மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலைச் சம்பவத்தையடுத்து, பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீதான தீவிர கண்காணிப்புகளும் ஒழுக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மாணவர் ஒருவர் எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றை சரியான முறையில் பேணப்படுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் பல பாடசாலைகளில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன.
சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் நேற்று முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்குரிய நடைமுறைகளை மீறியவர்கள் மீது பாடசாலை ஒழுக்காற்றுக் குழுக்களினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிக தலைமுடி வைத்திருந்த ஆண் மாணவர்கள், சேட்டினை வெளியில் விட்டுத்திரிந்த மாணவர்கள், குறுகிய கை கொண்ட சட்டையணிந்து வரும் பெண் மாணவிகள், தலை முடியினை ஒழுங்கற்ற முறையில் கட்டிவரும் பெண் மாணவிகள் என பல்வேறு ஒழுக்கவிதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அம் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் நிலைமை தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய அதிரடி நடவடிக்கைகளினால் மாணவர்களின் ஒழுக்கம் நிலை நாட்டப்படுவதையிட்டு பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், பெரியார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனையும் அவதானிக்க முடிந்தது.
அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்திற்கு காரணமான தம்பதியினரின் மகள் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் மத்தியில் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten