-கவிஞர் வாலி
கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால்,
ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;
தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -
இங்கிருக்கும் சோழத்தமிழன்தான்
அங்கிருக்கும் ஈழத்தமிழன் ;
அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான்
இங்கிருக்கும் சோழத்தமிழன்!
*******
சோழத் தமிழன்
சோர்வு தவிர்க்க- ஓர்
'அண்ணா' வாய்த்தது போல்-
ஈழத் தமிழன்
ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி'
வாய்த்தான்!
*******
முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?
நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ?
*******
பிரபாகரனின் பிதா -
வேலுப்பிள்ளை ; அந்த
வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளையை.....
கதிர்காமத்துக் கந்தனைப் போல்-
வேல் பெற்ற பிள்ளை எனலாம்;
பார்வதியின்-
சூல்பெற்ற பிள்ளை எனலாம்;
ஈழத்தமிழர் - விழி
ஈரமெல்லாம் -
வற்றாத புனலாம்; அவனதை
வற்றவைக்க வந்த அனலாம்!
*******
மாதரசி
மதிவதனியைத் -
திருமணம் முடித்தான்
திருப்போரூரில்;
ஆனால்
அவன் -
அகத்தைப் படிக்காமல்
புறத்தைப் படித்தான்....
தாழ்ந்தும்
தவித்தும்- தன்
இனத்தோரெல்லாம்
இருப்போரூரில் !
*******
தகவார்ந்த
தந்தை செல்வா சென்ற...
காந்தி வழியில்
காரியம் ஆகாதென்று -
நேதாஜி வழியை
நேர்ந்தான் ;
தூர்த்தரைத்
தூர்க்கத் -
துடைப்பம் உதவாதென்று
துப்பாக்கியைத் தேர்ந்தான் !
*******
நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!
*******
ஆலயங்களில் நாம்
ஆராதிக்கும்-
ஆண்டவனாரெல்லாம்
அன்புமழை;
அவர்கள் கரங்களிலேயே
ஆயுதங்கள் இருக்கையில்-
அறத்தைக்காக்க மனிதனும்
ஆயுதம் ஏந்தினால் என்ன பிழை?
*******
தீர்த்தம் விழையாது-
தீனி விழையாது-
தீர்ந்து போனான்
திலீபன் எனும் தீர்த்தன்
கண்ணிழப்பினும்
மண்ணிழக்க மாட்டேன் என்று-
குட்டிமணி என்பான்
கொட்டடியில் ஆர்த்தன் !
*******
எங்கே இருக்குமோ வீரம்;
அங்கே இருக்கும் சோரம்;
உடனிருந்தே உளவு சொன்னது -
ஒரு நா ; அது கரு நா ; அந்தக்
கரு நா பெயர் கருணா!
*******
பிரபாகரன் எனும் சொல் -
ஒளிப்பிழம்பெனப் பிரகாசிக்கும்-
சூரியனைக் குறிக்கும் ;
சூரியனோ
சூழும் இருளைத் தின்று செரிக்கும்!
அது
அத்தமிக்கும் ஓரிடத்தில்;
அதே நேரம்
அவிர்ந்திருக்கும் வேறிடத்தில்;
இருப்பதுமாய்;
இல்லாததுமாய்;
இருப்பதுதான் அது;
அணையா
நெருப்பதுதான் அது!
*******
கண்டேன் சேனல் நான்கை;
அது காட்டியது சிங்களர் தீங்கை;
எரிந்தது என் ஈரக்குலை;
என் சொல்ல அந்த கோரக் கொலை?!
*******
பிரபாகரனின் பிள்ளையே!
வர இருக்கும் வில்லங்கம் புரியாது -
எதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே!
ஆறிரண்டு வயதான அம்புலியே!
காடையர் கண்ணுக்கு-
அம்புலியும் ஆனதென்ன வெம்புலியே!
புலியின் புதல்வன்
புலியானான் என்றால் பொருத்தம்;
புல்லரின் புல்லட்டுக்குப்
பலியானான் என்பதுதான் வருத்தம்!
*******
வண்டு துளைத்தாலே
வலி தாங்காப் பூவே! அஞ்சு-
குண்டு துளைத்துன்னைக்
கொண்டதென்ன சாவே?
சலனம் ஏதுமின்றி
சாவை எதிர்கொண்டாயாமே?
அடடா!
அதுதான் விந்தை!
கவுரவப் படுத்தினாய்
கண்ணா! நீயுன்-
தந்தை
விந்தை !
*******
முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்...
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?
*******
என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!
*******
நன்றி - குமுதம்
தமிழ் தட்டச்சு உதவி: இதயச்சந்திரன்.
Geen opmerkingen:
Een reactie posten