தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

மலேசியாவில் கைதாகிய கே.பிக்கு கோத்தபாயவின் வீடு சென்றதும் மரண பயமில்லாமல் போனது: அனுரகுமார!

கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை?
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 11:43.01 AM GMT ]
கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இரகசிய கூட்டமொன்றில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 13வது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் அரசாங்கத்தின் நகர்வுக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவ்வாறான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டால் அரசாங்கம் 13 வாக்குகளை மாத்திரமே பெறும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கல்முனை பிரதான வீதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் நகர்வு தொடர்பில் தனது ஏமாற்றத்தை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் மிகப் பலமிக்க அதிக பிரதிநிதித்துவமும் கொண்ட முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அத்தகைய தெரிவுக்குழுவினால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் குப்பைக் கூடையினுள் வீசப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
13வது திருத்தத்தில் மாற்றம் செய்யவதற்கு எதிராக கிழக்கில் விமர்சனங்கள் அதிகரித்து வருவதாகவும் கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மாகாண சபையை கலைத்து விட்டு மாகாணத்தின் நிருவாகத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்களும், 13வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கு 07 ஆசனங்களும், அந்த சட்டத்தை ஆதரிக்கும் பிள்ளையானும் 2 ஆசனங்களும் உள்ளன.
இதனால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடையும் என கருதப்படுகிறது. 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 24 வாக்குகள் கிடைக்கும் என்பதால் அதற்கு முன்னர் மாகாண சபையை கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரச தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் கைதாகிய கே.பிக்கு கோத்தபாயவின் வீடு சென்றதும் மரண பயமில்லாமல் போனது: அனுரகுமார
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 09:42.17 AM GMT ]
இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நான்கு வருடங்கள் கழிந்துள்ள போதும் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களை வெல்ல இந்த அரசாங்கத்திற்கு முடியாது போயுள்ளது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அந்த மக்களின் துயரங்களுக்கு அரசாங்கம் செவிகொடுக்காததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாத்தறை உட்பட சில பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பேசும் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பில் இருக்கும் சிங்கள அரசு தமிழ் மக்களை கவனிப்பதில்லை என்பதால் பிரபாகரன் அன்று தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கினார்.
தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்றும் நாம் தற்கொலை செய்து கொண்டாவது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பிரபாகரன் வடக்கு மக்களிடம் தெரிவித்திருந்தார்.
இதனை சிலர் ஏற்று கொண்டிருந்தனர். சிலர் ஏற்கவில்லை. இந்த நிலையில் போர் முடிவடைந்த பின்னர் கூட அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில்லை தவறியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால், அந்த மக்கள் கொழும்பு அரசினால் தமக்கு எந்த பயனுமில்லை என்று கருதுகின்றனர்.  கடந்த நான்கு வருடங்களில் அரசு தனது பணிகளை சரியாக செய்யவில்லை. போர் முடிந்ததுடன் இராணுவத்தினரை முகாம்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
இராணுவம் தொடர்பில் தென்பகுதியில் இருப்பவர்களின் மன நிலை, வடபகுதி மக்களுக்கு இல்லை. தமது மக்களை கொண்டு, தமது சொத்துக்களை அழித்தவர்கள் என்றே அவர்கள் இராணுவத்தினரை காண்கின்றனர்.
இதனால் இராணுவத்தை சிவில் பணிகளில் இருந்து நிறுத்தி விட்டு, முகாம்களில் மட்டும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
நந்திக்கடல் பிரதேசம் போருக்கு பின்னர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருக்கவில்லை. ஆனால் தற்போது அந்த பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதி மக்கள் தற்போது தமது அன்றாடப் பணிகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தமது கிராமத்தில் மரண நிவாராண சங்கத்தைக் கூட ஏற்படுத்தி கொள்ளும் இடமளிக்கப்படுவதில்லை.
போர் முடிந்த போதும், வட பகுதி மக்கள் எவ்விதமான சுதந்திரமும் இன்றியே வாழ்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர்களாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.பி. என்பவர் பிரபாகரனுக்கு பின்னர் தலைவராக இருந்தவர். அவர்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வெடி மருந்துக்களை கொண்டு வந்தவர்.
புலிகள் அமைப்பு, இலங்கையில் வெடிக்க வைத்த குண்டுகள், பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டக்கள் என அனைத்தையும் கே.பியே இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்து வந்த பின்னர் நேரடியாக கோத்தபாயவின் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டார். மரண பயத்தில் கோத்தபாயவின் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து திரும்பும் போது எந்த அச்சமும் இல்லாதவராக வெளியேறினார்.
கே.பியிடம் எத்தனை கப்பல்கள் இருக்கின்றன? வங்கிகளில் எவ்வளவு பயணம் இருக்கின்றது?. எனக்கு எவ்வளவு பயணத்தை தர போகிறீர் என்று கேட்டதும் கே.பிக்கு பயம் இல்லாமல் போய்விட்டது.
தமிழ் மக்கள் இவை குறித்து என்ன நினைப்பார்கள்?. கே.பி மற்றும் தயா மாஸ்டர் போன்றவர்களை ஒருவிதமாக நடத்தும் அரசு, தமிழ் மக்களை வேறுவிதமாக நடத்துகிறது. தயா மாஸ்டர் இன்று வெளியில் இருக்கின்றார்.
விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க குற்றத்திற்காக சிறையில் இருப்பதாக வெலிக்கடையில் இருக்கும் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர்.
அடையாள அட்டையில் கையெழுத்திட்ட தயா மாஸ்டர் வெளியில் இருக்கின்றார். அதனை வைத்திருந்த இளைஞர்கள் உள்ளே இருக்கின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten