தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்போதைய அரசானது கொடுங்கோல் ஆட்சி செய்து சாதனை!- அசாத் சாலி!




அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் பேச முனைந்தால் அவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகலாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீமினால் கூட இது குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,தேசிய அசாத் சாலி மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் அங்கு தொடர்ந்து  பேசுகையில்,
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்போதைய அரசானது தமது சாதனையினை பதித்துள்ளது.
எந்த அரசும் செய்யாத கொடுங்கோல் ஆட்சி இன்றும் இடம்பெறுகின்றது.
குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு தாக்குதல்களை இடம்பெறுகின்றன.
அண்மையில் வெலிவேரியவில் தண்ணீர் கேட்ட மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களுக்கு துப்பாக்கிக் குண்டுகளினால் பதில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட போதும், வீடியோ காட்சிகள் சீசீடிவி கமரா மூலம் பதிவு செய்யப்பட்டு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட போதும், அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதை காணமுடிகின்றது.
இராவண பலய, சிங்கள ராவய, பொதுபல சேனா போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.
இந்த நாட்டில் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆணையினை வழங்கக் கூடியவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மட்டுமே.
ஆனால் ஞானசார தேரர் இப்போது கட்டளை பிறப்பித்துள்ளார். அப்படியாயின் இதனது மர்மம் என்னவென்று புரிந்து கொள்ளமுடிகின்றது.
அதேபோன்று கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசு வழங்கிய வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்கக் கூடாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதெல்லாம் இனவாதிகளின் செயற்பாடு என்பதை மறந்துவிட முடியாது.
அண்மையில் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஆதரங்களுடன் ஒப்படைக்கப்பட்ட சாட்சிகள் குறித்து இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்பிரதேசத்தைச் சாராத சிலர் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பொலிஸாரின் பாதுகாப்பிலேயே அதனைச் செய்துள்ளனர் என்பதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைத் தொடரவிடாது செய்வதற்கு மாகாண ஆட்சி மாற்றமொன்றினை வடமேல் மாகாணத்தில் செய்ய வேண்டும் என்றும் அசாத் சாலி கூறினார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRYMVgu2.html#sthash.JdpUB6rH.dpuf

Geen opmerkingen:

Een reactie posten