தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

முல்லைத்தீவில் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை கையளிக்குமாறு அரச அதிபருக்கு மகஜர் கையளிக்க ஏற்பாடு !

முல்லைத்தீவு- எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நிலத்திற்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது நிலங்களுக்குச் செல்ல முடியாமல் விரட்டியடிக்கப்படுவதைக் கண்டித்தும், நிலங்களை மீள வழங்க வலியுறுத்தியும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கவுள்ளனர்.
1983ம் ஆண்டு மேற்குறித்த எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலைகளினால் இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் வேறிடங்களில் வாழ்ந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மீளவும் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த மக்களுடைய விவசாய நிலங்கள் அமைந்திருந்த, முந்திரியக்குளம், எரிந்தகாடு, ஆமையன்குளம், சின்னக்குளம் ஆகிய பிரதேசங்கள் முழுமையாக சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டு சிங்கள மக்களால் தமிழர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் மக்கள் கடந்த வாரம் தமது விவசாய நிலங்களுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்குவந்த இனந்தெரியாத நபர்களினால் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிங்கள மக்களால் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும், தமிழ் மக்களுடைய நிலங்களை மீளவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக் கேணி மக்கள் இன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவிருந்தனர்.
எனினும் இதனை முன்னதாக அறிந்து கொண்ட படையினரும், பொலிஸாரும் வடக்கு மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென மக்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று காலை கையளிக்கவுள்ளதாகவும், தீர்வு மிக குறுகிய காலத்திற்குள் பெறப்படாவிட்டால் மீளவும் மக்கள் ஒன்றிணைந்த போராட்டங்களை நடத்த தீர்மானித்திருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten