தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

கச்சதீவை தாரைவார்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு சதி: மனோ கணேசன்

ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்காக சுவரொட்டியை ஒட்டும் படையினர்!- ஐ.தே.க
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 08:39.05 AM GMT ]
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுவரொட்டிகளை ஒட்டும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
குறிப்பாக மத்திய மாகாணத்தில் இதனை காணக் கூடியதாக உள்ளது. இதனால் வட மாகாண சபை தேர்தல் எப்படி நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாதுள்ளது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம் சென்ற போது ஆயுதம் தாங்கிய குழு அவருக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிர்நோக்கியுள்ளது.
இவ்வாறான சம்பவம் தொடர்பில் 17ம் திருத்தச் சட்டம் இருந்த போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடிந்தது.
ஆனால் 18 வவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருப்பதால் முறைப்பாடு செய்தும் எந்த பயனுமில்லை.
இதன் காரணமாகவே, ஐக்கிய தேசியக்கட்சி 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது.
17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக 18வது திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து, அனைத்து அரச நிறுவனங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.
2ம் இணைப்பு
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்களின் போது, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் அரசாங்கத்தின் வன்முறைகள், ஊழல், மோசடிகளை எதிர்கொள்ள சகல மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்க நேரிடும் சகல சம்பவங்களின் போது, நீதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக கண்டி மாவட்டத்தில் மட்டும். 100 சட்டத்தரணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்விதமான அச்சமும், சந்தேகமுமின்றி, அரசாங்கத்திற்கு எதிராக மத்திய மாகாண தேர்தலில், கண்டி மாவட்ட மக்கள் வீதியில் இறங்கி தமது அரசியல் நோக்கங்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் போராட முடியும்.
இந்த சட்டத்தரணிகள் குழு ஐக்கிய தேசியக் கட்சியினருக்காக 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம்,
13ம் திருத்தம் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதனையும் தெரிவிக்காது மௌனம் காத்து வருகின்றனர்.
எங்களை புலிகள் என முத்திரை குத்தும் அரசாங்கம், அதேவேளை, புலிகள் அமைப்பில் இருந்தவர்களை ஆளும் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட வைக்க தயாராவதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

கச்சதீவை தாரைவார்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு சதி: மனோ கணேசன்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 08:46.09 AM GMT ]
கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து, அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு 13ம் திருத்தத்தை அடியோடு அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெற்றுவருவதாக நநாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் உரையாற்றியபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தங்களை கிழித்தாலும், ஒழித்தாலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்வது என்பது இன்று இந்தியாவையும் தாண்டிய சர்வதேச பிரச்சினையாகி விட்டது என்பதை நான் அரசுக்கு உறுதியுடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
கச்சதீவு தொடர்பாக இன்று இந்திய உயர் நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை படைகளின் தொல்லையில் இருந்து மீட்பதற்கு ஒரே வழி, கச்சதீவை மீட்பதுதான் என்று தமிழகத்தில் இன்று கருத்து உருவாகி வருகின்றது.
கச்சதீவை இந்திய மத்திய அரசு மீளப்பெறுமானால் அதை காரணமாக காட்டி, 1987ல் செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது. அதன்மூலம் 13ம் திருத்தத்துக்கு முழுமையாக முடிவு காணாலாம் என அரசுக்குள் உள்ள இனவாத பிரிவு நினைக்கின்றது.
ஆனால், இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பது இந்த இனவாதிகள் உணர வேண்டும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்.
அதேபோல், இலங்கையில் மலையகத்திலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளையும், தமிழக மக்களின் அபிலாஷைகளையும் கணக்கில் எடுக்காமல், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களை திருப்தி படுத்துவதற்காக தன்னிச்சையாக ஒப்பந்தங்களை செய்து வந்த தவறுகளை இந்திய மத்திய அரசு உணர வேண்டும்.
சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம் முதல் இன்று வரை இந்திய மத்திய அரசு, இலங்கை அரசாங்கங்களை சந்தோசப்படுத்த எடுத்த எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இது இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசு மீண்டும், மீண்டும் கற்று கொடுத்து வரும் பாடம்.
வீரவன்சவுக்கு, மாவை சேனாதிராசா மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் 13ம் திருத்தத்தில் இருக்கின்ற அரைக்குறை அதிகாரங்களையும் வெட்டி குறைக்க விமல் வீரவன்ச போன்றோர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
13ம் திருத்தத்தில் அதிகாரங்களை அகற்றாவிட்டால், அரசில் இருந்து அகன்றுவிடுவேன் என தான் சொன்னது இன்று இந்த மனிதருக்கு மறந்து விட்டது. இப்போது இவர் திடீர் என மாவை சேனாதிராசா மீது பாசம் கொண்டு கதை பேசுகின்றார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவையை ஒதுக்கிவிட்டு, எங்கோ வழக்கு பேசிகொண்டிருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளாக நியமித்தது நியாயமா என இவர் இன்று ஊடகங்களுக்கு முன்னால் வந்து கண்ணீர் வடிக்கிறார்.
அண்ணன் மாவையை நினைத்து தம்பி வீரவன்ச அழுவதாக சொல்கிறார். தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார், முதல்வர் வேட்பாளர் யார் என்பவைகளை கூட்டமைப்புதான் முடிவு செய்ய முடியும். அத்துடன் மாவை சேனாதிராசா முன்வந்து விக்கினேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியும் விட்டார். ஆனால், வீரவன்சவின் முதலை கண்ணீர் நிற்கவில்லை.இவர்தான் சில நாட்களுக்கு முன் மாவை சேனாதிராசாவை கடுமையாக தாக்கி பேசினார்.
பிரிவினைவாத, பயங்கரவாத கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை தடை செய்ய வேண்டும் என சொன்னார். அந்த கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராசாவை நாடு கடத்த வேண்டும் எனவும் சொன்னார். இந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் அரசியலில் சர்க்கஸ் கோமாளிகள். இத்தகைய கோமாளிகள் இன்று நிறைய இருக்கின்றார்கள். தாம் அன்று என்ன சொன்னோம், இன்று என்ன சொல்கிறோம் என்பது இவர்களுக்கு மறந்து போய் விடுகிறது.
இந்த கோமாளிகளை பார்த்து, என்றும் நேர்வழியில் பயணிக்கும் நாம் இன்று சிரித்து மகிழ்கின்றோம். நம்முடன் சேர்ந்து நாட்டு மக்களும் கைகொட்டி சிரித்து மகிழ்கிறார்கள். அவுஸ்திரேலிய படகு பயணம்நம் நாட்டு மக்கள் நாட்டை விட்டு ஓடுவதும், ஓடி கடலில் மூழ்குவதும் இன்று இந்த நாட்டு அரசாங்கத்துக்கு பெரிய விடயமாக தெரியவில்லை.
அவுஸ்திரேலியா செல்கிறோம் என சொல்லிக்கொண்டு கணிசமான இலங்கை குடிமக்கள் படகுகளில் செல்வதை நாம் கடுமையாக எதிர்த்து கண்டிக்கின்றோம். கிறிஸ்மஸ் தீவு பகுதியை சென்று அடைபவர்களைதான் நாம் கணக்கில் எடுக்கின்றோம். இன்னும் கணிசமானோர் போகும் வழியிலேயே கடலில் மூழ்கி விடுகின்றனர் என நான் சந்தேகிக்கின்றேன்.
இவர்கள் இந்த நாட்டு மக்கள். இவர்களை தடுத்து நிறுத்த இந்த நாட்டு கடற்படை முழு மனதுடன் செயற்படுகின்றதா என நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். சிலரை போகவிட்டு, சிலரை மட்டும் தடுத்து நிறுத்துகின்றீர்களா? என நான் கேட்க விரும்புகின்றேன். அல்லது போகின்றவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அப்படியாவது தமிழ் மக்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் குறைய வேண்டும் என அரசாங்கம் சும்மா இருக்கின்றதா?
படகில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா போவதை நிறுத்துங்கள் என இங்கிருந்து இன்று நாட்டை விட்டு ஓடுகின்றவர்களை நான் கேட்டு கொள்கின்றேன். இன்று நாட்டில் நிலைமை முற்றிலும் சீராகவில்லை. ஆனால் நாம் இங்கே இருந்து இன்று ஜனநாயகரீதியாக போராட வேண்டும். அதைவிடுத்து சட்டவிரோத படகு பயணம் வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

Geen opmerkingen:

Een reactie posten