தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்!!


தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:39.45 PM GMT ]
ஈழத் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்திற்கு தென்சூடான என்றும் துணையிருக்கும் எனத் தெரிவித்துள்ள தென்சூடானிய அரச பிரதிநிதிகள், அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நியாயப்பாட்டுக்கு வலுவூட்டும் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கும் பக்கதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ சுதந்திர சாசனம் உருவாகி வரும் இவ்வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தென்சூடானில் உத்தியோகமுறை உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்தியுள்ளது.
இச்சந்திப்புக்களிலேயே தென் சூடானிய உயர்மட்ட அரச பிரதிநிதிகளின் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க நாடுகளை வளைத்துப் போடும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணங்களை சமீபத்திய காலங்களில் மேற்கொண்டுவரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இப்பயணம் அமைந்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் அவர்கள் தலைநகர் யூபாவில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததோடு, தமிழர்களின் மென்வலுவினை வளப்படுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - தென் சூடானிய அரசாங்கம் கூட்டாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் மற்றும் உடன்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தென்சூடானிய அரசாங்கத்தின் துணை அரசுத் தலைவர் Dr Riek Machar Teny, ஊடகத்துறை அமைச்சர் Dr Barnaba Marial Benjamin, உடல்நலத்துறை துணை அமைச்சர் Dr Yatta Lori Lugor உட்பட பல்வேறு மட்டங்களில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
அனைத்துலக அரங்கில் இராஜதந்திரச் அரசியல் கூட்டுச்செயற்பாடுகள் மற்றும் தென் சூடானில் தமிழ் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளக்கூடிய வர்த்தக வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை உலகத் தமிழர்களின் முரசறைவாக அமெரிக்காவில் மே-18ம் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் தென்சூடானிய அரசுத் தலைவர் பங்கெடுத்துக் கொள்வாரா என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.


செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 01:56.52 PM GMT ]
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும், திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும், குடும்பத்துடன் தாங்கள் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவ்வப்போது உண்ணா நிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது. இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் இதுவரை அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வில்லை.
இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமை சேர்ந்த ஈழ நேரு, செல்லக்குமார் மற்றும் சிறிகாந்தன் ஆகிய மூவர்களும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அவர்களை வலுக் கட்டாயமாக அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது.
எனினும், மருத்துவமனையிலும் இந்த மூன்று தமிழர்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதில் சிறிகாந்தன் என்பவர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயற்படாது என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் சிறப்பு முகாமில் உள்ள 13 முகாம் வாசிகள் அங்குள்ள மரத்தின் மீதி ஏறி போராட்டம் செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ளவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மரத்தில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 26 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் மரத்தின் மீதே இருந்து வருகின்றனர்.
இது குறித்து அரசு வழக்கம் போல மௌனமே சாதித்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடாமல் இருப்பது தமிழ் உணர்வாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
ஈழத்தில் தான் தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கி கடும் துயரை அடைந்து வருகின்றனர். தாய் தமிழகத்திலும் ஈழ தமிழர்களுக்கு அதே நிலை தானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழீழ ஆதரவாளர்கள்.
அரசு இதை கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten