ஒரு பிரதேசத்தில் எந்த மொழி பெரும்பான்மையாக பேசப்படுகின்றதோ, அந்த பிரதேச மொழிக்கு மிகப் பிரதானமாக முன்னுரிமை கொடுத்தே வரவேற்பு நுழைவாயில்கள், கல்வெட்டுகள், வீதியின் பெயர் அறிவிப்பு பலகைகள், திணைக்களங்கள் மற்றும் வாணிப நிறுவனங்களின் பெயர்கள் உள்ளிட்ட விளம்பர பலகைகள் நிறுவப்படுதல் வேண்டும் என்று இலங்கை சட்ட திட்டங்களில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்துக்கு புதிதாக பயணிக்கும் ஒருவர் இவற்றை வைத்தே அந்த பிரதேசத்தில் எந்த மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அந்தச் சூழலுக்கேற்ப தன்னை இசைவாக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் ஏ9 சாலையில் கிளி.கரடிபோக்கு சந்திக்கு சில கிலோமீற்றர்கள் முன்பாக அமைக்கப்பட்டுள்ள "கிளிநொச்சி வரவேற்கிறது" எனும் அறிவிப்பு பலகை, சிங்கள மொழிக்கு மிகப் பிரதானமாக முன்னுரிமை கொடுத்து நிறுவப்பட்டுள்ளது.
இதேபோன்று மாவட்டத்தின் தபால் திணைக்களம் உள்ளிட்ட சில அரச திணைக்களங்களிலும், வர்த்தக வாணிப நிலையங்களிலும் இத்தகைய தமிழ்மொழி குறைபாடுகள் காணப்படுகின்றன.
மாவட்டத்தின் மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் கௌரவிப்பு விழாக்களை வருடாவருடம் வெகுவிமர்சையாக நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மாவட்டத்தின் தமிழ் மொழி வளர்ச்சிக் கழகம், கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இருக்கும் போதே, இத்தகைய தமிழ் மொழிப் புறக்கணிப்புகள் இடம்பெறுவது பலத்த அதிர்வலைகளை தமிழ் சமுகத்தினரிடம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் கோலோச்சிய காலங்களில் அவர்கள் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தமிழ் மொழியை காப்பதற்காகவும், வளர்ப்பதற்காகவும் கடுமையாக உழைத்திருந்தார்கள்.
தமிழ் மொழிப் பேணகத்தை நிறுவி தூய தமிழ் மொழிப் பெயர்களை சூட்டி தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தார்கள்.
புலிகள் தமது நடைமுறை நிர்வாக அரசின் தலைநகராக நிறுவியிருந்த கிளிநொச்சியில், 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்மொழியும் செத்துவிட்டது. தமிழ் மொழிக்கு உயிர் கொடுப்பதற்கு யாருளர் என தமிழ் சமுகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, கிளி.கரைச்சி பிரதேச சபையை கைப்பற்றியிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten