ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்வதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பனாகொட இராணுவ தளத்தில் நேற்று, சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தீவிரவாதத்தை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு, அதற்கு வெவ்வேறு அடைமொழிகளைக் கொடுப்பதை விட்டு விட்டு, அதன் இயல்பைப் புரிந்து கொண்டு உறுதியாகப் போரிட வேண்டும்.
தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்கே நடக்கிறது என்பது முக்கியமில்லை. அது ஆசியாவில், அரேபிய நாடுகளில் அல்லது வேறேங்கும் நடக்கலாம். எங்கு நடந்தாலும் தீவிரவாதம், தீவிரவாதம் தான்.
சிறிலங்கா தீவிரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும், இன்னமும் பல நாடுகள் அதன் பிடியில் சிக்கியுள்ளன.
சக்திவாய்ந்த நாடுகளின் நகரங்களில் கூட இன்று குண்டுகள் வெடிக்கின்றன.
2009இல் சிறிலங்கா துப்பாக்கிகளை மௌனமாக்கியது.
அதன் பின்னர், ஈழம்வாதிகள், ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என்று புரிந்து கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் வெளிநாடுகளில் வசிக்கும் எஞ்சிய தீவிரவாதிகள் நாட்டைப் பிரிக்க புதிய தந்திரங்களை கையாள்கின்றனர்.
நாட்டுக்கு எதிராக எவரும் ஆயுதம் ஏந்த சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
தாய்நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் அரசாங்கம் இடமளிக்காது.
1505ம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் படையெடுத்து வந்த போது தான் சிறிலங்கர்கள் முதன்முதலில் பீரங்கிகளைக் கண்டனர். ஆனாலும் அதிர்ச்சியடையவில்லை.
சில ஆண்டுகளில் சிறிலங்கர்கள் சொந்தமாக பீரங்கிகளை வடிவமைத்து எதிரிகளுக்கு எதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.
இருந்தாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, சிறிலங்கா பெருமளவு ஆயுதங்களைப் பெறுவதற்கு வெளிநாடுகளின் உதவியை கோர வேண்டி ஏற்பட்டது.
நாம் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டிய தேவை உள்ளது. எமக்குத் தேவையானவற்றை எமது மண்ணிலே நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரின் போது, பீரங்கிப் படைப்பிரிவு முக்கியமான பங்காற்றியதுடன் பலரது உயிர்களையும் பாதுகாத்தது.
இந்தப் படைப்பிரிவு 23 அதிகாரிகளையும் 529 படையினரையும் போரில் இழந்துள்ளது.
மேலும் 18 அதிகாரிகளும் 300 படையினரும் நிரந்தரமாக காயமடைந்துள்ளனர்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten