தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை !!


இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை இராணுவத்தினரிடமிருந்து தப்பித்து - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடல் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 45 ஈழத் தமிழர்கள் பிடிபட்டனர்.
துபாயில் இறக்கி விடப்பட்ட அவர்களுள் 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தரவிட்டுள்ளது என்றும் 8 பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது என்றும் அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது என்றும் ஏற்கனவே 7 பேரை கொழும்புக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை என்றும் அவர்களை துபாய் அரசு கொழும்புக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கு வந்துள்ளன என்றும் அவர்களின் துயரினைக் களைய உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 23-4-2013 அன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலித்ததாகவும், துபாயில் உள்ள அந்த 19 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தகவல் அனுப்பியுள்ளார்.
துபாயில் பிடிபட்டிருந்த அந்த ஈழத் தமிழர்களிடமிருந்தும் அதுபற்றி எனக்குத் தகவல் வந்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும, நிதியமைச்சருக்கும் ஈழத்தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றாலும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன்னல்களைக் களைவதில் இந்திய அரசு இன்னமும் மெத்தனமாகவே இருக்கிறது.
இந்தியாவுடனான எந்த உடன் பாட்டையும் மதிக்காத சிங்கள அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. இவைகளையெல்லாம் மனதிலே கொண்டு தான் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது என்று “டெசோ” சார்பில் நாம் கூறி வருகிறோம்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து போகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, இலங்கையிலே தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6, 381 ஏக்கர் நிலங்கள் சிங்கள இராணுவத்தினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு முதலே யாழ்ப்பாணத்தின் “வலிகாமம்” பகுதி சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது.
இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு, இந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த நிலங்களை சிங்கள இராணுவத்திற்கே சொந்தமாக ஆக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது.
இந்த மாதிரியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணப் பகுதியிலே மட்டுமல்ல, தமிழர்களுக்குச் சொந்தமான கிளிநொச்சி, முல்லைத்தீவு. வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் தமிழர்களுக்குச் சொந்தமான இந்த நிலப்பகுதியில், யாழ்ப்பாணம் மண்டலத்திற்கான இராணுவ தலைமை அலுவலகத்தைக் கட்டுவதற்கும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறதாம்.
தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2, 500 கோவில்களும். 400 கிறித்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, அங்கே சிங்கள வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாம்.
இதைப்பற்றியெல்லாம் அங்கிருந்து தகவல் அனுப்பியிருப்பதோடு, இதனைக் கண்டித்து தமிழர்கள் சார்பில் அங்கே அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில், இந்தப் பிரச்சினையில் முக்கியமாக நமது இந்திய அரசும் மற்றும் உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் உடனடியாக தலையிட்டு, ஈழத்தமிழர்களுக்கு உரிய இந்த நிலங்களை மீட்டு, தொடர்ந்து அவர்கள் அங்கே வாழவும், தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten