தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 augustus 2013

அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!



இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா மீண்டும் ஒருமுறை சத்தமேயில்லாமல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்கா அவ்வப்போது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவதும், அறிக்கைகள் வெளியிடுவதும், பொறுப்புக்கூற வலியுறுத்துவதும் வழக்கமானது தான்.
ஆனால், அத்தகைய கருத்துக்கள், கண்டனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்தின் செவிகளுக்கு ஏறியதும் இல்லை, அதை இலங்கை இராணுவம் பெரிதாக எடுத்துக் கொண்டதுமில்லை.
இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்பை நிராகரித்துள்ளது அமெரிக்கா.
இதன்மூலம் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளையும், அவற்றுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறையையும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் நடத்தும்  பசுபிக் இராணுவ முகாமைத்துவக் கருத்தரங்கில் பங்கேற்பதற்கே இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகளை நிராகரித்துள்ளது அமெரிக்கா.
அவர்களில் ஒருவர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க. அவர் இப்போது இராணுவ செயலாளராக பதவி வகிக்கிறார்.
அடுத்தவர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ். இராணுவத் தலைமையகத்தில் கட்டளையிடும் பதவியில் இருப்பவர்.
இந்தக் கருத்தரங்கிற்கு பெயர் பிரேரிக்கப்பட்டு அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரேயொருவர் வன்னிப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மட்டும் தான்.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினதும், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸினதும் பெயர்களை அமெரிக்கா நிராகரித்து விட்டதற்கு காரணம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தான்.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் பெயர் அமெரிக்காவினால் நிராகரிக்கப்படுவது இது இரண்டாவது தடவை.
ஏற்கனவே இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் மேலதிக பாதுகாப்புக் கற்கைநெறிக்காக விண்ணப்பித்த இவருக்கு அமெரிக்கா அனுமதியளிக்க மறுத்திருந்தது.
யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் போரில் ஈடுபடுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க 53வது டிவிஷனின் தளபதியாக பதவி வகித்தார் என்பதற்காகவே அப்போது நிராகரிக்கப்பட்டார்.
ஆனால் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உண்மையில் போரின் போது 53வது டிவிஷன் தளபதியாக இருந்திருக்கவில்லை.
போர் முடிந்த பின்னரே அவர் அந்தப் படைப்பிரிவுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து அரசாங்கம் அமெரிக்கத் தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது அப்போதைய தூதுவர் பற்றீசியா புரெனிஸ் அடுத்தமுறை இவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் மீண்டும் அவரை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
முன்னைய கற்கை நெறி அமெரிக்காவில் நடக்கவிருந்தது.
இப்போதைய கருத்தரங்கு நியூஸிலாந்தில் நடக்கவுள்ளது.
ஆக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு மட்டும் கதவு அடைக்கப்படவில்லை.
அமெரிக்கா நடத்தும் எந்த நிகழ்வுக்கும்அழைக்கப்படுவதில்லை என்று முடிவாகியுள்ளது.
இவர் போர் முடிந்த பின்னரே 53வது டிவிஷன் தளபதியாக பொறுப்பேற்றிருந்தார்.
அவ்வாறாயின் எதற்காக இவரை அமெரிக்கா நிராகரித்தது?
ஒன்றுக்கு இரண்டு முறை இவர் நிராகரிக்கப்பட்டுள்ளதில் இருந்து இந்த விடயத்தில் அமெரிக்கா ஏதோ சில ஆதாரங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஒன்றில் போரில் ஈடுபட்ட 53வது டிவிஷன், 57வது டிவிஷன், 58வது டிவிஷன், 59வது டிவிஷன் போன்றவற்றின் அதிகாரிகளுக்கு அவர்கள் எந்தக் காலகட்டத்தில் அவற்றில் பணியாற்றியிருந்தாலும் அனுமதி மறுக்கப்படும் கொள்கையை பின்பற்ற அமெரிக்கா முடிவு செய்திருக்கலாம்.
இத்தகையதொரு முடிவு எடுக்கப்பட்டால் சர்சசைக்குரிய குறிப்பிட்ட படைப்பிரிவுகளுக்கு மாற்றப்படுவதை எந்தவொரு இராணுவ அதிகாரியும் வெறுப்புடன் ஏற்கின்ற நிலையே உருவாகும்.
ஏனென்றால் அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிகளை விரும்பாத படை அதிகாரிகள் யாரும் இருக்கப் போவதில்லை.
அல்லது மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பெற்றிருக்க வேண்டும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்ட, சரணடைந்த புலிகளுக்குப் பொறுப்பாக புனர்வாழ்வு ஆணையாளராக முதலில் நியமிக்கப்பட்டவர் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க.
அதையடுத்து 2010ல் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டவர் தான் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க.
தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது தொடர்பான பல சம்பவங்களை அனைத்துலக மன்னிப்புச்சபை மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.
அத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையில் நிராகரிப்பு இடம்பெற்றிருந்தால் இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவும், அமெரிக்காவின் பக்கம் எட்டிப் பார்க்க முடியாது.
அடுத்து அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 57வது டிவிஷனின் தளபதியாக இறுதிப் போரின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருந்தவர்.
இறுதிப் போரில் இவரது படைப்பிரிவும் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இவரை பெரிலினுக்கான பிரதித் தூதுவராக அரசாங்கம் நியமித்த போது புலம்பெயர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புக்களும் போர்க்கொடி தூக்கின.
சுவிட்சலாந்தில் இவருக்கு எதிராக போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது அந்த நாட்டுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டவர் தான் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்.
இவரை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் இராணுவ அதிகாரிகளை அமெரிக்காவும், ஏனைய நாடுகளும் பயிற்சிக்காகவோ இராஜதந்திரிகளாகவோ ஏற்றுக் கொள்ள மறுப்பது இது தான் முதல் தடவையல்ல.
ஏற்கனவே அமெரிக்காவின் பயிற்சித் திட்டங்களில் இணைத்துக் கொள்வதற்கு 58வது டிவிஷன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, 55வது டிவிஷன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, யாழ். படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க போன்றவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஐநாவின் சிறப்புரிமையின் கீழ், ஐ.நா.வுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் அமெரிக்காவிலுள்ள பலமான, போர்க் கல்லூரிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அதுபோலவே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை தென்னாபிரிக்காவுக்கான பிரதி தூதுவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது அந்த நாடு அதை ஏற்க மறுத்து விட்டது.
பல நாடுகளில் இலங்கைப் படை அதிகாரிகள் இராஜதந்திரிகளாக பணியாற்றினாலும், பயிற்சி நெறிகளில் பங்கு பற்றினாலும், அமெரிக்காவினால் மனித உரிமை காரணம் காட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது இராணுவத்துக்கு ஏற்பட்ட அவமானம் தான்.
அமெரிக்கா சில படையணிகளின் பெயர்களை வைத்து முடிவுகளை எடுப்பதாக கூட்டுப்படைகளின் தளபதி ஜகத் ஜயசூரிய விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அமெரிக்கா தனியே படையணிகளை வைத்து எடுக்கும் முடிவாகத் தெரியவில்லை.
அவ்வாறாயின் இலங்கைப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வுகளைப் பார்க்கும் போது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா வலுவானதாகப் பார்க்கிறது போலத் தோன்றுகிறது.
இறுதிப் போரில் நடந்த குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ள தரப்புகளில் அமெரிக்காவும் ஒன்று.
இத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் அல்லது குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கூட அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கலாம்.
இந்தநிலையில் வெலிவேரியவில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்த அமைக்கப்பட்ட இராணுவ விசாரணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தான்.
வெலிவேரிய சம்பவம் குறித்து நீதியான சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய அமெரிக்கா தன்னால் நிராகரிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான குழுவின் விசாரணையை ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
சுபத்ரா
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRZMVgw5.html#sthash.rz3Q0aXw.dpuf

Geen opmerkingen:

Een reactie posten