தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (27) நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன.அவையாவன,
தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கிவந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவுசெய்யப்படவில்லை.
பதிவுசெய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள் சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்படவேண்டும் எனவும் இந்த மத்தியகுழு தீர்மானிக்கின்றது.
இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் கூடிய விரைவில் தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் எனவும் மத்தியகுழு வேண்டுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் அல்லது தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் இதில் சேரவிரும்பும் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய இனத்தின் ஒற்றமையை பலப்படுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வொன்றை வென்றெடுக்கவேண்டும் என்றும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது
Geen opmerkingen:
Een reactie posten