கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு முதல் இன்று காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தி கொள்ள கூடாது- பொலிஸ்மா அதிபர்
போரில் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் பெறப்பட்டுள்ள சமாதானத்தை அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ள நேரத்தில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தி கொள்ள கூடாது என்று பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலைமை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட மேலதிக படையினர் பயன்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பலாமரச்சந்தி பகுதியில் நேற்றிரவு இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் தலையிட்டு பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலர் இந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் சிலர் மக்களை தவறாக வழி நடத்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten