இயல்பாகவே போர்க்குணமும் துருதுருப்பும் மிகுந்த ஜெகனை இந்த மாற்றங்கள் இலகுவில் பற்றிக்கொள்கின்றன.தங்கண்ணாவின் வீட்டுக்கு அருகாகவே ஜெகனின் வீடும் அமைந்திருந்ததால் ஜெகன் தங்கண்ணாவுடன் அவரின் ஆயுதப் போராட்ட அமைப்பில் இணைந்து கொள்கிறார்.
ஜெகனைப்பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக அவரின் அன்புக்குரியவர், அவரின் போராட்டக்கால தோழர்கள் என்று அனைவரிடமும் கதைத்தபோது அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில் “ஜெகன் பயம் என்பதே இல்லாத ஒரு வீரன்” என்பதே ஆகும்.
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தமிழீழத்தில் முளைவிடத் தொடங்கிய 70களின் ஆரம்பத்திலேயே அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் ஜெகன். மிக இளைய வயதிலேயே அந்த நேரத்தில் இதில் இணைந்திருந்தார். அதில் ஒரு செயற்பாட்டில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தகாலத்திலேயே சிறைக்குள்ளே இருந்தே ஜி.சி.ஈ (ஓ.எல்) பரீட்சைக்கு தொற்றி அதில் சிறப்புசித்திகளும் எடுத்திருந்தார்.
ஜெகனின் போராட்ட வாழ்வு முழுதும் துணிகரமான செயல்களும் அர்ப்பண உணர்வுமே மேலோங்கி இருந்ததை அறியமுடிகிறது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான பாதையின் முதற்கட்ட வேலைத்திட்டங்களான சிங்கள அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாகவும் தகவல் கொடுப்பவர்களாகவும் விளங்கிய தமிழர்களின்மீதான தாக்குதல்கள் அனைத்திலும் ஜெகனின் பங்களிப்பு அந்தநேரத்தில் அமைந்திருந்தது.
வெறும் கைத்துப்பாக்கிகளும் வேட்டைத் துப்பாக்கிகளும் உள்ளுர்த் தயாரிப்புகளான வெடிகுண்டுகளுமே போராளிகளின் ஆயுதங்களாக இந்த அந்த காலகட்டத்திலேயே சிங்கள தேசத்தின் பொருளாதார கேந்திரங்களுககெதிரான தாக்குதல்களை சிந்தித்தும் அதனை தனது ஏனைய தோழர்களிடம் சொல்லிக் கொண்டும் இருந்தவர் ஜெகன்.
ஒருமுறை 70களின் இறுதியில் சிங்கள அரசாங்ககட்சியின் யாழ். மாவட்ட பொறுப்பாளரான கணேசலிங்கத்துக்கெதிரான தாக்குதல் முயற்சி ஒன்று அவரின் வீடு இருந்த பருத்தித்துறை ஓராம்கட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.
சிங்களகாவல் துறையின் பாதுகாப்பு எந்தநேரமும் அவரின் வீட்டுக்கும் அவருக்கும் இருந்திருந்த நேரம் அது. ஜெகனும் ஒருசில போராளிகளும் அந்த நடவடிக்கைக்காக சென்றிருந்தனர். யாழ். மாவட்ட ஐதேக கட்சியின் பொறுப்பாளரின் வீடு இரட்டைத் தளத்தை கொண்டிருந்தது. அதன்மேல் தளத்தில் எந்தநேரமும் சிங்களகாவல் துறையினர் துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் நின்றிருந்தனர்.
தாக்குதலுக்காக சென்றிருந்த போராளிகளிடம் வேட்டைத்துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளுமே இருந்திருந்தன. ஜெகனிடம் இரட்டைக்குழல் வேட்டைத் துப்பாக்கி இருந்தது. நெஞ்சு நிறைந்த துணிச்சலும் வென்றாக வேண்டும் விடுதலையை என்ற வெஞ்சினமும் வேட்கையும் மட்டுமே துணையாக இருந்தது.
தாக்குதல் தொடங்கியது. இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்த இரண்டு தோட்டாக்களும் பாவித்து வெளியேறிவிட்டன. மறுபடியும் நிரப்பிய பின்னரே சுடமுடியும். தோட்டாக்கள் நிரப்ப உதவியாக இருந்தவர் மேலிருந்து சிங்கள காவல்படை சுடுவதை கண்டதும் சுவருக்கு மறுபக்கம் சென்று “கவர்” எடுத்துவிட்டார். தொடர்ச்சியாக மேலிருந்து சிங்கள காவல்படையின் சூடுகள் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில்தான் ஜெகனின் ஒப்பற்றதுணிவு வெளிப்பட்டது. தோட்டாக்கள் இல்லாத வெறும் இரட்டைக்குழல் துப்பாக்கியை நீட்டியபடி சத்தமிட்டுக் கொண்டு யாழ். மாவட்ட ஐதேக அமைப்பாளரின் வீட்டு கேற்றை உதைத்து தள்ளிபடி உள்நுழைந்தார். மேலே இருந்து சுட்டுக் கொண்டீரந்த சிங்கள காவல்படையினர் இதனை கண்டதும் அலறிபடியே மறுபக்கத்தால்கீழே குதித்து தப்பி ஓடினர்.
இப்படி ஜெகனின் போராட்டவாழ்வு முழுதும் நிதானமான வீரமும், அளவுகடந்த போர்க்குணமும்,அதீத துணிச்சலும், எந்த நேரமும் அர்ப்பணத்துக்கு தயாரான மனோநிலையுமே நிறைந்திருந்தது.
அதிகம் கதைக்காதவரும் மிகவும் அமைதியாகவே எந்த நேரமும் காணப்படுபவருமான ஜெகனின் இன்னொரு பக்கத்தில் நிறைந்த இரக்கமும் அன்பும் பொங்கி இருந்தன.
அதிகம் கதைக்காதவரும் மிகவும் அமைதியாகவே எந்த நேரமும் காணப்படுபவருமான ஜெகனின் இன்னொரு பக்கத்தில் நிறைந்த இரக்கமும் அன்பும் பொங்கி இருந்தன.
எந்த வெலிக்கடை சிறைக்குள் ஜெகன் சிங்கள கைதிகளால் கொல்லரப்பட்டாரோ அந்த சிறைக்குள் இருந்த சிங்கள கைதி ஒருவன் தனது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மகனுக்கு மருத்துவ உதவி இல்லாமல் இருப்பதை சொல்லி கண்ணீர் வடித்தபோது ஜெகன் தன்னை பார்க்க வெளியில் இருந்து வந்தவர்களிடம் சொல்லி அந்த சிங்கள கைதியின் மகனின் மருத்துவ உதவிக்கு உதவுமாறு கேட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் முதன்முதலில் உரிமைகோரி வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தாக்குதல்களில் ஒன்றான தாடி தங்கராசாவின் அழிப்பு சம்பவத்தில் ஜெகனுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.
இப்படியாக தனது இளமை,காதல் வாழ்வு, அன்பான குடும்பம், அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று அனைத்தையும் துறந்து தமிழீழ தாயக விடுதலைக்கான போராட்டத்தில் முன்னெழுந்த வீரர்களில் ஒருவரான ஜெகனையும் அவருடன் மற்றைய வீரர்களையும் கோழைத்தனமாக சிங்கள பேரினவாதம் சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலை செய்த முப்பதாவது வருடம் இது.
ஜெகன், குட்டிமணி அண்ணா, தங்கண்ணா, நடேசதாசன் அண்ணா, குமார், தேவன் உட்பட இவர்களுடன் வெலிக்கடைசிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட அனைவரும் எமது மக்கள் அனைவரும் அடிமை வாழ்வுவையே போர்வையாக எண்ணி போர்த்திக் கொண்டு நீண்ட உறக்கம் செய்துகொண்டிருந்த பொழுதில் ஒரு பெரும் இலட்சிய வேட்கையுடனும் வீரத்துடனும் விடுதலைக்காக களமாடியவர்கள்.
இவர்கள் அனைவரதும் கனவு தமிழீழம். அதனை அடைவதற்காக பெரும் பாதை மிகமிக நீண்டதாக எம்முன்னால் விரிந்து கண்ணுக் கெட்டிய தூரம்வரை நீள்கிறது. ஆயினும் நாம் சோர்ந்துவிடாமல் முன்னோக்கி முன்னோக்கி நடந்தே தீரவேண்டும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் எம்மை கடந்து போகினும் ஜெகன் சிங்களத்தின் உயர் நீதிமன்றத்தில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி கூறிய அந்த வார்த்தைகள் ஒருபோதும் கருத்திழந்து போகாது.அது என்றென்றும் எமது உயிர்கலந்து ஒலிக்கும்.
“சுதந்திரம் எனது பிறப்புரிமை. எனக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமையை எமது இளைய சமூகம் என்றாவது ஒருநாள் அடைந்தே தீருவார்கள்”.
“தமிழீழம் மலர்வதை எந்த சக்தியாலும் தடுத்திடமுடியாது” இவை ஜெகன் 1982ல் கொழும்பு உயர்நீதிமன்றில் கூறிய வார்த்தைகள்.
Geen opmerkingen:
Een reactie posten