தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

முதல்ல குடியுரிமை கொடுங்க! அப்புறமா அறிவுரை சொல்லலாம்! தமிழக அதிகாரியை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள் !


 [ விகடன் ]
உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, படகு பழுதாகி 120 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக தமிழகக் கடலோரக் காவல் படையினர், தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டனர். முதல் கட்டமாக, மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகா​முக்கு வந்தார், தமிழகக் கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி-யான சைலேந்திர பாபு.
கூட்டத்தில் பேசிய சைலேந்திர பாபு, ஒரு படகின் படத்தைக் கூட்டத்தினரிடம் கொடுத்து, ''இதோ... இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தச் சின்னஞ்சிறிய படகில்தான் 120 பேர் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர்.
நாகையில் இருந்து அவுஸ்திரேலியா 5,700 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கிறிஸ்துமஸ் தீவும் சுமார் 5,600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நல்ல படகில் சென்றாலே, 20 நாட்கள் ஆகும். மீன்பிடிப் படகில் எல்லாம் அங்கே போகவே முடியாது.
ஆனால், பண ஆசை காரணமாக உங்களை ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தலா 1.5 லட்ச ரூபாய் பணம் வாங்கியிருக்கின்றனர். ஆனால், அந்தப் படகில் உட்காரக்கூட இடம் இல்லை. 20 பெண்கள், 23 பேர் குழந்தைகள் இருந்தனர். அவர்களால் இயற்கை உபாதை​யைக் கழிக்கக்கூட வழி கிடையாது.
நடுக்கடலில் கடல் கொந்​தளிக்கும். படகு தத்தளிக்கும். யாரிடமும் பாது​காப்புக் கவசம்​கூட கிடையாது. படகில் அவுஸ்திரேலியா வரை போக முடியாது என்பது அந்த படகோட்டிக்குத் தெரியும். அதனால்தான் குறிப்பிட்ட தூரம் சென்றதும், அவர்களை நடுக்கடலில் தவிக்க​ விட்டு​விட்டு வேறு படகில் தப்பியோடிவிட்டான்.
இது முதல் தடவை அல்ல. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இலங்கையில் இருந்து இதேபோல அவுஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற 30 பேர், நாகையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் தத்தளித்தனர். மீன்பிடிக்கப் போன தமிழக மீனவர்கள்தான் அவர்களை மீட்டனர். நான்கு நாட்கள் கொலைப்பட்டினி கிடந்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில் 580 தமிழர்கள் இவ்வாறு படகில் செல்ல முயன்றபோது, கடலுக்குள் முழ்கி இறந்திருக்​கின்றனர்.
மறுபடியும் சொல்கிறேன், படகில் ஒருபோதும் அங்கே போக முடியாது. அப்படிச் சொல்லி யாராவது பணம் கேட்​டால், உடனே எங்களுக்குத் தகவல் கொடுங்கள். உங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து, அவர்கள் வெளிநாட்டு வேலைக்குப் போகட்டும். அங்கே அவர்கள் நன்றாக இருந்தால், உங்களையும் அழைத்துப் போவார்கள்'' என்று பேசினார்.
பேசி முடித்துவிட்டு காரில் ஏறப்போன சைலேந்திரபாபுவை முற்றுகையிட்ட அகதிகள், ''ஐயா, படகில் போவது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களைவிட எங்களுக்கு நன்றாகத் தெரியும். இலங்கையில் இருந்து சாதாரண வள்ளத்தில் (படகில்) வந்தவர்கள்தான் நாங்கள்.
இங்கு இருந்து உயிரைப் பணயம் வைத்துச் செல்கிறோம் என்றால், என்ன அர்த்தம்? நாங்கள் இங்கே சுகமாக வாழவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு அறிவுரைகள் எல்லாம் தேவையில்லை. எங்கள் தலைமுறை வாழ வேண்டுமானால், இங்கேயே குடியுரிமை கொடுங்கள்'' என்றனர்.
இதுபற்றி அகதிகளில் ஒருவரான இந்திரனிடம் கேட்டோம். ''எங்களில் நிறையப் பேர் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள். பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, அவர் சொல்வதுபோல் எளிதான காரியம் அல்ல. பக்கத்து ஊருக்குப் போக வேண்டும் என்றாலே, அனுமதிக்காக இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம்.
இதில் எங்கே சட்டப்படி வெளிநாடு போவது? பட்டதாரிகள் பலர் வேலை கிடைக்காமல் தொங்கு சாரத்தில் தொங்கிக் கொண்டு பெயின்ட் அடித்து பிழைப்பை ஓட்டுகின்றனர்'' என்றார் வேதனையுடன்.
தமிழ்செல்வி என்ற பெண்ணோ, ''இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள் இன்னமும் அகதியாகவே இருக்கிறோம். ஆனால், நேரடியாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்கள் குடியுரிமை பெற்று, செல்வந்தர்களாக மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
ஆனையூர் முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. புறாக்கூடுபோல சின்னச்சிறிய வீடு. 24 வீடுகளுக்கு ஒரே ஒரு மின் இணைப்புதான். வெறும் சென்ட்ரிங், தகரக் கூரை போட்ட வீட்டில் மின்விசிறிகூட இல்லாமல் வாழ்கிறோம்.
அகதிகள் ரேஷன் கார்டை வைத்து ஒரு சிம் கார்டுகூட இங்கே வாங்க முடியாது. படித்த பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கிடைப்பது இல்லை. பங்களாதேஷ், திபெத் அகதிகளுக்கு இருக்கும் மரியாதைகூட எங்களுக்கு இல்லை. ஆனால், அங்கே போகாதே... இங்கே போகாதே என்று அதிகாரம் செலுத்துவதில் மட்டும் பஞ்சம் இல்லை'' என்றார் வேதனையுடன்.
ஈழத்தைத்தான் காக்கவில்லை. இருக்கிற ஈழத் தமிழர்களையாவது காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten