படத்தைப் பார்த்தவர்கள், “படத்தில் கூறப்பட்ட விஷயங்கள், மற்றும் சம்பவங்கள் பச்சைப் பொய். படத்தை தடைசெய்தே தீரவேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில், ஈழ விடுதலை இயக்கத்துக்குள் ஊடுருவும் ‘ரா’ உளவுத்துறை ஏஜென்ட்டாக நடிக்கிறார், ஜான் ஏபிரஹாம். கதையின்படி, இவர் இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் அங்கு செல்கிறார். தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல், ஈழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்போது அங்கே யுத்த முனையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் (நர்கீஸ் ஃபக்ஹ்ரி) ஒருவரை சந்திக்கிறார். அவர் மூலமாக ஈழ விடுதலை யுத்தத்தின் பல பின்னணிகளை தெரிந்து கொள்கிறார் என்று போகிறது கதை. பெண் செய்தியாளரின் கேரக்டர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு பேட்டிகண்ட இந்திய பெண் செய்தியாளர் அனிதா பிரதாப்பை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டதாம்.
டைரக்டர் ஆர்.கே செல்வமணி, “மெட்ராஸ் கஃபே திரைப்படம் ராஜபக்ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியுள்ளார். ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்று படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே செல்வமணி. இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றி படத்தில் ஏன் காட்டவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், “அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த இரா. இளமுருகன், “ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது அவதூறை வாரி இறைத்து இருக்கிறார்கள். காசி ஆனந்தனும் நேரடியாக கொச்சைப்படுத்தபட்டிருக்கிறார்” என்கிறார்.
ஜி.கணேஷ் என்பவர், “சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம், நிறை எழுத இருக்கிறது. படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது. புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையவே கிடையாது” என்று கூறியுள்ளார். இவ்வாறாக தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள் இப் படத்துக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இதுவரை அதிமுக கட்சியினர் மட்டுமே வாயைத் திறக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten