தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

யாழ். குடாநாட்டில் தனியாக வாழும் பெண்களின் விவரங்களை திரட்டும் படையினர்!

போதைப் பாவனையைத் தடுப்பது சமூகத்தின் தலையாய பொறுப்பு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 04:02.25 PM GMT ] [ valampurii.com ]
இன்றைய காலச் சூழ்நிலையில் வசதிகளும் வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அந்த வசதிகளும் வாய்ப்புக்களும் எங்கள் இளம் பிள்ளைகளைத் தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்கும் கணிசமாக உதவுகின்றது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
இன்றைக்கு 40 வயதை அடைந்திருக்கக் கூடிய ஒருவரின் இளமைப்பருவத்தில் இருந்த சூழ்நிலையும் இப்போது 16 வயதில் இருக்கக் கூடிய ஒரு இளைஞன் வாழ்கின்ற சூழ்நிலையும் வேறுபட்டது.
அன்று ஒரு சமூகக் கண்காணிப்பும் உறவுப் பலமும் எங்களிடம் இருந்தன. மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா என்ற கூட்டுக் குடும்பத்தின் பலமான உறவுகளின் கண்களில் இருந்து எவரும் விலகமுடியாது.
ஆனால் இன்று நிலைமை அதுவல்ல. எங்கள் பிள்ளைகளை கண்காணிப்பதற்கு உறவும் இல்லை சமூகமும் இல்லை என்றாயிற்று.
முன்பெல்லாம் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற கலாசாரம். பள்ளிக்கூடமும் வீட்டுப் படிப்பும் என்ற எல்லைகளுக்குள் சொந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்பதால், பாடசாலை நேரம் கடந்தும் மாணவர்களைக் கண்காணிக்கின்ற ஒருபெரும் கொடை அன்றைய இளம் சந்ததிக்கு இருந்தது.
ஆனால் இன்றோ! பாடசாலை உபாத்தியார் முதல் தனியார் கல்வி நிறுவன வாத்தியார் வரை எல்லோரும் உறவறியா உழைப்பாளிகள் ஆயிற்று.
யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நாம் மெளனமாக இருப்பதே புத்திசாலித்தனம் என்ற முடிவை ஆசிரியர்கள் எடுப்பதற்கும் காரணம் உண்டு.
பிள்ளையை அதட்டினால் சிறுவர் உரிமை அமைப்புகள் கொடி பிடித்து வருகின்றன. ஊடகங்கள் நிலைமைகளை அறியாமல் சம்பவங்களை பூதாகரப்படுத்தி விடுகின்றன.
எல்லாவற்றிற்கும் விமர்சனம், எல்லாவற்றிற்றும் விசாரணை, விளக்கம் என்றால் எந்த ஆசிரியரால் விசுவாசமாகப் பணியாற்ற முடியும்? இதன் காரணமாக இப்போது எங்கள் மாணவர்களிடம் பயமும் இல்லை. (குரு) பக்தியும் இல்லை.
இதன் வெளிப்பாடுதான் மாணவர்கள் மத்தியில் போதைப் பாக்கும் போதைவஸ்து பயன்பாடும் ஊடுருவத் தொடங்கியுள்ளன.
வீதி புனரமைப்பவர்கள், வீடுகட்டுபவர்கள், பிச்சை எடுப்பவர்கள், பிள்ளைகளைப் பராமரிப் பதாகக் கூறி நிதி சேகரிப்பவர்கள் என அனைவரும் வெளியார் என்றால், கட்டுக்கோப்புடன் வாழ்ந்த எங்கள் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதிகம் அல்லவா?
எனவே எங்கள் பிள்ளைகளை பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதிபர்கள், ஆசிரியர்கள், உறவுகள், ஊர்ப் பொது அமைப்புகள், கல்விச் சமூகத்தினர் என ஒவ்வொருவரும் இது விடயத்தில் கவனம் கொள்வதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனிப்பதுமே எங்கள் இளம் பிள்ளைகளை காப்பாற்றி அவர்களை வாழ வைப்பதற்கான ஒரே வழி.
இதை நாம் செய்யத் தவறினால் எங்கள் கவலை ஒருபோதும் தீரப் போவதில்லை.
யாழ். குடாநாட்டில் தனியாக வாழும் பெண்களின் விவரங்களை திரட்டும் படையினர்!
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 04:22.57 PM GMT ]
யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தந்தப் பகுதிகளிலுள்ள படையினரே மக்களைப் பொது இடத்துக்கு அழைத்து இந்த விவரங்களைப் பதிவு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் தேர்தல் நெருங்குகின்றது.
அடுத்ததாக இவ்வாறான விவரங்களை திரட்டுவது தனியாகவும், வறுமையுடனும் வாழும் பெண்களை இலக்குவைத்து சமூக விரோத செயலில் சிங்களப் படையினர் ஈடுபடலாம் எனவும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினமும் திங்கட்கிழமை உடுவில் ஆலடி வைரவர் கோயிலடிகுச் சென்ற மானிப்பாய் இராணுவ அதிகாரிகள், மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
விதவைப் பெண்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் தொடர்பான குடும்ப விவரங்களையே அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவையெல்லாம் அவர்களின் மீதான மனிதாபிமானத்திற்காக மேற்கொள்ளப்படவில்லை எனவும், வரும் மாகாணசபை தேர்தலை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்படுகிறது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten