தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

தமிழர் நிலங்களை சூறையாடும் இராணுவம், சர்வதேசம் கண்டு கொள்ளுமா?


யுத்தத்தால் நிலை குலைந்து, தரம்புரண்டு நிம்மதியின்றி வாழும் வடபகுதி தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கம் அம் மக்களின் வாழும் உரிமையைப் பறித்து நடுத்தெருவில் தவிக்க விட்டுள்ளது.
இதனை எதிர்ப்பதோடு, சொந்த மண்ணில் மக்கள் வாழும் உரிமையை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்த, விவசாயம் செய்த காணிகளை இராணுவம் சுவீகரித்தமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. மக்கள் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, நாடோடிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் வாழ முடியாத அவல நிலை தலைதூக்கியுள்ளது.

வலி - வடக்கில் மக்கள் வாழ்ந்த ஆறாயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்து முள்வேலி அமைத்துள்ளது. இது மனிதாபிமானமற்ற செயலாகும். மக்கள் எங்கு செல்வார்கள். தமிழ் மக்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கவே அரசாங்கம் முனைவதை இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
நாட்டின் எதிர்கட்சித் தலைவருக்கும் இம் மக்களின் உண்மை நிலையை கண்டறிவதை இராணுவம் தடைவிதித்திருக்கின்றது. அப்படியென்றால் சாதாரண மக்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் மக்களும் இலங்கையர்களே. எனவே, அவர்களது சொந்தக் காணிகளில் அவர்களின் வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இந்தியாவும் சர்வதேசமும் கவனம் செலுத்த வேண்டும்.
வட பகுதி தமிழ் மக்கள் இன்று திறந்த வெளி சிறைச்சாலைக்குள் வாழ்கின்றனர் என்றும் மாநகர சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten