[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:46.32 PM GMT ]
கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்து கனடிய தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப் படுகொலை இன்று 29 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலத்தை அபகரிப்பதில் மிகவும் மும்முரம் காட்டி வந்தார்கள். அதன் உச்சக்கட்டமாக இப்பொது நடக்கும் நில அபகரிப்பை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தமது இன்னொரு இலக்காக தமிழர் மண்ணை பறிக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால் இப்போது நிலம் அபகரிக்கும் முயற்சியின் தீவிரம் மிகவும் அச்சத்தை தருவதாக அமைகின்றது.
இந்த நில அபகரிப்பு முயற்சியை முறியடிப்பதானது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு முக்கிய கடமையாக அமைகின்றது. நாம் தொடர்ந்தும் அமைதியாக இருந்தோம் என்றால் பாலஸ்தீனம் போல் தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கருத்து உலகத்தில் உருவாகும் போது தமிழர்களுக்கு நிலம் இருக்குமோ எமக்கு தெரியாது.
ஜுலை 1983 ல் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூர்வதுடன், போர்க்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும்.
போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் நடைபெறவுள்ளது.
சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் தமிழின அழிப்பையும், ஐ.நா தலைமையில் தமிழீழ சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பையும் முன்நிறுத்தி எம் இனத்தின் விடிவிற்காக ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையாக ஒன்றுகூடுவோம் என கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வட.மாகாண தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 03:31.16 PM GMT ]
கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜீன் லாம்பெர்ட், வடக்கு மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தினால், இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் மேம்பாடு அடைய வழிவகுக்கும் என்று கூறினார்.
மேலும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், ஜனநாயக சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தினரின் ஆதிக்கம் இருப்பதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லாம்பெர்ட் கவலை தெரிவித்தார்.
40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய லாம்பெர்ட், நல்லிணக்க ஆணையக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.
செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள முன்னாள் ராணுவ அதிகாரியை நீக்க தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஜனநாயக சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனும் வலியுறுத்தியிருப்பது இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் தேர்தல் நடாத்த தேவையான உதவிகள் வழங்கப்படும் ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten