தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 augustus 2013

செவ்வாயன்று வட பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம் செய்வார்!- அமைச்சர் வாசுவை சந்திக்க உள்ளார்!

நாளை கொழும்பு வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை செவ்வாய்க்கிழமை வட பகுதிக்கு விஜயம் செய்கின்றார்.
தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திப்பதுடன் சனிக்கிழமை காலை ஏற்பாடாகியுள்ள ஊடகவியலாளர் சந்திப்பினை அடுத்து இலங்கையிலிருந்து வெளியேறுவார்.
இலங்கையுடனான மனித உரிமைகள் விவகாரம், சமகால நிலைவரங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதென்ற நிகழ்ச்சி நிரலின் கீழேயே அவர் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை வரும் அவர் அன்றைய தினம் எந்தவொரு உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் ஈடுபடமாட்டார்.
மறுநாள் 26ம் திகதி திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரலின்படி மூன்று சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
அதில் முதலாவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை சந்தித்ததன் பின்னர், அடுத்ததாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனும் அதற்கடுத்ததாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான வாசுதேவ நாணயக்காரவுடனும் சந்திப்புக்கள் இடம்பெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
26ம் திகதி திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்ய விருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் தற்போது நிகழ்ச்சி நிரலின் மாற்றத்திற்கமைய மறுநாள் 27ம் திகதி செவ்வாய்க்கிழமையே அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார்.
அங்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ்.மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை சந்தித்ததன் பின்னர் அன்று மாலை குடாநாட்டின் மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சி செல்லும் அவர் அங்கு மீள்குடியேற்ற நிலைமைகளை அவதானிக்கவிருப்பதுடன் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
மறுநாள் 28ம் திகதி புதன்கிழமை திருகோணமலை, மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் நவநீதம்பிள்ளை அங்கு அரச அதிபர்களுடனான சந்திப்புக்களில் கலந்து கொள்வதுடன் மேலும் பல விடயங்களை ஆராய்வார்.
வியாழக்கிழமை காலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இதன் பின்னர் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ள நவநீதம்பிள்ளை அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்ததன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதனையடுத்து இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர்களுடனான சந்திப்புக்கள் மற்றும் வடக்கின் நிலைமைகள் ஆராய்வுகள் என அவரது நிகழ்ச்சி நிரல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் இறுதியாக எதிர்வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ள உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.
நவி.பிள்ளை அமைச்சர் வாசுவை சந்திக்க உள்ளார்
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சந்திக்க உள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவை சந்தித்திக்கும் தேவை இருப்பதாக மனித உரிமை ஆணையாளர் அறிவித்திருந்தாகவும் இதனடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
கொழும்பு ராஜகிரியவில் இருக்கும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் எதிர்வரும் 26ம் திகதி நவநீதம்பிள்ளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை சந்திக்க உள்ளார்.
அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிறந்த ஆய்வு திறனும், பட்டறிவும் கொண்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்பதால் வாசுதேவ நாணயக்காரவை சந்திக்க, நவநீதம்பிள்ளை தீர்மானித்திருக்கலாம் என அமைச்சு கூறியது.
 http://www.tamilwin.net/show-RUmryIRYMVgt0.html#sthash.bwrV2ogT.dpuf

Geen opmerkingen:

Een reactie posten