தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

அமெரிக்கா அனுப்பியுள்ள தூதுவரும் இந்தியா அனுப்பவுள்ள தூதுவரும்


காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றும் பணியில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஈடுபட்டிருக்கும் ஒளிப்படங்கள் தான். கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான பெரும்பாலான நாளிதழ்களின் முகப்பை அலங்கரித்திருந்தன.
உலகம் முழுவதிலும் கடந்த ஏப்ரல் 22ம் திகதி கொண்டாடப்பட்ட புவி நாளை முன்னிட்டே அமெரிக்கத் தூவர் காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் மற்றும் அமெரிக்கப் பணியாளர்கள் 40 பேரும் இந்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் உலகப் புவி நாளை 1970ல் அமெரிக்க செனட் உறுப்பினர் கேலோட் நெல்சன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த நாளை பில்லியன் கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இதற்கு முன்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்ததில்லை.
அதுபோலவே எந்தவொரு அமெரிக்கத் தூதுவரும் வீதியிலோ கடற்கரையிலோ இறங்கி குப்பைகளை அகற்றியதும் இல்லை.
காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றி ஒரு முன்னுதாரணமாக அமெரிக்கத் தூதுவர் செயற்பட்டிருந்த அதேவேளை, இன்னொரு வகையில் இதனை, இலங்கை மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கான ஒரு குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த 19ம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிட்ட நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் 2012 என்ற அறிக்கையில் மீண்டும் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அரச நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கும் ராஜபக்ச குடும்ப நிர்வாகம் தொடக்கம் பாலின சமத்துவமின்மை வரைக்கும் எல்லாவிதமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் அமெரிக்கா பட்டியலிஜட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது முற்றாக நிராகரித்திருந்தார்.
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துவதும், அதனை இலங்கை மறுப்பதும் வழக்கமாகி விட்டது.
இந்தச் சூழலில் தான் காலிமுகத்திடலில் குப்பைகளை அகற்றும் பணியில் அமெரிக்கத் தூதுவர் சிசன் ஈடுபட்டிருந்தார்.
கடந்த ஆண்டில் பதவியைப் பொறுப்பேற்ற அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன், இலங்கை அரசாங்கத்தினால் கடுமையாக வெறுக்கப்படும் ஒருவராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டதும் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து செனட் உறுப்பினர்களிடையே நிகழ்த்திய உரை இலங்கை அரசாங்கத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அப்போது இலங்கை அரசாங்கம் அது குறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தது மட்டுமன்றி இவரது நியமனத்தை மறுக்குமா? என்று கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தது.
உலகில் போர்கள் நடைபெற்ற முக்கியமான பல நாடுகளில் தூதுவராகவும், இராஜதந்திரியாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க சிசன், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட போது, அது அமெரிக்காவின் கடுமையானதொரு போக்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவர் இலங்கையில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர், எதுபற்றியும் வாய்திறக்காமல்  இருந்தது இலங்கை அரசாங்கத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கையில் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப்பார்த்து நிலைமைகளை அறிந்துகொண்ட பின்னர், இப்போது கொழும்பில் இருந்தபடியே காய்களை நகர்த்த் தொடங்கியுள்ளார் அவர்.
எந்தவொரு நாட்டின் தூதுவரும் வீதியிலோ கடற்கரையிலோ இறங்கிச் செய்யாத துப்புரவு பணியில் ஈடுபட்டதன் மூலம் மிச்சேல் சிசன் தன்னை ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டவராக இலங்கைக்கு காண்பித்துள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் அதிகமான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தாலும், எந்தளவு காலத்துக்கு இந்த இழுபறி நீடிக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால் இந்த இழுபறியின் தாக்கம் அரசியல் இராஜதந்திர அரங்குகளுக்கு வெளியே பொருளாதார ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் அது குறித்து கவலைப்பட்டேயாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது.
அமெரிக்கா மட்டுமன்றி இந்தியா கூட இப்போது இலங்கைக்குத் தலைவலி மிக்கதொன்றாகவே உள்ளது.
ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் சற்று தேக்கமான நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னரைப் போன்றெல்லாம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் இரு நாடுகளினதும் தலைவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகளின் அதிகாரபூர்வ பயணங்கள் அடிக்கடி இடம்பெறுவதில்லை.
ஆனால் புதுடில்லியும் கொழும்பும் தமக்கடையிலான உறவுகளில் எந்த விரிசலும் கிடையாது என்று அடிக்கடி கூறிக்கொள்கின்றன.
கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில் புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருவித இறுக்க நிலை இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.
இந்தச் சூழலில் இந்த மாத இறுதியுடன் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கொழும்பில் பணிகளை முடித்து வெளியேறவுள்ளார்.
அவர் இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்காசிய பிரிவுக்கான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கொழும்புக்கான அடுத்த தூதுவர் யார் என்ற கேள்வி புதுடில்லியிலும் கொழும்பிலும் வலுப்பெற்றுள்ளது.
பலரது பெயர்கள் அடிபட்டாலும் இது குறித்து சவுத் புளொக் தீர்மானிக்கவில்லை என்றே தெரிகிறது.
தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகாரங்களைக் கையாளும் மேலதிகச் செயலராக உள்ள வை.கே.சிங் கொழும்புக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் அசோக் கே காந்தாவை விடவும் மூத்தவரும் சற்று இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடியவருமான ஒருவரையே கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் சவுத் புளொக்கில் உள்ளது.
இந்த வகையில் தற்போது சீனாவில் உள்ள இந்தியத் தூதுவர் எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது. அதற்கும் சில சிக்கல்கள் உள்ளன.
அடுத்து வெளிவிவகாரச் செயலர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளவர்களில் ஜெய்சங்கரும் ஒருவர் என்பது ஒன்று.
அடுத்து சீனாவுடன் எல்லையில் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் அங்குள்ள தூதுவரை இடமாற்றம் செய்வதற்கு புதுடில்லி விரும்புமா? என்பது இன்னொன்று.
எவ்வாறாயினும் கொழும்புடன் மென்போக்கை கடைப்பிடிக்கத்தக்க ஒருவரை சவுத் புளொக் அனுப்புவது என்றே கருதப்படுகிறது.
இலங்கையுடனான உறவுகளை முறித்துக் கொள்ளாமல் அதேவேளை இந்தியாவின் நலன்களையும் உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ளத்தக்க ஒருவரையே புதுடில்லி கொழும்புக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கொழும்பினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச 13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
இவையெல்லாம் இந்தியாவை அவமானப்படுத்தும் விடயங்கள்.
இந்தநிலையில் இந்தியா உறுதிஜயான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு தூதுவரையே கொழும்புக்கு அனுப்பும் என்று நம்பலாம்.
அவர் இலங்கையில் இருந்து குப்பைகளை அகற்ற எத்தனிக்கும் அமெரிக்கத் தூதுவர் சிசனைப் போன்ற ஒருவராக இருந்தாலும் ஆச்சரியமில்லை.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten