தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 augustus 2013

நவி.பிள்ளையின் யாழ். வருகை: காணாமல்போன உறவுகளின் ஒன்றியம் போராட்டம் நடத்த தீர்மானம்

இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர நவநீதம்பிள்ளைக்கு அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 01:57.58 AM GMT ]
இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும்.
இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் உண்மை நிலைமையை அறிய அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் இங்குள்ள உண்மை நிலை தொடர்பாக நியாயமான கருத்தை அவர் வெளியிடுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-
ஐ. நா. உயர் பதவி வகிக்கும் தலைவியான நவநீதம்பிள்ளைக்கு இலங்கை வருகை தருமாறு 2 வருடங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவர் இங்கு வருகை தருகிறார்.
இவருக்கு முன்னர் இருந்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் லுயிஸ் ஆபர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் வரும் முன்னரும் இலங்கை குறித்து பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவர் இலங்கையை விட்டும் செல்கையில் உண்மை நிலையை வெளிப்படையாக குறிப்பிட்டார்.
எமது அழைப்பை ஏற்று நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்ததை வரவேற்கிறோம்.
யாழ்ப்பாணமோ, வெலிவேரியாவோ எப்பகுதிக்கும் நேரில் சென்று வர அவருக்கு தடை கிடையாது. நாட்டின் உண்மை நிலையை நேரில் காண வருகை தந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
அவர் தனது விஜயம் முடிவடைந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் நேரில் கண்ட விடயங்கள் தொடர்பில் உண்மை நிலையை நியாயமாக வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.
நவி.பிள்ளையின் யாழ். வருகை: காணாமல்போன உறவுகளின் ஒன்றியம் போராட்டம் நடத்த தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 02:13.07 AM GMT ]
ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 27ம் திகதி வருகைதரவுள்ள நிலையில் ஐ.நாடுகள் சபையின் யாழ்.அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக காணாமல்போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமும் காணாமல்போன உறவுகள் எங்கிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது, என வெளிப்படுத்த வலியுறுத்தியும், யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்,
நில ஆக்கிரமிப்பு மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனக்கோரியும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் 27ம் திகதி காலை 9மணி தொடக்கம் 11மணிவரையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்.வலிகாமம் வடக்கு மற்றும் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல்போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறவுள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் மனிதவுரிமைகள் ஆணையாளரை 15பேர் கொண்ட குழுவினர் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
அதன்போது 13அம்சக் கோரிக்கையடங்கிய மகஜர் கையளிக்கப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுவதுடன், மகஜர் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் போராட்டத்திற்கு மனிதவுரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புக்கள், மற்றும் சமுக அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 50 பேர் கொண்ட குழுவினர் கொழும்பு சென்று அங்கும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten