விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த போராளி. அவர் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் கே.பி., தயா மாஸ்டர் ஆகியோர் போட்டியிடுவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர் போன்றோரை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கி எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென நினைப்பது அரசாங்கத்தின் முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகிறது.
கே.பி., தயா மாஸ்டர் ஆகியோர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் ஒரு போதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
பிரபாகரனின் பிரிவினை வாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக பிரபாகரனை எதிர்க்கின்றோம். ஆனால் ஒரு போராளி என்ற ரீதியில் பிரபாகரன் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. கே.பி., தயா மாஸ்டர் போன்றோர் பணத்துக்காக போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் இவர்களை ஆதரிக்கமாட்டார்கள் நிராகரிப்பார்கள்.
இத் தேர்தலில் கள்ள வாக்குகளை போட்டு எப்படியாவது வெற்றி பெற அரசாங்கம் முயற்சித்தால் அது சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கும். ஏனென்றால் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். மறைமுகமான ரீதியிலும் சர்வதேச கண்காணிப்பு முடக்கி விடப்படும்.
பொலிஸ் காணி அதிகாரங்களை இரத்து செய்துவிட்டே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை நாம் எதிர்ப்போம். அத்தோடு இத் தேர்தலை நடத்தினால் அமைச்சர்கள் சிலர் அரசை விட்டு வெளியேறுவார்கள். இதுவே அரசாங்கத்திற்கு சாவு மணியாக அமையும்.
எனவே வட மாகாண சபை தேர்தலை நடத்துவது மீண்டும் பிரிவினைவாதத்திற்கு ஊக்க மருந்து வழங்கப்படுவதாகவே அமையும். யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்த போதும் வட பகுதியில் சீனித் தொழிற்சாலையோ சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையோ அல்லது வேறெந்த தொழிற்சாலைகளோ ஆரம்பிக்கப்படவில்லை. இதுவரையில் புகையிரதப் பாதையும் போடப்படவில்லை. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லை. எம் மக்களது உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எனவே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten