தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!


இலங்கையில் தமிழ் ஊடகத்துறை மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், தாக்குதல் தொடர்பாக உடனடி விசாரணைகள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் பல பாகங்களிலும் அண்மைக்காலமாக ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர் தாக்குதல்களும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கையானது ஒரு ஊடகவியலாளன் மற்றும் ஊடகத்துறையினர் தங்களது சேவை வழங்குவதற்கான தடையையே ஏற்படுத்துவதாகவே அமையும்.இது ஒரு நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் குரலாக இருப்பது ஊடகமாக கணிக்கப்படுகின்றுது. அது சுதந்திரமாக செயற்படுவதன் மூலமே அந்த நாட்டின் ஜனநாயகம் கணிக்கப்படுகின்றது. எனவே அவற்றினை காப்பாற்றவேண்டியது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையுமாகும்.
கடந்த கால யுத்த சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றிய ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்த நிலையில் பலர் இந்த நாட்டை விட்டு வெளியேறிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டிருந்தது. ஆனால் இன்று யுத்த நீங்கி ஒரு சிறந்த சூழ்நிலையில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான ஏதுவான நிலையேற்பட்டிருந்து.
எனினும் அண்மைக்காலமாக வடக்கு பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் ஏற்பட்டுவரும் சம்பவங்கள் ஊடகவியலாளர்கள் மீது பெரும் அழுத்தங்களையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உதயன் பத்திரிகை மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது மிக மோசமான நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இது தொடர்பில் இதுவரையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை.பெரும் பாதுகாப்புகளை கொண்டுள்ள பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும்.
இதேபோன்று மன்னார் பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான அழுத்தங்களும் பயமுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுவருவது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நேற்றும் ஊடகவியலாளர் ஜோசப் பெர்னாண்டோ மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
எனவே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விரைவான நடவடிக்கையெடுத்து, இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten