தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juli 2013

ரணில் - தயாசிறிக்கிடையில் சந்திப்பு

மட்டுவில் சுவாமி விபுலானந்தரின் 65ஆவது நினைவுதின நிகழ்வுகள்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:59.00 PM GMT ]
சுவாமி விபுலானந்தர் அமரத்துவமடைந்த 65ஆவது நினைவுதின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக இன்று  காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது சமாதி அருகில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், விழாச் சபையின் தலைவர் பேராசிரியர் மானகப்போடி செல்வராசா, செயலாளர் எஸ்.ஜெயராஜா, பொருளாளர் எஸ்.யுவராஜன், முன்னாள் உதவிச் செயலாளர் காசுபதி நடராஜா, பேராசிரியர் சி.மௌனகுரு, கலாநிதி கே.பிரேம்குமார்,   மாணவ மாணவிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், விபுலானந்தர் ஆரம்பித்த சிவானந்தா தேசியப்பாடசாலை மாணவர்கள், விவேகானந்தா மகளிர் வித்தியாலய மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இன்றைய தினம் சிவானந்தா தேசியப்பாடசாலை ஸ்தாபகர் தினமும் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
அதே நேரம், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் காலை 9 மணியளவில், மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம் அருகிலுள்ள முதியோர் பூங்காவில் அமைந்துள்ள விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வொன்றும் நடைபெற்றது.
இதில், மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தன், மட்டக்களப்பு சிவில் சமூகம் மற்றும் மாநகர வரியிறுப்பாளர் சங்கங்களின் தலைவரானஎஸ்.மாமாங்கராஜா, மற்றும் உறுப்பினர்கள்,  லயன் அ.செல்வேந்திரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, புனித சிசிலியா தேசியப்பாடசாலை மாணவிகள், வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை மாணவிகள், மெதடிஸ்த மத்தியகல்லூரி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுகளில் சுவாமி விபுலானந்தருக்கு விருப்பமான வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ பாடல் இசைக்கப்பட மலரஞ்சலிகள் மாலை அணிவித்தல்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் - தயாசிறிக்கிடையில் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 06:39.30 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜெயசேகர அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தார் என்றும், வடமேல் மாகாணசபையில் அவரை முதன்மை வேட்பாளராக கொண்டு ஆளும் கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க தயாசிறியை சந்தித்துள்ளார்.
இதன்போது வடமேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பேசப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னோடியாகவே ஏற்கனவே கட்சியின் ஒழுங்கை மீறினார் என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அண்மையில் விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten