ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்க ஆதரவு நாடுகளினால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு தடவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலக அளவில் கவனம் செலுத்தினாலும், சிறிலங்காவில் பாரியளவில் குழப்ப நிலைமைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச சுயாதீன விசாரணைகளுகு இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தை குழப்பும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ரணில் விக்கிரமசிங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அமெரிக்காவுடன் இணங்கிச் செயற்படுமாறும் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten