முல்லைத்தீவு, கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு! ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல்கள்!
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
சொந்த ஊரில் அகதி
ஏற்கனவே கோம்பாவில் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடத்திலேயே அகதி முகாம் அமைத்து குடியமர்த்தப்பட்டுள்ளன.
இதில் 136 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளன.
இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை படையினரிடம் இருந்து விடுவித்து அங்கு தம்மை மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை, சமுர்த்தி நிவாரணம் இல்லை, தொண்டு நிறுவனங்களது உதவிகளோ, தற்காலிக வீடுகளோ இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறோம் என்கின்றனர் அந்த மக்கள்.
இந்த குடிசைகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவிக்கையில்;
போரால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களே இங்கு இருக்கின்றனர். பெண் தலைமை குடும்பங்கள், ஊனமுற்ற குடும்பங்கள், முன்னாள் போராளிகளாக இருந்த குடும்பங்கள் என்று வாழ்வாதார நிலையில் பெரும் நெருக்கடிகளே அதிகம்.
குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. இதற்காக நாங்கள் தினமும் 300 மீற்றர் வரை அலைய வேண்டும். மருத்துவ, கல்வி சேவைகளுக்கு அதைவிட நெருக்கடி நிலையே எதிர்கொண்டுள்ளோம்.
முன்பள்ளி பருவத்தில் 15 வரையான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்று வரை மர நிழலிலேயே கற்று வருகின்றனர்.
மலசலம் கழிப்பதற்கு கூட இரவு வரும் வரை காத்திருக்கிறோம் என்கிறார் அந்தப்பெண்.
இதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நான் ஒரு அங்கத்தவர். எனக்கு அரச, அரச சார்பற்ற எந்த உதவிகளும் இல்லை.
காரணம் ஒரு அங்கத்தவர் என்பதே எனக்கு எந்த அரச உதவிகளையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உயர்பாதுகாப்பு வலயத்தில் எனக்கு 5 ஏக்கர் காணியுள்ளது. அதை என்னிடம் ஒப்படைத்தாலே போதும்” என்றார்.
சொந்த இடத்தில் நாங்கள் அகதிகளாக இருக்கிறோம். எங்களை ஏன் என்றும் கேளாது அரசு தனது பாட்டுக்கு காணிகளை அபகரிக்கிறது. ஏன் இந்த அநியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்
அந்தப் பகுதியில் முடியாதிருக்கும் வயதான பெண் ஒருவர்.
தனக்கு துணைக்கு யாரும் இல்லை என்று குறிப்பிடும் அந்த மூதாட்டி படுத்துறங்குவதற்கு ஒரு குடிசையை அமைப்பதற்கு கூட எனக்கு உதவ யாரும் வரவில்லை என்று கவலை கொள்கிறார்.
எது எப்படியோ காணி எடுத்தல் அலுவலகம் சார்பாக முல்லைத்தீவு, கேப்பாபுலவில் 526 ஏக்கர் காணி பறிக்கப்படுகிறது. இவற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல!
நிலாந்தன்
தகவல் புரட்சி நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகின்றது. நிதி மூலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையில் கூறின் உலகம் மேலும் மேலும் திறக்கப்பட்டு வருகிறது.
இப்பொறிமுறைக்கு எதிராக நாடுகளையும் சமூகங்களையும் மூடமுற்படும் அரசாங்கங்களோ அல்லது அமைப்புக்களோ இப்பொறிமுறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்படும் நாடுகளோடு அல்லது நாடுகளின் கூட்டமைப்போடு மோத வேண்டிவரும்.
இலங்கைத் தீவைப் பொறுத்த வரை விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது மூடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளை மீறி யாரும் அதைக் கையாள முடிந்ததில்லை.
அதற்குள் ஊடுருவவும் முடிந்ததில்லை. அதாவது, விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது ஒரு இரும்புக் கோட்டையைப் போல மூடப்பட்டதாகக் காணப்பட்டது.
ரணில் – பிரபா உடன்படிக்கை காலத்தில் இக்கோட்டையைத் திறந்து விடுதலைப்புலிகளை நெகிழச் செய்து தமது வழிக்குக் கொண்டுவர மேற்கு நாடுகள் முயற்சித்தன.
ஆனால், அது நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பது என்ற முடிவை எடுத்ததன் மூலம் விடுதலைப்புலிகள் மேற்கு நாடுகளின் முயற்சிகளுக்கு வரையறைகளை ஏற்படுத்தினர்.
எனவே, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது என்ற முடிவை ஏறக்குறைய எல்லா நாடுகளும் எடுத்தன. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு தமிழ் மக்களின் அரசியல் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிங்கள மக்களின் அரசியல் அரங்கு மூடப்பட்டுவிட்டது.
நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல.
இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன.
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வெளி என்பதே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கத்தை விட தீவிர தேசிய சக்தி எதுவும் நாட்டில் இப்பொழுது இல்லை. யுத்த வெற்றிவாதத்தின் மீது சிங்கள மக்களின் அரசியல் கட்டியெழுப்பட்டுவிட்டது. வெற்றியின் உச்சிக் கோபுரத்தில் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கின்றார்கள்.
வெற்றிக் கோட்டையைத்தாண்டி யாரும் உள்நுழைய முடியாது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்தவரை தமிழ் மக்களின் அரசியல் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பொழுது சிங்கள மக்களின் அரசியலும் காணப்படுகிறது.
மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் ஒன்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றன அல்லது ஆட்சியாளர்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றன. ஆனால், தேர்தல் வழிமுறைகளின் ஊடாகவோ அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளின்; மூலமாகவோ இப்போது ஆட்சியிலிருக்கும் வம்சத்தை எளிதாக அசைத்துவிட முடியாது.
ஏனெனில், இந்த அரசாங்கம், சிங்கள மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியின் பிரமாண்டம் அத்தகையது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த அரசாங்கத்திற்கு சவாலாக எழக்கூடிய ஜனவசியம் மிக்க ஆளுமைகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. யுத்த வெற்றிவாதத்தின் இரும்புக்கோட்டையைத் தகர்த்து மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கு வெளியாரின் பின்பலம் வேண்டும்.
ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு வெளிச்சக்திகள் அரசாங்கத்திற்கு எதிரான தரப்புக்களை ஆதரிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சாதாரண சிங்கள பொதுசனங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். வெளியாரின் உதவியோடு அரசாங்கத்தை எதிர்க்கும் எவரும் யுத்த வெற்றிவாதத்தின் முன் துரோகியாகவே கருப்படுவார். யுத்தத்தின்கிடைத்தற்கரிய வெற்றிகளை வெளியாருக்குக் காட்டிக் கொடுக்கும் ஒருவராகவே அவர் பார்க்கப்படுவார். யுத்தவெற்றி நாயகர்களில் ஒருவரான தளபதி சரத் பொன்சேகாவுகு;கு இது தான் நடந்தது.
மூடப்பட்டுள்ள சிங்கள மக்களின் அரசியலுக்குள் உள்நுழைய முற்பட்ட குமார் குணரத்தினமும் தோல்வியோடு பின்வாங்க வேண்டியதாயிற்று. இப்பொழுது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகாவைப் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது.
ஆனால், இலங்கைத்தீவின் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தவல்லதும் யுத்த வெற்றி வாதத்தை மீறி எழுமளவிற்கு ஜனவசியம் மிக்கதுமாகிய ஆளுமைகள் எதையும் உடனடிக்கு தென்னிலங்கை அரசியல் அரங்கில் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு கதைக்காகவேனும் ஆட்சியாளரிடத்தில் மனமாற்றங்களை ஏற்படுத்தவல்ல ஒரு போதிசத்வரையும் காணமுடியவில்லை.
எனவே, இரும்புக் கோட்டையாக மூடப்பட்டுள்ள தென்னிலங்கை அரசியல் அரங்கினுள் ஊடுருவ மேற்கு நாடுகளாலும் முடியவில்லை. இந்தியாவாலும் முடியவில்லை. இதனாற்தான் ஆகக்குறைந்தது அரசாங்கத்தையாவது அவர்கள் கையாள வேண்டியிருக்கின்றது. கடந்த இரண்டு ஜெனிவா கூட்டத்தொடர்களின் போதும், கூட்டத்தொடர்களின் பின்பும் இதுதான் நடந்தது.
மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இலங்கைத்தீவில் இப்போது திறக்கப்பட்டுள்ள ஒரே கதவு தமிழ் அரசியல்தான். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியோடு அது முற்றாகத் திறக்கப்பட்டுவிட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகக் காணப்படுவது அதனுடைய அடிப்படைப் பலம். இது காரணமாகவே அது அனைத்துலக அரங்கில் விடுதலைப்புலிகளை விடவும் கூடுதலான அங்கீகாரத்தோடு காணப்படுகிறது. இது மற்றொரு பலம்.
ஆனால், ஒரு பொது இலட்சியத்தின் அடிப்படையில் தனக்குள் ஐக்கியப்பட முடியாத கட்சி அது. ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச்செல்லவல்ல தீர்க்க தரிசனமோ படைப்பாற்றலோ அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள அரசாங்கம் தனது சொந்த வெற்றியின் கைதியாக உள்ளது. வெற்றிச் சிறையைவிட்டு வெளியே வந்ததாற்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிச்சிந்திக்கலாம். ஆனால், இந்த அரசாங்கம் வெற்றிச் சிறையை விட்டு வெளியே வரமுடியாது.
ஏனெனில், அது எத்தகைய தீவிர தேசிய சக்திகளுக்குத் தலைமை தாங்குகின்றதோ அவற்றை மீறி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாது. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்திடமிருந்து தீர்வு எதையும்பெற முடியாது. இந்த அரசாங்கம் தரக்கூடியதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தமிழர்கள் கேட்பதை இந்த அரசாங்கம் கொடுக்கப்போவதுமில்லை. தன் சொந்த வெற்றிச் சிறைக்குள்ளிருந்து வெளிவர முடியாத ஓர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடத் தேவையான திடசித்தமோ தீர்க்கதரிசனமோ தியாக சிந்னையோ அதற்குரிய பாரம்பரியமோ படைப்புத் திறனோ கூட்டமைப்பிடம் இருப்பதாகத்தெரியவில்லை.
எனினும் எல்லாப் பலவீனங்களுக்கும் அப்பால் ரி.என்.ஏ.தான் இப்பொழுது தமிழ்த் தரப்பாகக் காணப்படுகிறது. மொட்டைக் கத்தி என்றாலும் உறைக்குள் இருப்பது அந்தக் கத்திதான். அமெரிக்காவும் இந்தியாவும் அதைத் தான் கையாள முடியும். மற்றது தமிழ் டயஸ்பொறா.
டயஸ் பொறாவிலும் ஒற்றுமை இல்லை. ஒரு பொதுத் தமிழ் நிதியத்தை உருவாக்க முடியாத அளவிற்கும் ஒரு தமிழ் அறிவியல் நடுவத்தை கட்டியொழுப்ப முடியாத அளவிற்கும் சிதறிக் காணப்படும் ஒரு டயஸ்பொறா அது. அனைத்துலக அரங்கில் தமிழர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தரப்பாக மேலெழ முடியாமைக்கு; டயஸ்பொறாவிற்குள் காணப்படும் ஐக்கியமின்மையும் ஒரு முக்கிய காரணம்.
களத்திலும் புலத்திலும் ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனவசியம் மிக்க ஒரு தலைமைத்துவம் தமிழர்களுக்கு இப்பொழுது இல்லை. விடுதலைப்புலிகள் இருந்த வரை சரிகளோடும் பிழைகளோடும் களத்திலும் புலத்திலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வழங்கினார்கள்.
இப்பொழுது அது வெற்றிடமாகவுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பவல்ல தீர்க்க தசரினமும் அரசியலில் படைப்பாற்றாலும் மிக்க பேராளுமைகள் மேலெழும் போதே அனைத்துலக அரங்கிலும் உள்நாட்டிலும் தமிழர்கள் கேள்விக்கிடமற்ற ஒரு தரப்பாக நிமிர முடியும்.
அத்தகைய பேராளுமைகள் அற்ற ஒரு வெற்றிடத்திலேயே இந்தியாவும் மேற்கு நாடுகளும் தமிழ் அரசியலை கையாள வேண்டியிருக்கிறது. இதனால், தமிழர்கள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலோடு பொருந்தச் செய்வதற்குப் பதிலாக சக்தி மிக்க நாடுகளின் கருவிகளாகவோ அல்லது அழுத்தக் குழுக்களாகவோ அல்லது அரசியல் நொதியங்களாகவோ சுருங்கிப்போகும் அபத்தும் உண்டு.
எனவே, மேற்கண்டவைகளைத் தொகுத்துக் கூறின் இலங்கைத்தீவில் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் பொறுத்த வரை மூடப்பட்டுள்ள தென்னிலங்கை அரசியலை திறப்பதிலும் வரையறைகள் உண்டு. அதேசமயம், திறக்கப்பட்டுள்ள தமிழ் அரசியலைக் கையாள்வதிலும் வரையறைகள் உண்டு.
மொத்தத்தில் இலங்கைத்தீவில் அனைத்துலக சமூகத்திற்கான தெரிவுகள் மிகவும் சுருங்கிப் போயியுள்ளன. அதாவது, புலிகளைத் தோற்கடித்த பின்னரும், அனைத்துலக சமூகமானது கடந்த நான்காண்டுகளாக இலங்கைத்தீவில் தமக்குச் சாதகமான தெரிவுகளை உருவாக்க முடியவில்லை என்று அர்த்தம்.
Geen opmerkingen:
Een reactie posten