இலங்கை அரசாங்கம் தமக்கு எதிரானவர்களை தொந்தரவு, சிறைப்படுத்தல் மற்றும் வன்முறை தாக்குதல்களின் ஊடாக அடக்கி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ள “எதிரானவர்கள் மீதான தாக்குதல்” என்ற தலைப்பின் கீழான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம்,தமது அதிகாரத்தைக்கொண்டு தமது அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறைகளை உத்தியோகபூர்வமானதாக நடைமுறைப்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள், மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது அரசாங்கம் தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது
அரசாங்கப் படையினர் மற்றும் தமது ஆதரவாளர்களைக் கொண்டு அரசாங்கம் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பொலி ருஸ்கொட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த பல வருடங்களாக விமர்சனங்கள் வெளியிடும் சந்தர்ப்பங்கள் குறைந்து போயுள்ளன.
அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடுவோர் கடுமையாக பாதிக்கப்படுவதே இதற்கான காரணம் என்று பொலி ருஸ்கொட் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம், தமது அதிகாரத்தை பலப்படுத்தி தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
2010ம் ஆண்டு 18 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து அரசாங்க நிறுவனங்கள், ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்பட்டது. இதன் மூலம் படையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
அரச ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் மீது விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 2013ல் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டும்.
அதற்கு பொதுநலவாய நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும்.
அத்துடன் போர்க்குற்றம் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கததின் மீது சர்வதேச விசாரணைகளுக்கு சர்வதேசம் அழுத்தத்தை கொடுக்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புசபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் போலி ருஸ்கொட் வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten