தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

1983 யூலை படுகொ​லை: இனப்படுகொலை​யின் இரத்த சாட்சியம்!- யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்

நெஞ்சம் கனத்த நினைவுகளோடு முழுமையான விடுதலை முயற்சிக்கு எம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 06:51.01 AM GMT ]
1983 கறுப்பு யூலை எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ, அதேபோல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது என நாடு கடந்த தமீழழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு யூலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரனது செய்தியின் முழுமையான வடிவம்
நெஞ்சம் கனத்த கறுப்புயூலை நினைவுகள் சுமந்து ஆண்டுகள் முப்பது கடந்து விட்டன. 1983 ஆம் ஆண்டு யூலைமாதம் 23 ஆம் நாள்- இந் நாள் முதற் கொண்டு கறுப்பு யூலை நாட்கள் உலகை அதிர வைத்தன.
இந்த நாட்கள்...
சிறிலங்காவின் அதிபாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் வெலிக்கடைச் சிறையில் சிறைப்பாதுகாவலர்களின் துணையுடன் சிங்களக் கொலைவெறிக் கைதிகள் தமிழ்ப் போராளிகள் உள்ளடங்கலாக 50 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை கொன்று குவித்த நாட்கள்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமது கண்களைத் தானம் செய்து அக் கண்களின் ஊடாக மலரப் போகும் தமிழீழத்தைப் பார்ப்பேன் எனப் பிரகடனம் செய்த போராளி குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து காலால் நசுக்கித் துவம்சம் செய்த நாட்கள்.
தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதற்காக மட்டும் சிறிலங்கா அரசின் துணையுடன் பேரினவாதக் கொலை வெறிக் கும்பல் 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடப் பார்க்காது வீதிகள் எங்கும் வீடுகள் எங்கும் கொன்று குவித்த நாட்கள்.
தமிழர்களின் வீடுகளையும், உடைமைகளையும், ஆலயங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏனைய தொழில் முயற்சிகளையும் சிங்கள இனவாதம் கொள்ளையிட்டு அதன் பின்னர் தீயிட்டு அழித்த நாட்கள்.
இந்த நாட்கள்...
சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த பெரும்கொடுமையினை உலகுக்கு வெளிப்படுத்திய நாட்கள்.
தமிழர் தேசம் சிங்களத்துடன் இணைந்து வாழ முடியாது என்பதனை மீண்டும் மீண்டும் சில வரலாற்று நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை தமிழர் தேசத்தின் கூட்டு நினைவுகளில் ஆழப் பதிந்து தமிழர் தேசம் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டுமே ஒரே வழியென்பதனை உறுதியாக முரசறைகின்றன.
தமிழீழ அரசினை அமைப்பதற்கான தமிழர் தேசத்தின் ஆயுதம் ஏந்திய போராட்ட வரலாற்றில் கருப்புயூலை முக்கியமான முதல் வரலாற்றுப்பதிவு. ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தமிழீழ தேசத்தின் மூலைமுடுக்கெல்லாம், உலகப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகள் எல்லாம் பரவி விரிய வைக்கும் வீச்சைத்தான் சிங்களத்தின் பெரும் கொடுமை கொடுத்தது. தமிழர் தேசத்தின் வீழ்ச்சியை அல்ல.
இதே போன்று முக்கியமானதொரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்திருப்பது முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு. இந் நிகழ்வும் தமிழர் தேசத்தின் கூட்டு நினைவுகளில் பெரும் தீயை மூட்டியுள்ளது.
தமிழீழ தேசத்தின் இறைமையினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜதந்திர வழிமுறையில் தொடர்ந்தும் போராடுவது அவசியம் என்பதனை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு உணர்த்தி நிற்கிறது.
1983 கறுப்புயூலை எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ அதேபோல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது.
இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பது மட்டும் ஒரேவழி என்ற உறுதியினை இக் கறுப்பு யூலை நினைவு நாட்கள் நமக்கு வழங்கட்டும்.
அதே மனஉறுதியோடு இந்நாளில் எமது தனிப்பெரும் பொறுப்பினைச் செயற்படுத்தும் முயற்சிக்காக எம்மை அர்ப்பணிப்போமாக, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாதம் ஊடகசேவை

1983 யூலை படுகொ​லை: இனப்படுகொலை​யின் இரத்த சாட்சியம்!- யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 07:10.41 AM GMT ]
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983ம் ஆண்டு யூலைப் படுகொலை நடைபெற்று 30 ஆண்டுகள் நிறைவாகின்றன.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப் பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர்.
நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்துள்ளதே தவிர, எவ்வகையிலும் மாற்றமடைந்து விடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, இராணுவ மயமாக்கல், கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
அந்த வகையில் யேர்மனியில் பல நகரங்களில் 1983ம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்பட்ட 300,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம்.
Berlin ,Saarbrücken, Landau நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதேவேளையிலும், 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, கண்காட்சியும் வைக்கப்பட்டது.
கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு மற்றும் நிகழ்வுகளின் ஊடாக யேர்மன்- மற்றும் பல்லின மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு வெற்றியை உணரக்கூடியதாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

Geen opmerkingen:

Een reactie posten