வெலிவேரிய, ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நூறு இராணுவத்தினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.ஆர்.எல்.ரணவீர, கம்பஹா பிரதான மஜிஸ்ரேட் நீதிமன்றில் இன்று தெரிவித்தார்.
அத்துடன், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சம்பவ தினத்தன்று இராணுவத்தின் 93 பேர் பயன்படுத்திய துப்பாக்கிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பவ தினத்தன்று ஊடக நிறுவனங்கள் பதிவு செய்த வீடியோ ஒளிப்பதிவுகள், புகைப்படங்களின் உதவியுடன் சந்தேகநபர்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த முதலாம் திகதி சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வெல கிராம வாசிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 43பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten