தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?


வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:04.55 AM GMT ]
வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிய நிலவி வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
போர் நிறைவின் பின்னர் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் பலவந்தங்கள் வடக்கு மக்கள் மீது திணிக்கப்படுகின்றது.
போரின் பின்னர் வடக்கு கிழக்கில் காணிகளை இழந்தவர்களுக்கு மீளவும் காணிகளை வழங்கியிருக்க வேண்டும்.
அதற்கான திட்டமொன்றை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
எனினும், அந்தக் காணிகளை அரசாங்கத்தின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
வலிகாமம் பிரதேசத்தில் அரசாங்கம் 6381 ஏக்கர் காணியை பலவந்தமாக சுவீகரிக்க முயற்சி எடுத்து வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் தனி இராச்சிய கோரிக்கை மீது தள்ளப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் வடக்கில் சில பகுதிகளில் தங்ளுக்கு ஆதரவானர்களுக்கு காணிகளை வழங்கி அதன் மூலம் தேர்தல் லாபங்களை ஈட்ட முயற்சித்து வருவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு படைச்செறிவு ஆதாரமற்ற குற்றச்சாட்டா?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 03:36.02 AM GMT ]
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையிலும், வடக்கு, கிழக்கு பகுதிகள் இன்னமும் படைச்செறிவு நிலையில் இருந்து விடுபடாத சூழலே தொடர்கிறது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் வெளியிடுகின்ற எல்லா அறிக்கைகளிலும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
ஆனால் அரசாங்கம் அதற்கு காலத்துக்கேற்ப வெவ்வேறு பதில்களை அளித்து வருகிறது.
சில வேளைகளில் படைகளை தொடர்ச்சியாக குறைத்து வந்துள்ளதாகவும் இனிமேலும் குறைப்போம் என்றும் கூறப்படும்.
சில வேளைகளில் வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட்டு விட்டது. அங்கு தேவையானளவு படையினர் தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படும்.
என்னதான் கூறப்பட்டாலும், வடக்கு கிழக்கில் இருந்து போருக்குப் பின்னர் அகற்றப்பட்ட படையினர் எண்ணிக்கை என்பது மிகக் குறைந்தளவு தான் என்பதில் சந்தேகமில்லை.
வடக்கு கிழக்கில் தான் ஒட்டுமொத்த படைகளின் பெரும்பகுதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விடயமல்ல.
இரண்டு லட்சம் பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்தில் ஒன்றரை லட்சம் பேர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு பேட்டியளித்தது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் விசாரணை நடத்தியிருந்தனர்.
இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற கோணத்திலேயே அவர் விசாரிக்கப்பட்டிருந்தார்.
ஒன்றரை லடசம் இராபணுவத்தினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளனர் என்று அவர் கூறிய எண்ணிக்கை சில வேளைகளில் சரியாக இருந்திருக்கலாம்.
ஆனால் வடக்கு கிழக்கில் படைக்குவிப்பு இல்லை என்றும் ஏனைய பகுதிகளைப் போலவே தான் அங்கும் நிலைகொண்டுள்ளனர் என்றும் அரசாங்கம் கூறுவது சரியானால், சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறிய கணக்கு நிச்சயம் இராணுவ இரகசியமாக இருந்திருக்க முடியாது.
ஏதோவொரு வகையில் அவரது கணக்கு உண்மையான இராணுவ இரகசியத்துடன் ஒத்துப் போயிருந்திருக்கலாம்.
அதேவேளை வடக்கில் படைக்குவிப்பு தொடர்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தயா மாஸ்டரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பிய போது அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பதிலளித்துள்ளார்.
அவ்வாறாயின் அவரது பார்வைக்கு படைக்குவிப்பு என்பது பொய்யானது என்றே பொருள். இந்த நிலையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கில் எவ்வளவு படையினர் நிலைகொண்டுள்ளனர் என்று ஆதாரபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொள்வது பொருத்தமானது.
இலங்கை இராணுவத்தில் மொத்தம் 6 பிராந்திய படைத் தலைமையகங்கள் உள்ளன.
அவற்றில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு என ஐந்து படைத் தலைமையகங்கள் வடக்கு கிழக்கில் தான் உள்ளன.
எஞ்சிய ஒரேயொரு படைத் தலைமையகம் மட்டுமே தெற்கில் செயற்படுகிறது.
படைத்தலைமையக ரீதியாகப் பார்த்தால் ஆறில் ஐந்து படையினர் வடக்கு கிழக்கில் தான் நிலைகொண்டிருக்க வேண்டும்.
டிவிஷன்கள், அரைநிலை டிவிஷன்கள் (அதிரடிப்படைப் பிரிவு) என்று பார்த்தால் மொத்தமுள்ள 18ல் 17 டிவிஷன்களும் வடக்கு கிழக்கில் தான் உள்ளன.
அதாவது 22, 23, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66வது டிவிஷன்களே அவையாகும்.
11வது டிவிஷனும் சில பிரதேச படைத் தலைமையகங்களும் மட்டுந்தான் பிற பகுதிகளில் நிலைகொண்டுள்ளன.
இந்தவகையில் 18ல் 17 பங்கு படையினர் வடக்கு கிழக்கில் தான் நிலைகொண்டிருக்க வேண்டும்
அடுத்து பிரிகேட் என்ற வகையில் கணக்கெடுப்பு நடத்தினால் இலங்கை இராணுவம், காலாட்படை மற்றும் சிறப்பு படைக் கொமாண்டோ படை என்று மொத்தம் சுமார் 55 வரையான பிரிகேட்களைக் கொண்டுள்ளது. இவற்றில் வன்னிப் படைத் தலைமையகத்தின் 14 பிரிகேட்களும், கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தின்  கீழ் 12 பிரிகேட்களும், முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கீழ் 7 பிரிகேட்களும், யாழ். படைத் தலைமையகத்தின் கீழ் 10 பிரிகேட்களும், கிழக்குப் படைத் தலைமையகத்தின் கீழ் 10 பிரிகேட்களும் என மொத்தம் 53 பிரிகேட்கள் வடக்கு கிழக்கில் தான் உள்ளன.
பற்றாலியன்களின் கணக்குப்படி இலங்கை இராணுவத்தில் உள்ள மொத்தம் 277 பற்றாலியன்களில் பெரும்பாலானவை வடக்கு கிழக்கில் தான் உள்ளன.
இவற்றுள் நிரந்தர, தொண்டர், சேவை, மருத்துவ, புலனாய்வு, ஆட்டிலறி, கவசப்படைப் பிரிவுகள் என்று அனைத்துப் படைப்பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.
இந்த 277 பற்றாலியன்களில் வன்னிப் படைத் தலைமையகத்தின் கீழ் 43 பற்றாலியன்களும், கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் 39 பற்றாலியன்களும், கிழக்கு படைத் தலைமையகத்தின் கீழ் 48 பற்றாலியன்களும் இருப்பதை அந்தந்தப் பிரதேச படைத் தலைமையகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள பற்றாலியன்களின் அதிகாரபூர்வ கணக்கு இல்லை.
எனினும் முல்லைத்தீவில் 7 பிரிகேட்கள் உள்ளநிலையில் குறைந்தது 21 - 26 வரையிலான பற்றாலியன்கள் அங்கு நிலைகொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் 10 பிரிகேட்கள் உள்ளதால் குறைந்தது 30 தொடக்கம் 35 வரையிலான பற்றாலியன்கள் இங்கிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தவகையில் வடக்கு கிழக்கில் மட்டும் 190ற்கும் குறையாத பற்றாலியன்கள் நிலைகொண்டிருக்க வேண்டும்.
இவற்றில் தற்போது றிசேவ் நிலையில் வைக்கப்பட்டுள்ள 53வது மற்றும் 58வது டிவிஷன்களை சோ்ந்த பற்றாலியன்கள் உள்ளடக்கப்படவில்லை.
அவற்றையும் சோ்த்தால் இந்த எண்ணிக்கை 200 பற்றாலியன்களையும் தாண்டும்.
அதாவது இலங்கை இராணுவத்தின் ஒட்டுமொத்த பற்றாலியன்களின் எண்ணிக்கையில் நான்கில் மூன்று பங்கு வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருப்பது உறுதியாகிறது.
இலங்கை இராணுவத்தில் சராசரியாக ஒரு பற்றாலியனில் 600 படையினர் வரை இருப்பதுண்டு. சிலவற்றில் இந்த எண்ணிக்கை 800 வரை இருக்கும்.
சராசரியாக 600 பேர் ஒரு பற்றாலியன் இருப்பதாக கணக்கிட்டாலும், 200 வரையிலான பற்றாலியன்களிலும் குறைந்த பட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் படையினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்க வாயப்புகள் உள்ளன.
இந்தக் கணக்கில் விமானப்படை, கடற்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, ஊர்காவல்படை என்பன உள்ளடக்கப்படவில்லை. இவற்றையும் சோ்த்தால் அது மிகப்பெரிய தொகையை எட்டும்.
ஏனென்றால் வடக்கு கிழக்கில் கடற்படையும் விமானப்படையும் பாரிய தளங்களையும், பெருமளவு படையினரையும் கொண்டுள்ளன.
அவற்றில் ஆயிரக்கணக்கான படையினர் உள்ளனர். இந்த நிலையிலேயே அரசாங்கமும் படைத்தரப்பும், வடக்கு கிழக்கில் படையினர் குவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் ஏனைய பகுதிகளைப் போலவே அங்கும் நிலைகொண்டுள்ளதாகவும் கூறிவருகின்றன.
ஆனால் இந்தக் கணக்கை வெளியுலகம் நம்பப் போவதில்லை.
யாழ். குடாநாட்டில் இப்போது 13,500 படையினர் மட்டுமே இருப்பதாக யாழ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கூறியிருந்தார்.
ஆனால் யாழப்பாணத்தில் குறைந்தது 30 பற்றாலியன்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிட்டால் கூட 18,000ற்கும் குறையாத படையினர் அங்கு நிலைகொண்டிருப்பர். இதற்குள்ளேயும் விமானப்படை, பொலிஸ், கடற்படை என்பன உள்ளடக்கப்படவில்லை.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் வடக்கு கிழக்கில் குறைந்தது இரண்டு லட்சம் வரையிலான ஆயுதப்படையினரை நிறுத்தி வைத்துள்ளது அரசாங்கம்.
26 லட்சம் பேரைக் கொண்ட வடக்கு கிழக்கில் சுமார் இரண்டு லட்சம் ஆயுதப் படையினர் நிலைகொண்டிருப்பது அதாவது 13 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிலைகொண்டிருப்பது சாதாரண விடயமல்ல.
ஒரு உயர் கொந்தளிப்பு மிக்க போர்ப் பிரதேசத்தில் தான் இத்தகைய படைச்செறிவு இருக்க முடியும்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் இந்தப் படைச்செறிவு பேணப்படுவதானது, வடக்கு கிழக்கில் இன்னமும் உண்மையான அமைதி திரும்பிவிடவில்லை என்ற உண்மையைத் தான் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்கிறது.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten