தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது!- சி.வி.விக்னேஸ்வரன் !

13வது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை மனதார வரவேற்கின்றேன். இதுவே எனது விருப்பமாகவும் இருந்தது. இவ்வாறு நேற்று தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
தெரிவுக்குழுவுக்கு வாருங்கள், நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம், ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம் என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்க் கூட்டமைப்பினர் தக்க பதிலை வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
13வது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தீர்மானிப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினர் நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது.
அதேவேளை, தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதமைக்கான காரணங்கள் குறித்து அறிக்கையூடாக தெளிவாக அறிவிக்கப்படவுள்ளது என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள்தான் பெரும்பான்மையினர். ஆனால், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களை வைத்து சிறுபான்மையினர் ஆக்கிவிட்டன.
எனினும், வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். இதனை விரும்பாத இந்த அரசு, தனது படைகளை வைத்துக் கொண்டு வடக்கு, கிழக்கில் தொடர் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது இதுவும் போதாது என்று காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் மக்களின் தீர்வுக்கு அடித்தளமாகவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதில் இந்த அரசு மும்முரமாகவுள்ளது. தனது இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இந்த அரசு நியமித்துள்ளது.
ஆனால், அரசின் முடிவுகளுக்குத் தலையாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியிருந்தால் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக அங்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்கள் மட்டும்தான் ஒலித்திருக்கும்.
இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நடைமுறையிலுள்ள 13வது திருத்தத்தை ஆதரிக்கும் தமிழ் பேசும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் நல்லிணக்கத்தை விரும்பும் ஆளுந்தரப்பு சிரேஷ்ட அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரட்ன ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் அதில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இல்லாத இந்தத் தெரிவுக்குழுவில் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது; மதிப்பும் குறைந்துவிட்டது.
இந்த நிலையில், இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை நான் மனதார வரவேற்கின்றேன்.
இதுவே எனது விருப்பமாகவும் இருந்தது. தெரிவுக்குழுவுக்கு வாருங்கள், நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம் என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது முடிவினூடாக தக்க பதிலை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரர் விக்னேஸ்வரன்.

Geen opmerkingen:

Een reactie posten