இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் உறுதியளித்துள்ளார்.
மாநிலங்கள் அவையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா உரையாற்றும் போது,
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு பரிசீலித்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் பிரனீத் கவுர், பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது தேசிய மற்றும் சர்வதேச அம்சங்கள், நாட்டு நலன்கள் ஆகியவை கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார்.
அத்துடன், இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வலியுறுத்துமா என்று பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத், 13வது திருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten