ஆள்வதற்கான பொதுவிதி இது. அதிலும் இன்னொரு இனத்தை ஒடுக்கி அடக்கி ஆளும் ஆட்சியாளர்கள் கட்டாயம் இந்த பொதுவிதியை பின்பற்றியே அதி நீண்டகாலம் தமது ஆட்சியை அந்த மக்களின் முதுகெலும்பின் மீது நடாத்திக் கொண்டிருப்பர்.
நீங்களும் வெல்லலாம் போட்டியில் விடையை கண்டுபிடிப்பதற்காக கொடுக்கப்படும்'க்ளுக்கள்' போல இருக்கின்றதா…….. விடை மிகவும் சுலபம்.
சரியான விடை:பிரித்து ஆள்.என்பதாகும்
சிங்களதேசம் இந்த பிரித்து ஆளும் கோட்பாட்டை மிகவும் தேர்ந்த முறையில் செயற்படுத்தி எம்மீதான தனது பேரினவாத ஆட்சியை தொடர்கிறது.
ஆள்வதற்காக பிரி பிரித்து வைத்து ஆள் பிரித்து அழி என்ற ஆட்சி விதிகளை நடைமுறைப்படுத்தி முள்ளிவாய்க்காலில் ஒருபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி எமது இனத்தை சிதறவைத்துவிட்ட போதும் இன்னும் சிங்கள பேரினவாதத்தின் இனவெறி அடங்கவில்லை.
மகாவம்ச கனவுகளிலும் தொன்மை ஆதிக்க நினைவான துட்டகைமுனு வாளேந்தியபடி வரும் வெற்றிக் கனவுகளிலும் முழுதாக மூழ்கியிருக்கும் சிங்கள இனம் எம்மை இன்னும் இன்னும் பிரிவுகளும் பேதங்களும் பிளவுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டமாகவே தொடர்ந்து வைத்திருந்து ஆளவே விரும்புகின்றது.
இந்த பிரித்து ஆளும் தத்துவம் மேற்குநாடுகள் ஆசியாவிலும், ஆபிரிக்க அமெரிக்காவிலும் நாடுகளை பிடித்து ஆட்சி செய்த பொழுதில் ஏற்பட்ட ஒரு ஆட்சி அதிகாரத்துக்கான நடைமுறைத் தத்துவம் என்று இருந்தாலும் அதற்கு முன்னரேயே எமது பஞ்சதந்திர கதைகளிலும் வாய்வழியான நீதிகதைகளிலும் எமக்கு சொல்லியாயிற்று.
அதிலும் 15ம் நூற்றாண்டின் மிகப்பெரும் தத்துவஞானியும் நவீன அரசியல் விஞ்ஞானத்தின் தந்தை என்று சொல்லப்படுபவருமாகிய மாக்கியவல்லி தனது போர்க்கலை என்ற நூலின் நான்காவது பாகத்தில் இதனை அழகாக சொல்லி வைத்திருக்கிறார்.
இதெல்லாம் எழுத்திலும் தொகுப்பிலும் வருவதற்கு நீண்ண்ட காலத்துக்கு முன்னரேயே சிங்கம் முயல், விறகுக்கட்டு விறகுவெட்டி, வேடன் வலை பறவைகள் என்று உவமான உவமேயங்களுடன் பிரித்து அழி தத்துவத்தும் எம் முன்னோரின் முன்னோர்கள் மூலமாக வாய்வழிக் கதைகளாக எம் காதுகள் வரை வந்தனதான். அதே கர்ண பரம்பரைக் கதைகள் சிங்கள இனத்தின் காதுகளிலும் அவர்களின் முன்னோரால் ஓதப்பட்டே இருந்தாக வேண்டும்.
ஏனென்றால் 2009க்கு பிறகு இந்த இனம் இனி எழவே முடியாது என்று எங்களில் பலரே நினைத்து அடிபணிவு அரசியல்தான் இனி தமிழருக்கான பாதையாகவும் பல்லவியாகவும் இருக்க வேண்டும் என்று கதைத்தும் நகர்ந்தும் வரும் பொழுதில் சிங்களம் என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்.
ஏதோ எங்காவது எஞ்சியிருக்கும் கொஞ்சம் மிச்சம் மீதி தேசிய உணர்வும் மீண்டும் தமிழர்களுக்குள் எழுந்துவிடக் கூடாது,எழுந்துவிட அனுமதிக்கவும் முடியாது என்று சிங்களம் இன்னும் செயற்படுகின்றது.
தமிழர்களில் இருந்து சிங்களத்துடன் சேர்ந்து நிற்கும் ஒட்டுக்குழுக்களைக்கூட இரண்டு இரண்டாக பிரித்து வைத்து காய் நகர்த்தும் ராஜபக்ச கும்பல் மிக முக்கியமான ஆணிவேரையும் அசைத்து அதனிலும் பிரிவுகளை உருவாக்கி வருகிறார்கள்.
அண்மைக்காலமாக 2009 மே மாதத்துக்கு பின்னர் தமிழீழம் எங்கும் நடைபெற்று வரும் ஊர்ச்சண்டைகளும் குழுச்சண்டைகளும், ஒரே ஊருக்குள்ளேயே நடக்கத் தொடங்கியிருக்கும் ஒழுங்கைப் போர்களும்,வீதிச் சச்சரவுகளும் என்ன விடயத்தை சொல்லி நிற்கின்றன.
ஊர்கள், கிராமங்கள் பல ஒரு தொகுப்பாக இணைவதே தேசம் என்றும் தேசிய உணர்வென்றும் உருவெடுக்கின்றது. இந்த கிராமங்கள், ஊர்கள் ஒன்றுக்கொன்று எதிராக வெறிகொண்டு நின்றால் ஒரு போதும் தேசம் என்ற கட்டமைப்பு உருவாக முடியாது. தேசியம் என்ற உணர்வு எழவே முடியாது.
அடக்குமுறைச் சிங்களவனின் கோர வெறியாட்டத்தை விட அயலூரான் மீதான வன்மம் பெரியது என்ற நினைப்பை மிக இலகுவாக எங்கள் கிராமங்கள் தோறும் ஊர்கள் முழுதும் சிங்களத்தின் ஏஜன்டுகள் மெது மெதுவாக ஆனால் திடமாக பரப்பி வருகின்றார்கள்.
வடக்கு-கிழக்கு என்று மாகாண ரீதியான பிரிப்பில் ஆரம்பித்து பின்னர் மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள், ஊர்கள் என்று இன்னும் இன்னும் நெருக்கி நெருக்கி எம்மை பிளவுபடுத்தி இப்போது ஒரே ஊர்களுக்குள்ளேயே வேறுவேறு பகுதிகளுக்கான இரத்தக் களரிகளை செம கச்சிதமாக செயற்படுத்தி வருகிறார்கள்.
எவ்வளவு ஆழமாக எமக்குள் பிரிவுகளையும் பேதங்களையும் பிளவுகளையும் உருவாக்க முடியுமோ அவ்ளவு ஆழமாக எமக்குள் பிரிவுகளை தூவுகின்றார்கள். இதற்கு ஏற்றதுபோல இலகுவில் உணர்ச்சியை விசிறக் கூடியதாக மதுப்பழக்கத்தை இராணுவத்தினரும் அரச ஒட்டுக்குழுக்களுமே முன்னின்று ஊக்கப்படுத்துகிறார்கள்.
இவற்றுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாமல் வெறுமனே கைகளை பிசைந்தபடியே எமது தாய்நிலத்து மக்கள் நிற்கிறார்கள். சிங்களத்தின் இந்த பிரித்தாளும் சதியை இனங்கண்டு கொண்டாலும் கூட அதற்கெதிராக எதுவும் செய்ய முடியாத ஒருவெறுமையான நிலையே அங்கு நிலவுகின்றது.
இதனை தடுக்காது விட்டால் முப்பது வருடங்களாக எமது மாவீரர்கள் சிந்திய இரத்தத்துக்கும் அர்ப்பணங்களுக்கும் அர்த்தமே இல்லாது அழிக்கப்பட்டு விடுவோம்.
ஆனால் இந்த நிலை இன்னும்இன்னும் ஆழமாக தொடருமானால் நாம் ஒரே தேசிய இனமென்ற உணர்வும் எம் அனைவருக்காகவுமே ஊர்பேதமின்றி எங்கெங்கோ இருந்து வந்து எமது தேசப் புதல்வர்கள் உயிரையும் அர்ப்பணித்து போராடினர் என்ற நினைப்பும் மறைந்து விடும்.
இந்த உயிரோட்டமான உணர்வுகள் தான் எம்மை ஒரு இனமாக ஒரு இழந்துவிட்ட தேசமொன்றின் மக்களாக இணைத்து வைத்திருக்கின்றது.
இது தூர்ந்துவிட்டால் நாம் வெறுமனே ஒரு நாடோடிக்கும்பல் போலவே ஆக்கப்பட்டு விடுவோம்.
சிங்களம் எமது தேசியத்தின் மீது தொடுத்திருக்கும் ஒருவிதமான உளவியல் யுத்தமான இதனை நாம் வென்றாக வேண்டும். இதற்கான பொறுப்புகள் தாய்மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் இருக்கும் அனைத்து தரப்பினரிடமும் இருந்தாக வேண்டும்.
தாய்மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் செயற்படும் கிராமச்சங்கள், ஊர்அமைப்புகள், பாடசாலை சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் என அனைவரும் சிங்கள தேசத்தின் இந்த பிரித்தாளும் வேலைத்திட்டத்தினை முறியடிக்கும் முனைப்புகளை முன்னெடுத்தே ஆகவேண்டும்.
எதிரி எம்மை எப்போதுமே பிரித்து பிரித்து அழிக்கவே முயலுவான். நாம் அதற்கெதிராக எம் ஒற்றுமையை எம் ஒன்றிணைவை இன்னும் இன்னும் அதிகமாக வெளிக்காட்டுவதே எதிரியை தோற்கடிக்கச் செய்யும்.
நாம் தோற்றுப்போக முடியாது. வென்றாக வேண்டுமானால் ஒன்றாக வேண்டும்!
Geen opmerkingen:
Een reactie posten