ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. அழிக்கவே முடியாதென்று உலகமே வியந்து நின்ற அவர்களது ஆட்சியும் அதாவது அவர்கள் இரு தசாப்த காலமாகக் கட்டிக்காத்த தமிழீழ அரசும் அந்த முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டது. ஏன்? எப்படி?
விரோதிகளான SLFP யும் UNP யும் முதலாளித்துவக் கட்சிகளும் சோசலிசக் கட்சிகளும் பாமர சிங்களவரும் படித்த சிங்களவரும் மலை நாட்டுச் சிங்களவரும் தாழ்நிலச் சிங்களவரும் கூடி வாழ்ந்த முஸ்லீம் மக்கள் சிலரும் தமிழின துரோகிகள் சிலரும் கூட தமிழீழ அரசையும் போராளிகளையும் தம் பொது எதிரியாகப் பார்த்தனர்.
அவர்களை அழிப்பதில் ஒற்றுமைப்பட்டனர். பரம விரோதிகளான அமெரிக்காவும் சீனாவும், இந்தியாவும் பாகிஸ்தானும், ஐரோப்பாவும் ரஷ்யாவும் ஆபிரிக்க நாடுகளும் ஆசிய நாடுகளும் தமிழீழ அரசைத் தம் பொது எதிரியாகப் பார்த்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழீழ அரசை அழித்தனர். தமிழர் விட்ட பிழை என்ன?. விடுகின்ற பிழை என்ன?
உலகில் உத்தம நாடு எதுவும் இல்லை, அத்தனை நாடும் ஊழல் நாடுகள்தான், நட்புக்கொள்ள யாரும் தகுதி இல்லை. அதனால் தனித்து நின்று போராடுவோம், நம்வழி தனி வழி என்ற போக்கில் நின்றது தான் அவர்கள் விட்ட தவறு. அவர்கள் தங்கள் வழி தர்மவழி அது வெல்லும் வழியென நம்பினர். ஆனால் உலக தர்மம் வேறாக இருந்ததை அவர்கள் உணர வில்லை.
எதிரிகளைத் தரம் பிரித்து ஒரு முறையில் ஒரு எதிரியையைத்தான் தாக்கி வெல்ல வேண்டுமென்ற வழிமுறையைப் பின்பற்றவில்லை. முதல் எதிரியை வெல்லும் வரை இரண்டாம் எதிரி நண்பன் என்று உணரவில்லை.
உலக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதையும் உணர வில்லை. இருந்தால் நிரந்தர நட்பு இல்லையேல் நிரந்தரப் பகை என்று நினைத்தார்கள் போலும். நம் பக்கம் எத்தனை பிரிவிருந்தாலும் பொது எதிரியைத் தாக்கும் போது எமக்குள் இருந்த உட்பகைமையை மறந்துவிடவில்லை.
முஸ்லிம்களை நண்பராக வைத்து தமிழரை வென்ற ராஜபக்ஷ ஆட்சி இப்போது முஸ்லிம்களைத் தாக்கத் தொடங்கி இருப்பதைக் கவனிக்க வேண்டும். ராஜபக்சவோடு நின்று புலிகளை அழித்த நாடுகள் அதன் பின்னர் இப்போதுதான் ராஜபக்ஷ அரசைத் எதிர்க்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இருமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உதாசீனம் செய்து எதிர்த்து நிற்கும் வலிமை ஒரு குட்டித் தீவான ஸ்ரீலங்காவிற்கு எப்படி வந்தது?.
ஒரு வல்லாதிக்க சக்தியான சீனாவின் நட்புத்தான் ஸ்ரீலங்காவின் பலம். அதைப்போன்ற ஒரு பலத்தைத் தேடிக்கொள்ள நாம் தவறிவிட்டோம். தமிழர் கவனிக்கத் தவறிய விடயங்கள் இவைதான்.
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பதையாவது சரியாகச் செய்தால் வெற்றி நமதே. பரீட்சையில் தோற்று விட்டோம். இனி மீண்டும் எப்படிச் சித்தி அடையலாம்?. முதலில் எமது நிலைமையை ஒப்புக்கொண்டு அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் திருத்திக் கொண்டு சரியாக மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி உண்டு.
நமது பொது எதிரி, முதல் எதிரியை அடையாளம் காண்போம். அந்த முதல் எதிரியை அழிக்கும்வரை மற்ற எதிரிகளைத் தாக்காமல் முடிந்தால் உதவியைப் பெற்றுக் கொள்வோம்.
பொது எதிரியைத் தாக்கும்போது நமக்குள் இருக்கும் குரோதங்களை உட்பகைமைகளை மறந்து தனிமனித அல்லது தனது கட்டமைப்பு நன்மைகளைக் கருதாமல் பொது இன நன்மையைக் கருதி ஒன்றுபட்டுச் செயற்படுவோம்.
எப்படி இருந்தாலும் நடைமுறையில் அனைத்து தனிமனிதரும் அனைத்துக் கட்டமைப்புகளும் சேராமலும் இருக்கக்கூடும்.ஆனால் பெரும்பாலான மக்கள் ஒப்புக் கொண்டு ஒருங்கிணைவர். சரியான விடயங்களுக்கு மிகப்பெரும் பாலான மக்கள் ஆதரவு நிட்சயம் இருக்கும். இது எங்குமுள்ள உலக நியதிதான். நூறு வீதம் ஒற்றுமைக்குக் காத்திராமல் மக்கள் ஆதரவோடு அணிதிரளும் அனைத்து அமைப்புகளோடு சேர்ந்து வெளிப்படையான செயற்பாடுகள் மூலம் நமது போராட்டம் தொடர்ந்தால் வெற்றி நமதே.
நமது எதிரிகள்:-
அ. தாயகத்தில்-
எதிரிகளை சரியான முறையில் தரம் கண்டுகொள்வதும் முதல் எதிரியை முதலில் தாக்கும் போது (ஜனநாயக வழிகளில்) மற்றவர்களுடன் நட்பாக (நமது நலன்களை விட்டுக்கொடுக்காமல்) இருக்கவேண்டியதும் நமது வியூகத்தின் அடிப்படையாக ஆணிவேராக இருக்கவேண்டும்.
இனவெறி கொண்ட சிங்கள மக்கள், பௌத்த மதக் குருமார், சிங்களக் கட்சிகள்,சிங்கள ஆட்சியாளர்,காட்டிக் கொடுக்கும் சுயநலத் தமிழினத் துரோகிகள், அனைத்திற்கும் மேலாக தமிழின அழிப்பின் உச்சமாகத் தொழிற்படும் இன்றைய மகிந்த அரசு என்று நமது எதிரிகளை அடையாளம் கண்டுகொண்டாலும் இன்று நம் கண்முன் பெருமரம் போல நிற்பது மகிந்த ஆட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனவே மகிந்த அரசை எதிர்க்கும் அனைத்துச் சக்திகளையும் நாம் இப்போதைக்கு எதிர்க்காமல் அவர்களின் மகிந்த எதிர்ப்பிற்கு நாம் முழு ஆதரவாகச் செயற்படுவதே அரசியற் சாணக்கியமாகும், வெற்றிக்கு வழியாகும்.மகிந்த அரசிற்கெதிராக உள்நாட்டில் நாளுக்குநாள் எதிர்ச் சக்திகள் மேலும் மேலும் உருவாகி வருவதைக் கவனத்தில் கொள்வோம். அந்தச் சக்திகளை எமக்கு ஆதரவாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
ஆ.வெளியுலக எதிரிகள்:-
முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளை உணரவேண்டும். பொதுவாக எந்த உலக நாட்டு மக்களும் நமது எதிரிகளல்ல. சில ஆட்சியாளரும் ராஜதந்திரிகளுமே எதிரிகளாக இருக்கலாம். இன்னொன்று யாரையும் நாம் நிரந்தர எதிரியாகக் கொள்ளக் கூடாது. மற்றது நமக்கென்று யாருமே நேரடியாக எதிரியாக இருக்க வேண்டு மென்பதில்லை.
நமது (முதல்) எதிரியின் இன்றைய நண்பன் நமக்கு இன்றைய எதிரிதான். நமது எதிரியின் இன்றைய எதிரி நமது இன்றைய நண்பன்தான். இதுவே உலக வழமையாக உள்ளது. நாம் நமது எதிரி ஆட்சியாளர் என்றும் ராஜதந்திரிகள் என்றும் பார்க்க வேண்டுமே தவிர எந்த நாட்டு மக்களையும் எதிரியாகப் பார்க்கக் கூடாது.
அந்த வகையில் மகிந்த அரசிற்கு உதவும் ஆட்சியாளரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இன்று நம் எதிரிகள் என்பது தெளிவாகின்றது.அந்த வகையில் இந்தியா சீனா பாகிஸ்தான் ரஷ்சியா போன்ற நாடுகளின் அரசுகள் நமது இன்றைய எதிரிகளாவர்.
அந்நாட்டு மக்கள் அல்ல.எனவே நமது எதிரிகளை வெல்வதற்கு அந்தந்த எதிரி நாட்டு ஆட்சியின் எதிர்ப்பாளரும் மக்களுமே எமது நண்பர்கள். அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதன் மூலமே எதிரி அரசை வீழ்த்தி நமது நோக்கத்தை அடையமுடியும்.
அதேபோல மகிந்த அரசிற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒரு வகையில் எதிர் அழுத்தம் கொடுக்கும் ஆட்சியாளரை நமது இன்றைய நண்பர்களாகக் கொண்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக நாம் செயற்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். அவ்வாறான நமது செயற்பாடுகளை தேவை கருதி வெளிப்படை யாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யவேண்டும். புரிந்துணர்வோடு செயற்பட வேண்டும்.
ஈழத் தமிழருக்கான இன்றைய அரசியற் தலைமையின் தோற்றம்.
2009 மே 18 நமது தாயக அரசியற் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு சட்டத்தின் மூலம் அங்கு தமிழர் குரல்வளை நெரிக்கப்பட்டு அவர்கள் தமது அரசியல் விருப்பை வெளியிடக்கூட முடியாதபடி தடுக்கப்பட்டுள்ள நிலையில் தாயக மக்களின் பிரிக்கமுடியாத இன்னொரு அங்கமான புலம்பெயர் தமிழர் சர்வதேச நியமங்களுக்கேற்ப அவர்கள் வாழும் 12 நாடுகளில் நடத்தப்பட்ட வெளிப்படையான ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்ற அரசியற் தலைமையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இப்போது ஈழத் தமிழருக்கான அடுத்த கட்ட நகர்வுகளை முன்னகர்த்த அடிப்படைத் தேவை என்ன?. முதலில் தமிழர் தமது இலக்கைத் தெளிவாகத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
தமது அந்த இலக்கு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அவற்றின் நோக்கங்களுக்கு எதிரில்லாமல் பிராந்திய அமைதிக்கும் உலக சமாதானத்திற்கும் உலக பொருளாதார அபிவிருத்திக்கும் சாதகமாக இருக்கப் போவதை தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
தமது அந்த இலக்கு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அவற்றின் நோக்கங்களுக்கு எதிரில்லாமல் பிராந்திய அமைதிக்கும் உலக சமாதானத்திற்கும் உலக பொருளாதார அபிவிருத்திக்கும் சாதகமாக இருக்கப் போவதை தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் அளிக்கப் பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும் நல்லாட்சிக்காக வகுத்துக் கொடுக்கப் பட்டுள்ள மனித சமத்துவத்திற்கான வழிமுறைகளும் எமது நிர்வாகத்தில் உள்ளடக்கப்படும் என்பதை வலியுறுத்துவோம்.
அதற்காக சுதந்திரமாகக் கருத்து வெளியிடக்கூடிய புலம்பெயர் ஈழத் தமிழரின் இன்றைய அரசியற் தலைமை என்ற வகையில் மக்களை ஒன்றிணைத்து அவர்களால் ஆக்கப்படும் அவர்களது அந்தத் தமிழீழ சுதந்திர சாசனத்தை உலகுக்கு முரசறைய வேண்டிய கடமையும் பொறுப்பும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு உண்டு.
அந்தவகையில் நா.க.த.அ.தமிழரின் அனைத்து அமைப்புகளினதும் பொதுமக்களினதும் பேராதரவோடும் உதவியோடும் பங்களிப் போடும் அவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. அதற்கு பொருளாதார உதவி உட்பட பேராதரவும் பங்களிப்பும் தரவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் வரலாற்றுக் கடமையாகும்.
அமெரிக்கா இன்று ஒரு பெரும் வல்லரசாக மிளிரக் காரணமாக அங்கு அடிமைத்தளையை உடைத்தெறிந்த 13,14,15வது அமெரிக்க சட்டத் திருத்தங்களின் காரணகர்த்தாவான தாட்டியஸ் ஸ்டீவென்ஸ் வாழ்ந்த நகரம் பென்சில்வேனியாவிலுள்ள லங்காஸ்டர் ஆகும்.அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஜனாதிபதி ஏபிரகாம் லிங்கன் பிரகடனப்படுத்திய 150ஆவது வருடம் 2013.
இந்த வருடத்தில் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த லங்காஸ்டர் கொண்வென்சன் சென்ரரில் தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறைவது ஈழத் தமிழர் சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நிகழ்வாகும் என்பதை யிட்டு ஒவ்வொரு தமிழனும் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடையலாம்.
ஈழத் தமிழரின் உடனடித் தேவை:- (முதலுதவி)
கடந்த 65 வருடப் பட்டறிவில் ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு தனி ஈழத்தைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை என்பது தமிழர் தரப்பு முடிவாகும். ஆனால் அதை அடையும் வரை ஈழம் அமைவதற்குத் தேவையான அடிப்படைக் காரணிகளான தமிழரின் தாயகம் தேசீயம், மொழி, கலாசாரம் பொருளாதாரம் என்பன காப்பாற்றப் படாவிட்டால் அது சாத்தியமற்றதாகி விடும்.
ஈழத்தமிழருக்கு மகிந்த ஓர் தீர்வுத் திட்டம் வைத்திருக்கிறார். அதை அவர் அசுர வேகத்தில் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார். சிங்களவர் தவிர்ந்த ஏனையவர்களையும் பௌத்தமதம் தவிர்ந்த ஏனைய மதங்களையும் சிறுமைப்படுத்தி அரசியல் அந்தஸ்தோ உரிமையோ பொருளாதார வலிமையோ அற்ற உதிரிகளாக்கி முழு இலங்கைத் தீவையும் ஒரு பௌத்த சிங்கள நாடாக்குவதன் மூலம் அங்கு இப்போது இருக்கின்ற மொழி இன மதப் பிரச்சனையை இல்லாமற் செய்து விடலாம் என்பதே அந்தத் திட்டமாகும்.
அதனால் நில அபகரிப்பு சிங்கள மொழித் திணிப்பு கலாச்சாரச் சிதைப்பு பொருளாதார முடக்கம் பௌத்த மத விதைப்பு என்பவற்றை அதிஉச்ச வேகத்தில் அவர் செயற்படுத்துகிறார்.
இந்த இடத்தில்தான் தமிழர் குழப்ப மடைகிறார்கள். நோயாளிக்கு வைத்திய சாலையில் வழங்கப்படும் உரிய சிகிச்சைதான் முறையான சுகத்தைத் தரும் என்றாலும் நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்வரை முதலுதவி மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அதேபோல நமக்கான ஆட்சியுரிமையைப் பெறும் வரை நமது தாய்நிலம் மொழி கலாச்சாரம் என்பன பறிபோய் விடாமற் பாதுகாக்கப் படவேண்டும்.
தமிழ் ஈழம் சேர்வதற்கு எந்தவழி சிறந்தவழி?
முதலுதவி நோய்க்கு மருந்தல்ல.முதலுதவி நிட்சயம் போதுமானதல்ல. ஆனால் முதலுதவி இன்றி உயிரே போய்விட்டால்?. இங்குதான் எமது அரசியற் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது.
மகிந்த தொடரும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்துவதெப்படி?.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள் மட்டுமே எமக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம், ஒரே வழியாகும்.வேறு வழி உண்டா? இல்லையே.
இந்த அழுத்தங்களை தீவிரமாக்கி முடிந்த விரைவில் சர்வதேச ஊடகங்களுக்கான தடையற்ற அனுமதி, வடகிழக்குப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் தடையற்ற பிரசன்னம், மனித உரிமை அமைப்புகளின் சுதந்திரமான கண்காணிப்பு ஆகிய உடனடிச் சாத்தியமான விடயங்கள் மூலம் மகிந்தவின் இனவழிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம். அதுதான் முதலுதவி.
நாம் பிரயோகிக்கும் அழுத்தங்களில் ஒன்றான எமக்குச் சுதந்திர தமிழீழம் வேண்டுமென்று முரசறைவது சுதந்திர ஈழம் அமைவதற்கான காரணிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறப்பான அழுத்தமாக பார்க்க வேண்டுமே தவிர அதனால் முதலுதவியும் கிடைக்காமற் போய்விடும் என்ற வாதம் எவ்வகையிலும் பொருந்தாது.
நாம் அந்த அழுத்தத்தைத் தவிர்ப்பதால் மகிந்த தனது இனவழிப்பை நிறுத்தப் போவதில்லை. சுதந்திர சாசன முரசறைவிற்கான தமது எதிர் நடவடிக்கைகளை மகிந்த முடுக்கி விட்டிருப்பதில் இருந்தே எமது இந்த நடவடிக்கையால் மகிந்த எவ்வளவு பாதிக்கப்படுகிறார் என்பதை உணரலாம். தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடிந்தால் விரைவில் நாம் எமது இலக்கை அடைவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
மாறிவரும் சர்வதேச நிலைமைகளும் குறிப்பாக அடுத்த வருடம் பொதுத் தேர்தலைச் சந்திக்கும் இந்திய, குறிப்பாக தமிழக நிலைமைகளும் வேகமாக அதிகரித்து வரும் இலங்கை உள்நாட்டு மகிந்தவின் எதிர்ச் சக்திகளும் அறம் என்னும் சூரியனை அக்கிரமம் என்னும் மேகங்கள் நிரந்தரமாய் மறைக்க முடியாதென்பதை நிரூபிக்கும் என்றே நம்பலாம்.
வின் மகாலிங்கம்
vinmahalingam@gmail.com
Geen opmerkingen:
Een reactie posten