தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juli 2013

பிரித்தானிய குழு இன்று யாழிற்கு விஜயம்


வெருகல் மற்றும் சேருவில பிரதேசங்களில் பிரேத பரிசோதனை வசதியின்மையால் மக்கள் அவதி - மட்டுவில் புதிய போக்குவரத்து சட்டம் - பேய்க்கு கழிப்பு செய்தவர் சடலமாக மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 06:07.09 AM GMT ]
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகல் மற்றும் சேருவில பிரதேசங்களில் இடம்பெறும் தீடீர் மரணங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் வசதிகள் இல்லையென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்சயம் திடீர் மரணத்திற்குள்ளானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வெருகல் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 55 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தளாய் வைத்தியசாலைக்கு அல்லது 65 கிலோமீற்றர் தொலைவிலுள்ள திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது.

இதனால் மேற்குறிப்பிட்ட இரண்டிலொரு இடத்திற்கு பிரேதத்தை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வெருகல் பிரதேசத்திற்கு மீண்டும் சடலத்தை எடுத்து வருவதாயின் ஆகக் குறைந்தது வாகனக் கூலியாக 30 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாக பிரதேசப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமை ஏழை எளிய மக்களால் தாக்குப் பிடிக்க முடியாத ஒன்று என அவர்கள் துயரம் கொள்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் முகமாக வெருகல் பிரதேச வைத்தியசாலையிலேயே பிரேத பரிசோதனைக்கான ஏற்ற ஒழுங்குகள் செய்து தரப்பட வேண்டும் என்று பிரதேசப் பொதுமக்கள் கோருகின்றனர்.

வெருகல் பிரதேசத்திலேயே சடுதியாக ஏற்படும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 13 ஆயிரத்து ஐந்நூறு பேரும் சேருவில மற்றும் கிளிவெட்டி பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் புதிய போக்குவரத்து சட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டர் சைக்கிளில்களின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்து சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்களில்களில் பின் ஆசனங்களில் இருந்து செல்லும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தே இதுவரை காலமும் பயணித்து வருகின்றனர்.
தற்போது மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது போக்குவரத்து சட்ட ஒழுங்காகும். இந்த ஒழுங்கை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் மற்றும் சாரி போன்ற உடை அணிந்து செல்லும் பெண்கள் மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதற்கு சிரமப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பேய்க்கு கழிப்பு செய்தவர் சடலமாக மீட்பு
இரவு முழுக்க வீடு வளவு காவல் பண்ணி பேய்க்கு கழிப்புச் சடங்கு செய்தவர் வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த இளையதம்பி விமலநாதன் (வயது 35) என்று உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

இவர் வீட்டினுள் இறந்து கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு நீதிவானின் உத்தரவுக்கமைய ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எச்.பி.கே.விக்ரமநாயக்க, பொலிஸ் சார்ஜன்ற் ஏ.ஷற்.ஹஸன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் ஆகியோர் சடலத்தை மீட்டனர்.

இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை காலை வரை தாங்கள் குடியிருக்கும் வீட்டையும், வளவையும் பேய்களின் தொல்லைகளிலிருந்து காப்பதற்காக பேய்களுக்கு கழிப்புச் சடங்கு செய்து காவல் பண்ணும் கிரியைகளில் ஈடுபட்டிருந்தார் என்று அவரது 29 வயதான மனைவி பிரியதர்ஷினி சாட்சியமளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கணவர் உண்ணாமலும், உறங்காமலும் அவஸ்தைப்பட்டவர் என்றும், அதனால் வைத்தியர்கள் இவரை மனநல சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் மனைவி தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய குழு இன்று யாழிற்கு விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 03:11.58 AM GMT ]
இலங்கை வந்துள்ள பிரித்தானியா பாராளுமன்ற குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர் சைமன் சன்சக் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஒருவாரம் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த குழு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உயரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.
அதன் அடிப்படையிலேயே இந்த குழு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten