தொண்டைமானாறு செல்வச்சன்னதி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வலி. கிழக்கு மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றினால் கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் அரசாங்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக த.தே கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பருத்தித்துறை நகரசபை தலைவர் மற்றும், வலி,கிழக்கு பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் இன்று கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றனர்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
கடந்த 60 வருடங்களாக மேற்படி பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் மக்கள் பயனடைகின்றார்கள். ஆனால் இந்த முறை பாலம் அமைக்க முயற்சித்த போது வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் ஆகியோருடன், ஈ.பி.டி.பி ஐங்கரன் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் தடைபோட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தினசரி 3 கிலோ மீற்றர்கள் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்திருக்கின்றார்கள். எனவே நாம் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம்.
மேலும் ஈ.பி.டி.பி கட்சியினர் மற்றும் அவர்களுடன் தங்கள் குறுகிய இலாபங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வலி,கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்டவர்கள் மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதேபோன்று பாலம் அமைப்பதற்கு தடை விதிப்பதற்கான காரணத்தையும் அதிகாரிகள் புலப்படுத்த வேண்டும்.
எனினும் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி பாலம் அமைக்கப்படும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten