மத்தள சர்வதேச விமான நிலைய சேவையை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை! சீனாவிடம் 900 கோடி கடன்!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 05:16.55 AM GMT ]
அம்பாந்தோட்டை, மத்தள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்டணங்களை குறைத்துள்ளது.
இதேவேளை எமிரேட்ஸ், கல்ப் எயார் போன்ற வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களின் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கவும் அங்கு நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்களையும் அரசாங்கம் 50 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதனைத் தவிர, விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலமும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளிநாட்டு விமானங்களிடம் அறவிடப்பட்ட கட்டணங்களில் 50 வீதம் சலுகையளிக்கப்பட்டது. இதற்கிணங்க, இந்தக் கட்டண சலுகையை தொடர்ந்தும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விமான நிலையத்தை, விமானங்களை பழுது பார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மத்தள விமான நிலையத்திற்காக அரசாங்கம் சீனாவிடம் மேலும் 900 கோடி ரூபாவை கடனாக பெறவுள்ளது - ரவி கருணாநாயக்க
பயணிகள் செல்லாத, விமான இறங்காத மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்காக 900 கோடி ரூபாவை சீனாவிடம் இருந்து கடனாக பெற்று கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாவை ஒதுக்கியது. அந்த பணத்தை பயன்படுத்தி விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து, அதனை பயன்பாட்டுக்கு விட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த பெரும் தொகை பணத்தை மீண்டும் கடனாக பெற திட்டமிட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, அரசாங்கம் சீனாவிடம் இருந்து இந்த கடனை பெற திட்டமிடவில்லை. இது பற்றி அரசாங்கத்திடம் கேட்டால், நிர்மாணிப்பு பணிகளுக்காக செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்துவதற்காக இந்த கடன் பெறப்பட உள்ளதாக கூறுகிறது.
இவ்விதமாக மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை விட மேலும் 900 கோடி ரூபாவை கடனாக பெறுவதன் மூலம் மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க பெறப்பட்ட வெளிநாட்டு கடன் 90 சத வீததத்தையும் தாண்டும் என்றார்.
சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: ஐக்கிய சக்தி அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 06:35.39 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அரசியல் கட்சிகள், சர்வமத அமைப்புகள், சிவில் அமைப்பு, வெகுஜன அமைப்புகள் என பல சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஐக்கிய சக்தி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அமைப்பு நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் முதலாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ளது.
மனித உயிர்களை மதிக்காது, நிராயுத பணிகளான மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்து, சர்வாதிகார இராணுவ ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்பி வரும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை மதிக்கும் அனைவரும் கறுப்பு ஆடைகளை அணிந்து அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொலைகார ஆட்சியில் இருந்து மீள வேண்டுமாயின் மக்கள் ஒரே பாதையில் ஐக்கியமாக ஒன்றிணைய வேண்டும். இதன் மூலமே அதனை செய்ய முடியும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten