மனித உரிமைகள் உள்ளடங்கலாக பொதுநலவாய அமைப்பின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள் மீறப்படுவது தொடர்பாக ஆராய்கின்ற இதன் தலைவர்களைக் கொண்ட பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கை குழு தற்போது லண்டனில் கூடியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் கீழுள்ள சிறிலங்கா அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கப் படைகளால் போரின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
2009ல் யுத்தம் முடிவுற்றதிலிருந்து சிறிலங்கா அரசாங்கமானது அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டமை, சிவில் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுதல், நீதித்துறை மற்றும் ஏனைய ஜனநாயக நிறுவகங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாக உள்ளது. 2009ல் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா முன்வைத்த குற்றச்சாட்டை சிறிலங்கா விசாரணை நீதிமன்றம் ஒன்று பெப்ரவரியில் நிராகரித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
“சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாடு நடாத்தப்பட்டால் இந்த அமைப்பானது அனைத்துலக நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். ஏனெனில் பொதுநலவாய அமைப்பின் முதன்மையான கோட்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மிக மோசமாக மீறியுள்ளது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை சுயாதீனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்பர் சிறிலங்காவில் நவம்பரில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் பங்கு பெறும் உச்சிமாநாட்டில் பங்குபெறமாட்டார் என கனேடிய அரசாங்கம் மார்ச் 14 அன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் நடாத்தாது வேறு நாட்டில் நடாத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், சிறிலங்கா வாழ் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக எடுத்துக் கூறியபோது இந்தியாவின் கப்பற்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஏப்ரல் 02 அன்று வலியுறுத்தியிருந்தார்.
பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டை சிறிலங்கா நடாத்துவதற்கு அனுமதித்தால், பொதுநலவாய அமைப்பின் முதன்மைக் கோட்பாடுகள், நம்பகத்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் போன்றன கேள்விக்குறியாகும் என ஏப்ரல் 15 அன்று இந்த அமைப்பின் சட்டவாளர் சங்கம், சட்டக் கல்விச் சங்கம், நீதிபதிகள் சங்கம் போன்றன இணைந்து வெளியிட்ட பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், கனடா, ஜமைக்கா, மாலைதீவு, சியராலியோன், தன்சானியா, ரினிடட்,ரொபாக்கோ, வனுவாற்று போன்ற நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பொதுநலவாய அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவானது, இதன் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் நடத்தாது வேறு நாட்டில் நடத்துவது குறித்து கலந்துரையாடமாட்டாது என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவின் பேச்சாளர் ஒருவர் மார்ச் 26ல் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது கருத்துக்களை பெப்ரவரி 06 அன்று பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவருக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தது. அதில் 2013ல் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் நடத்துவது தொடர்பாக மீள ஆராயவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
2011ல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஏனைய உள்நாட்டு மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவரிடம் வழங்கிய கடிதத்தில் சிறிலங்காவில் 2013 உச்சிமாநாட்டை நடாத்துவதற்கு பின்வரும் முன்நிபந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தன. அவற்றை தற்போது வழங்கிய கடிதத்திலும் இணைத்துள்ளன. சிறிலங்கா தொடர்பில் கவனிக்கப்பட வேண்டிய முன்நிபந்தனைகள் பின்வருமாறு:
அனைத்துலக மனித உரிமைகள் சாசனங்களை ஏற்றுக்கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் மனித உரிமைகள் மதித்து நடப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் அனைத்துலக மனித உரிமை நியமங்கள் பேணப்பட வேண்டும்.
சிறிலங்கர்கள் அனைவரும் சமகுடிமக்களாக மதிக்கப்பட்டு கௌரவத்துவடன் நடத்தப்படவேண்டும். சிறிலங்கர்கள் அனைவரும் தமது அடிப்படை உரிமைகள் அனுபவிப்பதற்கான தகுந்த சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக அரசியல் ஏற்பாடுகளை மீள நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் மூன்று பிரதான துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான முறையில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களைப் பாதுகாக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு இவற்றை உறுதிப்படுத்தும் முக்கிய அரசாங்க நிறுவகங்களின் சுதந்;திரம் மீள நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் மீறப்படுவது தொடர்பாக குறிப்பாக 2009ல் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான நம்பகமான உள்நாட்டு மற்றும் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.
ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகம் அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இதற்கும் அப்பால், 2013ல் சிறிலங்கா பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதுடன், 2013 தொடக்கம் 2015 வரை இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் சிறிலங்காவானது இந்த அமைப்பின் மனித உரிமைகள் தொடர்பான நம்பகத்தன்மையை குழிதோண்டிப் புதைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten