நடைபெறுகிறது, இத்தேர்தலின் முக்கியத்துவம், இந்தத் தேர்தலின் முடிவுகளின் விளைவுகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் என்ன காரணங்களுக்காக போட்டியிட முடிவெடுத்தது, இத்தேர்தலூடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதை அடைய விரும்புகிறது, எதைத் தடுப்பதற்கு விரும்புகிறது போன்ற பல விடயங்களை அங்குள்ள புலம்பெயர் சமூகத்தினருடன் பேசி கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.
இவைகளை அவர்களுடன் பரிமாறிக் கொண்டதற்கான காரணம் என்னவென்றால், புலம்பெயர் எமது சகோதரர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் குடும்ப ரீதியாக பலவிதமான தொடர்புகள் இருக்கின்றன. குறிப்பாக கடந்தமுறை நடந்த யாழ்ப்பாணத் தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு மிகவும் குறைந்த விகிதாசாரத்திலேயே அமைந்திருந்தது. இவ்வாறான நிலைமையினால் வெற்றி பெறும் ஒரு கட்சி அந்த வெற்றியை அடைவதில் பின்னடைவை சந்திக்கிறது. வாக்களிப்பு வீதம் குறைந்தால் எமது வெற்றியும் குறைவாகவே இருக்கும்.
இந்த வடமாகாண சபைத்தேர்தலில் நாம் திடமானதொரு வெற்றியை பெறவிரும்புகிறோம். ஆகவே, மக்கள் தங்களுடைய வாக்குகளை கூடுதலான விகிதாசாரத்தில் அளிக்கவைப்பதற்கு எம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நாங்கள் செய்யவேண்டுமென்பதற்காக, புலம்பெயர்ந்த எமது தமிழ்ச் சமூகத்தை சந்தித்து தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை ஊக்குவித்து வாக்களிக்கச் செய்யவேண்டும் என்பதுதான் எம்முடைய முக்கியமான நோக்கம்.
இப்பயணத்தின் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், வடமாகாணத்தில் வாக்காளர்களாக பதியப்பட்டிருப்பவர்கள் பல்லாயிரக் கணக்கில் வடமாகாணத்துக்கு வெளியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தேர்தல் வாக்களிப்புத் தினத்தன்று தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.
அவர்களையும் ஊக்குவித்து வாக்களிப்பில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று கேட்பதற்காகவுமே நாம் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். பல புலம்பெயர் சமூகத்தினர் இச்சந்திப்புகளில் எங்களுடன் கலந்துகொண்டு நாம் கேட்ட கோரிக்கைகளுக்கு தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர். இப்பயணம் எமது நோக்கத்தைப் பொறுத்தவரை ஒரு திருப்திகரமான பயணமாக அமைந்தது.
கேள்வி: வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினரின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்: இன்றைய சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட வேண்டியது ஒரு தேவையானதாகும். அதை எவரும் எதிர்க்கவில்லை. நாம் போட்டியிடுவது மாத்திரமல்ல, ஒரு திடமான வெற்றியை பெறவேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை.
அவ்வாறு வெற்றிப் பெற்றால் தான் நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்கள் ஒரு கணிசமான சுயாட்சியைப் பெற்று தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுதந்திரமாகவும் கௌரவத்துடன் தங்களுடைய நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ விரும்புகிறார்கள் என்ற செய்தியை நாங்கள் தெளிவாக எல்லோரிடத்திலும் கொண்டு செல்ல முடியும் என்ற எம்முடைய கருத்தை அவர்கள் மத்தியில் கூறியபோது, அதனை அவர்கள் மிகவும் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டார்கள்.
எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஓரிரு சிலநாட்களில் வெளிவரும். எமது அரசியல் அபிலாஷைகள், மக்களுடைய உடனடித் தேவைகள், எமது மக்களில் பலவிதமான பிரிவினர்கள், பலவிதமான தாக்குதல்கள், குறைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை எவ்விதமான முறையில் நாம் அணுகப் போகின்றோம் என்பதைப் பற்றி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம். விசேடமாக முஸ்லிம் மக்கள் சம்பந்தமான எமது நிலைப்பாட்டை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
ஆகவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அந்தத் தேர்தல் விஞ்ஞானபத்துக்காக அந்தத் தேர்தல் விஞ்ஞானபத்தில் கூறியிருக்கின்றவ ற்றை அடைவதற்காக மக்கள் எமக்கு வாக்களிக்கின்றார்கள் என்ற செய்தியை நாங்கள் இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக் கும், ஏனைய மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் அனுப்பவேண்டிய தேவை தற்போது இருக்கிறது. அதை நாங்கள் அடைவதற்கு நீங்களும் உதவவேண்டும் என்று நாம் அவர்களிடம் கேட்டபோது, அதற்கு அவர்களின் பதில் மிகவும் ஆதரவாக இருந்தது.
கேள்வி: சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்தது தொடர்பில் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்படுகிறது?
பதில்: அமோகமான ஆதரவு அவர்களிடம் காணப்பட்டது. ஒரு திடமான வேட்பாளரை நாம் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்துள்ளோம். நாம் அங்கு சந்தித்த அனைவரும் அவரை நீங்கள் தெரிவு செய்தது ஒரு புத்திசாலித்தனமான விடயம், இவ்வாறான ஒருவர் இன்றைய சூழ்நிலையில் வடமாகாணத்துக்கு முதலமைச்சராக வரவேண்டியது அத்தியாவசியமானதொரு தேவை. அதை தாங்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொள்வதாக அவர்கள் அனைவரும் ஏகோபித்துச் சொன்னார்கள்.
கேள்வி: இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முன்வைக்கப் போகும் கோரிக்கை என்ன?
பதில்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் குழுவொன்று முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட அவரைச் சந்திக்கவிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையினால் 2 தடவைகள் (20122013) தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், தமிழ் மக்களுடைய தேவைகள், நெருக்கடிகள், அவர்களுடைய உரிமைகள், காணி தொடர்பான விடயம், இராணுவ மயமாக்கல், அரசியல் தீர்வு, கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ளவர்கள் தொடர்பாக, காணாமல் போனவர்கள் எனப் பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மேற்கூறப்பட்டவை தொடர்பாக நாம் அவருடனான சந்திப்பின்போது, எடுத்துக்கூறி, எதை நாம் எதிர்பார்க்கிறோம், இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைப் பேரவையும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறவுள்ளோம்.
கேள்வி: வடமாகாணத்தில் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்கள், அவர்களை அச்சுறுத்தும் நோக்கிலான சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறீர்கள்?
பதில்: இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யவேண்டிய இடங்களில் முறைப்பாடுகளைச் செய்து வருகிறோம். இதிலொரு முக்கியமான விடயமென்னவென்றால், இவ்வாறான தாக்குதல் நடத்துபவர்களின் நோக்கம், எமது வேட்பாளர்களை அச்சுறுத்துவது மாத்திரமல்ல, இதன்மூலம் வாக்காளர்களை வாக்களிக்காமல் செய்து வாக்குகளை குறையச் செய்வதே. இவ்வாறான தாக்குதல்களை நடத்துகிறவர்கள் அரசாங்கத் தரப்பினர் தான் என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, இவ்வாறான தாக்குதல்களை நிறுத்த வேண்டியது தேர்தல் ஆணையாளரின் கடமை.
துரதிர்ஷ்டவசமாக இன்றைய சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் ஒரு சுதந்திரமான தேர்தல் ஆணையாளரோ, சுதந்திரமான பொதுச்சேவையோ, அல்லது ஒரு பொலிஸ் சேவையோ இல்லை. இருந்தபோதிலும் கூட, இவ்விதமான தாக்குதல்கள் தொடருமாயிருந்தால் அதன் காரணமாக மக்கள் அச்சமடையலாம்அவர்கள் அச்சமடைந்தால் வாக்களிப்பு விகிதாசாரம் குறைவடையலாம். ஆகையால், இவ்வாறான சம்பவங்கள் தொடரக் கூடாது. இவை நிறுத்தப்படவேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: கூட்டமைப்பு வேட்பாளர்கள் தொடர்பில் தெற்கிலுள்ளவர்கள் பல விமர்சனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மூலம் பிரசாரப்படு த்தி வருகிறார்கள். இது தமிழ் மக்கள் மீது ஒருவித பகைமை உணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: துரதிர்ஷ்டவசமாக சிலர் அவ்வாறான கருத்துகளை கூறிவருகிறார்கள். ஆனால், நாங்கள் பெரும்பான்மையின மக்களை எதிரிகளாகப் பார்த்ததில்லை. நாங்கள் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் ஒருமித்து வாழ விரும்புகிறோம். எமது அடிப்படை உரிமைகள், நாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் கணிசமான சுயாட்சியுடன் கௌரவமாக, பாதுகாப்பாக எமது அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ்வதற்கு எமக்கும் உரிமையுண்டு. அந்த உரிமையை எவரும் மறுக்கமுடியாது என்பதே எமது நிலைப்பாடு.
ஆகையால், இவ்வாறான சம்பவங்களையிட்டு நாம் வேதனையடைகி றோம். நீங்கள் எவ்விதமாக உங்களுடைய ஜனநாயக உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துகிறீர்களோ அதேபோன்று நாங்களும் எங்களது கருத்தை எமது மக்களுக்குக் கூறி வாக்குகளைக் கேட்டு அவர்களுடைய தீர்வைபெற்று ஆட்சியாளர்களுக்கும் நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் அறிவிப்பதற்கு எமக்கும் உரித்துண்டு. அந்த உரிமையை இவ்வாறான கருத்துகளைக் கூறுவோர் மதிக்கவேண்டும். அவ்வாறு மதிக்காவிட்டால் இதுவொரு ஜனநாயக நாடு என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, இவற்றை உணர்ந்து நியாயமாக நடக்க வேண்டும்.
கேள்வி: இன்று ஒரு சில சிங்கள மிதவாதிகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று வடக்கில் கூட்டமைப்பு ஆட்சிப்பீடமேறினால் இவ்வாறான மிதவாதிகளுடன் கைகோர்த்து பணிபுரிய விரும்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக விரும்புகிறோம். சிங்கள மக்கள் மத்தியில் மிதவாதக் கருத்துகளை, கொள்கைகளைக் கொண்ட பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் கைகோர்த்து ஒருமித்து எங்களுக்காகவும் அவர்களுக்காகவும் நாட்டுக்காகவும் செயற்பட நாங்கள் என்றுமே தயங்கவும்மாட்டோம் பின்னிற்கவும்மாட்டோம்.
கேள்வி: வடக்குத் தேர்தல் ஒரு சுயாதீனமான தேர்தலாக நடைபெறுமா?
பதில்: தற்போது நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைப் பார்க்கும்போது சந்தேகமாகத்தான் இருக்கிறது. இது விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில், சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று சுதந்திரமான தேர்தலுக்கு தடை ஏற்படுமாகவிருந்தால் அதன் காரணமாக இலங்கை பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். அவ்வாறானதொரு நிலைமை அரசுக்கு ஏற்பட வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. ஆகவே, தேர்தல் ஆணையாளரிடமும் அரசிடமும் நாம் கேட்பதென்னவென்றால் ஒரு சுயாதீனமான தேர்தலாக இதை நடத்த வேண்டுமென்பதே.
கேள்வி: தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிக்கும் நிலையில், இதற்கெதிராக என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறீர்கள்?
பதில்: இது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியிருக்கிறோம். ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதாக அரசு காட்டவேண்டுமானால், இராணுவத்தினரை தேர்தல் முடியும்வரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும். இதுவே எங்களுடைய கோரிக்கை. அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.
கேள்வி: 13 ஆவது திருத்தத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமற் செய்யும் நடவடிக்கைகள் தெற்கில் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று அவ்விடயம் சற்று ஓய்ந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன?
பதில்: அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். அதை தன்னிச்சையாக ஒரு நாடு மீறமுடியாது. அவ்வாறு தன்னிச்சையாக ஒரு நாடு மீறுமாகவிருந்தால் அதன் பின்விளைவுகள் பாரியதாகவிருக்கும். அதை இலங்கை அரசு ஓரளவுக்குப் புரிந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால்தான் தற்பொழுது 13 தொடர்பில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது.
ஆனால், இந்நிலைமை தொடருமென்றோ அல்லது முடிந்து விட்டது என்றோ நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கமுடியாது. நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 தொடர்பில் எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாகக் கூறியுள்ளோம்.
கேள்வி: முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்குவது பற்றி...?
பதில்: மிகவும் வேதனைக்குரிய விடயம். இதை எவராலும் அனுமதிக்க முடியாது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இருந்தபோதும், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். நீதி அனைவருக்கும் உரித்தானது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட சில நிலைமைகள் தொடர்பாக சில தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுத்தபோது முஸ்லிம் தலைவர்கள் உண்மையான நிலைமையை உணர்ந்து செயற்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், முஸ்லிம் தலைவர்கள் அரசுக்குச் சார்பாக பல நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள். இது வேதனைக்குரிய விடயம். இருந்தபோதும், நாம் ஒரு போதும் அநீதியை அங்கீகரிக்கமாட்டோம். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றபோது பாராளுமன்றத்தில் இவற்றை எதிர்த்து நான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஏனெனில், முஸ்லிம்களும் இந்த நாட்டில் வாழ்ந்து வந்த மக்கள். தொடர்ந்து இந்த நாட்டில் வாழ்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு.
அவர்களுடைய கலை, கலாசாரம், மதத்தைப் பேணுவதற்கு அவர்களுக்கு உரித்துண்டு. அந்த உரிமை மறுக்கப்பட முடியாது. அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் எங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்வோம். அதேபோன்று முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது அவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.
கேள்வி: தெற்கிற்கு நீங்கள் கூறும் செய்தி?
பதில்: நியாயமான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சமத்துவமாக வாழக்கூடிய வகையில் இந்தநாடு முன்னேற வேண்டுமாகவிருந்தால், இந்த நாட்டு மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் அதற்குத் தேவையான தீர்வை ஏற்படுத்த வேண்டியது இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களினதும் பொறுப்பாகும். இவை தமிழ் மக்களுக்கு மட்டும் தேவையானதொன்றல்ல, சிங்கள மக்களுக்கும் தேவையானதொன்று.
ஏனென்றால், இன்று சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுவன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஆகையால், இந்த நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
இரகசிய முகாம்கள் பற்றி முறையிடுவோம்!- காணாமல்போனோர் உறவினர்கள் - பரந்தனில் நாளை ஆர்ப்பாட்டம்!
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 12:00.10 AM GMT ]
ஒருவார கால விஜயமாக இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, காணாமல்போனவர்களின் உறவினர்களை எதிர்வரும் 29ம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை 30ம் திகதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களும் சரணடைந்தவர்களில் பலரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தமக்கு முறையிட்டிருப்பதாக தமிழோசையிடம் பேசிய காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
பல ஆண்டுகளாக காணாமல்போயிருந்த பலர் முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ளதாகவும் காணாமல்போன பலர் இவ்வாறு இரகசிய முகாம்களில் இருப்பதாக உறவினர்கள் முன்வைக்கும் முறைப்பாட்டை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரிடம் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.
அரசாங்கத்திடம் அனுமதி பெற்று முகாம்களுக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பு பற்றி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா, தாம் ஏற்கனவே நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறினார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆட்கடத்தல்கள், காணாமல்போதல்கள் தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாடுகள் பற்றி 6 மாதங்களுக்கு முன்னரே தமது விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தி விட்டதாகவும் அதன் முன்னேற்றம் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் பிரதிபா மஹநாமஹேவா கூறினார்.
காணாமல் போனோர் பரந்தனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!- உறவினர்களுக்கு அழைப்பு
கடத்தப்பட்டு காணாமல் போனோர் மற்றும் போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோர் சார்பில் பரந்தனில் நாளை மறுதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பரந்தன் சந்திக்கு அண்மையில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அன்னையர் முன்னணி மற்றும் காணாமல் போனோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உறவுகளை பறி கொடுத்தவர்கள், காணாமல் போனவர்கள் உரிய ஆவணங்களுடனும் புகைப்படங்களுடனும் கலந்து கொண்டு உண்மை நிலையினை உலகிற்கு எடுத்துச் சொல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten