தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் நேற்று நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் தமது அறிக்கையினை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து தற்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாக எதிர்க்கட்சியினரால் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றி நீதிமன்றத்திற்கு கருத்து தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெலிவேரியவில் பொதுமக்கள் சுத்தமான குடிநீர் கேட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை மேலதிக நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தக் கூடாது என்று அதன்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவே ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம் பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதில் ஜனநாய முக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன், ரி.என்.ஏ. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும் பங்கு கொண்டிருந்தனர்.
நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
'வடக்கிலும் சுட்டுக் கொன்றனர் தெற்கிலும் சுடுகின்றனர்". 'இந்த அரசாங்கத்துக்கு இடமளிக்கக் கூடாது" , 'அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவோம்" , 'அரச தலைவர்களே கொலைகாரர்கள்" 'தண்ணீர் கேட்ட மக்களை சுட்டுக் கொல்வதா ஜனநாயகம்"என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வெலிவேரிய பகுதி மக்களும் கலந்துகொண்டனர். வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவரது புகைப்படங்களும் ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே வைக்கப்பட்டு பலியானவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று மனுவொன்றினை கையளிக்கவும் முயற்சித்தார்கள்.
எனினும் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் பொலிஸார் அவர்களுக்கு தடை விதித்தனர்.
இருந்த போதிலும் எதிர்கட்சிகளின் சில உறுப்பினர்கள் மாத்திரம் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மனுவை கையளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten