தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

மட்டு.எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தலைமைகளின் கடமை!- பொன்.செல்வராசா!!


மே-18ல் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு: உலகத்தமிழ் பெருமக்களிடம் இருந்து ஆய்வுகளுக்கு அழைப்பு
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 12:16.52 PM GMT ]
தமிழீழ சுதந்திர சாசனதத்தினை மையமாக கொண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள மாநாட்டுக்கான ஆய்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
எதிர்வரும் மே-15ம் நாள் முதல் 18ம் நாள் அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்திலுள்ள 'லங்காஸ்டர்' எனும் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 'தடோ ஸ்டீபன்ஸ் மன்றத்தில்' இப்பெரும் மாநாடு இடம்பெறுகின்றது.
இந்நிலையில் இம்மாநாட்டிற்கான ஆய்வுகளை உலகத் தமிழர்கள் பெருமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் (05-05-2013) மே 5ம் நாளுக்கு முன்னராக குறித்த nimal.vinayagamoorthy@tgte.org இந்த மின்னஞ்சலுக்கு ஆய்வுகளை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஆய்வுக்கான தலைப்புக்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. தமிழீழ சுதந்திர சாசனம்: இந்து சமுத்திரத்திலும் தென் ஆசியப் பிராந்தியத்திலும் நிலவும் பூகோள அரசியல் பரிணாம நிலைமைகளுக்கு ஏற்ப, இலட்சியங்களை யதார்த்த நிலைக்கு நகர்த்திச் செல்லுதல்.
2. புதிதாக தோற்றமெடுத்து வரும் மக்களாட்சி வழியிலான நாடு கடந்த அரசியலும், சுதந்திர இயக்கங்கள் மீதான அதன் தாக்கமும்.
3. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனமும் தமிழீழ சுதந்திர சாசனமும்.
4. தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரதும் நலன்களும் அவற்றின் ஒருங்கிணைப்பும் இருதேசங்கள் எனும் அடிப்படையிலான தீர்வும் அது பற்றிய பிராந்திய, அனைத்துலக சக்திகளின் நிலைப்பாடும்.
5. பல்வேறு பட்ட சக்திகளின் தாக்கம் நிலவும் இன்றைய உலகில் சுயநிர்ணய உரிமையின் பங்களிப்பு
6. தமிழ்மக்களதும் அவர்களது அனைத்துலக ஆதரவாளர்களதும் மென்வலுவை ஒன்று திரட்டுதலும் செயற்படுத்தலும்
7. இனஅழிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள தேசத்திற்கு வழங்கப்பட வேண்டிய இடைக்கால நீதி பற்றிய வழிமுறைகள்
8. புதிதாக தோற்றம்பெற்ற நாடுகளை அரசியல், பொருளாதார அடிப்படையில் வலுவாக்கல்: கிழக்குத் திமோர் நாடு பற்றிய ஒரு சிறப்பாய்வு.
9. ஆயுதப் போராட்டங்கள் நிகழும் இடங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள்- சிறிலங்கா பற்றிய ஒரு சிறப்பாய்வு
10. அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை
மேற்குறித்த தலைப்புக்கள் ஆய்வுக்கான கருப்பொருளாக தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த ஆய்வின் நோக்கங்கள் குறித்து பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:
இன்றைய வரலாற்றுக் கால கட்டத்தில் நாம் உலகுக்கு தெளிவாக விளக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. அதாவது, தெற்காசியப் பிராந்தியத்தில் புதிய நாடொன்று தோற்றம் பெறுவது அந்தப் பிராந்தியத்தின் உறுதிப் பாட்டிற்கு எந்த வகையிலும் பாதகமானதல்ல என்பதே யாகும்.
மாறாக, இவ்வலயத்தில் மக்களாட்சி விழுமியங்களும், பாதுகாப்பு நிலைமைகளும் சமாதானமும் வலுப்பெறும் என்பதை எடுத்துக் காட்டல் வேண்டும்.
எனவே, இந்த மகா நாட்டில் இத்தகையதோர் புதிய தேசம் உருவாகுவதையும், உலக சமூகத்தின் ஓர் அங்கமாக மிளரவிருக்கும் அதன் எதிர்காலத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அதற்குத் தேவையான பரந்துபட்ட, பிராந்திய, அனைத்துலக உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் கருத்துப் பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இது தொடர்பாக, இந்தப் பிராந்தியத்திலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள அறிஞர்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் இதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
இக்கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ தயாரித்து வழங்கப்படலாம். இந்த மகாநாட்டின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளும் தீர்மானங்களும் பின்னர் பல்வேறு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் சிறிலங்கா எனும் தீவினில் இடம்பெறும் தமிழ்த் தேசியப் போராட்டம் பற்றிய நல்லதோர் புரிந்துணர்வை ஏற்படுத்தி, கொள்கை வகுப்பில் தாகத்தைக் கொண்டுவர முடியும் என நம்புகின்றோம்.
மாநாட்டின் நிகழ்வுகள் தமிழினப் போராட்டத்தையும் தெற்காசியப் பிராந்தியத்தையும் மையப் படுத்தியதாகவே அமையும். எனினும், இங்கு ஆராய்வுக்குள்ளாகும் விடயங்கள் உலகின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் தேசியம் பற்றிய பிரச்சனைகளிலும், தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எமது நம்பிக்கை. இந்த மகாநாட்டில் இடம் பெறும் ஆய்வுக்கான தலைப்புக்களும் உபதலைப்புக்களும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே நிகழும். அதன் மூலம், எமது கருத்துக்களையும் தந்திரோபயங்களையும் நல்ல முறையில் ஒழுங்கமைத்து, தமிழர்களின் போராட்டத்தை அரசியல் வழியிலும் இராசரீக முறையிலும் நகர்த்திச் செல்ல முடியும்.
இந்த மாநாட்டின் அதி உன்னத நிகழ்வாக இடம்பெறவிருக்கும் ஓர் அம்சத்தையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் சார்பில் அவர்களின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் 'தமிழீழ சுதந்திர சாசனம்' முரசறையப்படும் என்பதனையும் பெருமையுடன் அறியத் தருகின்றோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு.எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தலைமைகளின் கடமை!- பொன்.செல்வராசா
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 11:36.09 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பிரதேசத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் உள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் வாகரை பிரதேச செயலகம், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், வாகரை பிரதேச சபை, வாகரை இலங்கை போக்குவரத்து சபை காரியாலயம் ஆகியவற்றுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம், மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விஜயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா,
தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பிரதேசமாகவும் வாகரை உள்ளது.16 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட இப்பிரதேசம் புறந்தள்ளப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது.
இப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகள் பறிபோகும் ஆபத்தான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.இதனை காப்பாற்ற வேண்டிய கடமை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இது இருக்கின்றது.காணிப்பரம்பல் அதிகமாகவுள்ள இப்பிரதேசத்தில் வடக்கில் மேற்கொண்டது போன்ற காணிப்பு பறிப்பு நடவடிக்கைகளை இப்பகுதியிலும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. யுத்தத்தினால் இப்பிரதேசம் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டபோதிலும் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஏனைய பிரதேசங்களை விட அதிகளவான உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும் ஏனைய வாழ்வாதார நிலைமைகள் மிகமோசமான நிலையிலேயே உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்கின்றபோதிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துணிந்து தட்டிக்கேட்கும் நிறுவனமாகவுள்ளது.
பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
நாங்கள் இங்குவந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சேகரிக்கப்படும் விபரங்களின் முன்னேற்றங்கள் குறித்து அடுத்துவரும் ஆறு மாதங்களுக்குள் நீங்கள் உணரமுடியும் என்றார்.
பக்ஸ் வசதி ஏற்படுத்த உறுதி……………
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக எதிர்கொள்ளப்பட்டுவரும் தொலைநகல் பிரச்சினைக்கு (பக்ஸ்) தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச செயலகத்துக்கான பக்ஸ் வசதியை ஏற்படுத்தி தரதேவையான நடவடிக்கையினை எடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் வாகரை பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது வாகரை பிரதே செயலகத்துக்கும் விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டனர். இதன்போது வாகரை பிரதேசத்தில் தொலைநகல்(பக்ஸ்) இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக நிலவிவருவதாகவும் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பிரதேச செயலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போதே மேற்படி உறுதிமொழியை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளார். இதேவேளை வாகரை பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பக்ஸ் வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கும், வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தொலைநகல்களை அனுப்புவதற்கும் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களுக்கே வரவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையும் இப்பிரதேசங்களில் அதன் சேவைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten