தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

13ஐ பாதுகாக்கும் வகையில் புதிய முன்னணி உருவாக்கம் - பாரிய நட்டத்தில் இயங்கும் இலங்கையின் நான்கு அரச நிறுவனங்கள்

இலங்கையில் சீரற்ற காலநிலை: காற்றின் வேகம் 70 கி.மீ. ஆக அதிகரிக்கலாமென எச்சரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 06:18.13 PM GMT ]
இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 18 மணித்தியாலங்களில் காற்றின் வேகம் 70 கிலோ மீற்றர் ஆக அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று பெய்த கடும் மழையுடனான காற்று காரணமாக ஒருவர் பலியானதுடன், 140 வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு கிருல்ல வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார்.
அவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பணியாற்றும், கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்தவர் என மத்திய நிலையத்தின் பிரதி ஊடகப் பணிப்பாளர் சரத்லால்குமார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிக மழை காரணமாக லக்சபான, கனியோன், காசல்ரீ மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 24 மணி நேரத்தில், நாட்டின் பல பிரதேசங்களில் அதிக மழையினை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சர்வதேச காலநிலை தகவல்களை வெளியிடும் வெதர் டொட் கொம் இணையத்தின் தகவலுக்கு அமைய இலங்கைத் தீவின் தென் மேற்கு திசையில் வீசும் காற்றின் சுழல் தன்மை காரணமாக மேற்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தென் பிராந்திய கடலிலும் இந்த மழை வீழ்ச்சி தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஐ பாதுகாக்கும் வகையில் புதிய முன்னணி உருவாக்கம் - பாரிய நட்டத்தில் இயங்கும் இலங்கையின் நான்கு அரச நிறுவனங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 05:16.04 PM GMT ]
13வது அரசியலமைப்பை பாதுகாத்தல் மற்றும் இனப்பிரச்சினை தீர்வின்போது மலையக மக்களின் உரிமைகள் வென்றெடுக்கும் வகையில் புதிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அறிவித்துள்ளார்
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவருமான வி.ராதாகிருஸ்ணன் மற்றும் மலையக விடுதலை முன்னணியின் தலைவர் டி.ஐயாதுரை ஆகியோர் இணைந்தே இந்த முன்னணியை உருவாக்கியுள்ளனர்.
இந்த அணி, மலையகத்தில் மூன்றாவது சக்தியாக விளங்கும் வகையில் செயற்படும் என்று பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையக மக்களின் வீட்டுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை காக்கும் வகையில் இந்த முன்னணி செயற்படும் என்றும் பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
வடக்கு, வடமத்திய, மத்திய மாகாண சபைத் தேர்தல் களம் தற்போது தீவிர நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மலையக தேசிய முன்னணி என்ற கட்சியின் கீழ் செயற்பட நான்கு கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணி குறித்து அதன் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ ராதாகிருஸ்ணன் கருத்து வெளியிடுகையில்,
புதிய கூட்டணி மலையக அரசியல் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாகவும், ஏனைய தொழிற்சங்கங்கள் போன்றல்லாது பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், தேசிய சுதந்திர முன்னணி, கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், உரையாற்றிய அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசாமில், மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் குரல் எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணி தற்போது அமைதியான போக்கை கடைப்பிடிப்பதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், வட மாகாண தேர்தலை நடத்துவதற்கு முன்னர், வடக்கில் குடியியல் நிர்வாகத்தை உரிய முறையில் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பாரிய நட்டத்தில் இலங்கையின் நான்கு அரச நிறுவனங்கள்
இலங்கையின் நான்கு அரச நிறுவனங்கள் 98 வீத நட்டத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்சாரசபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் எயார் என்பனவே நட்டமடைந்துள்ளதாக அரச நிறுவனங்களின் ஊழல் மற்றும் திறன்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக்குழுவான 'கோப்' பின் தலைவர் அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.
'கோப்' குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் இலங்கையின் அரசத்துறையில் வினைத்திறனான முகாமைத்துவத்துக்கு வெற்றிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழு தமது அறிக்கையை சமர்ப்பித்தது.
இதன்படி 14 நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்நோக்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten