தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

வலிகாமம் பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம்!


வலிகாமம் வடக்கு, கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், வலி, வடக்கு மீள்குடியேற்ற குழுவினதும் ஏற்பாட்டில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பல அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் நடைபெறாதெனவும், நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்திருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்ததாவது,
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் எனவும், நீதிமன்ற தடையுத்தரவுகள் எவையும் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டதுடன், இன்று மாலை பொலிஸார் குறித்த போராட்டத்தை நடத்துவதற்கான எழுத்து மூல அனுமதியினை தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அமைதியாக இருக்க தொடர்ந்தும் அரசாங்கமும், இராணுவ இயந்திரமும் எங்கள் தலைகளுக்கு மேல் அதன் ஆக்கிரமிப்பு செயற்றிட்டத்தை கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் நாம் தொடர்ந்தும் அமைதிகாப்பது என்பது இயலாத காரியம்,
சாதாரணமாக 5 அறிவுள்ள ஜீவன்களுக்கும் கூட தன்னுடைய இடம், அல்லது அதன் இருப்பிடம் பறிக்கப்படும் போது கோபம் வருகின்றது, எதிர்த்துப் போராடுகின்றது. நாங்கள் மனிதர்கள் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, நாங்கள் ஜடங்கள் அல்ல.
நாங்கள் அமைதியாக ஜடங்களாக, அல்லது நடைப்பிணங்களாக இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தினுடையதும், இராணுவ இயந்திரத்தினதும் நோக்கம். அதற்காக அவர்கள் மிகவும் கஸ்டப்பட்டு முகாம்களுக்குச் சென்று நாளைய போராட்டத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் என கூறிவருகின்றனராம்,
அதனோடு அவர்களுடைய எடுபிடிகளும் அவ்வாறு செய்கின்றனராம், ஆனால் அவர்களுக்கு அது வேலை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது வாழ்க்கை என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
எந்த தடைகள் வந்தாலும் அத்தனையினையும் மீறி பாதிக்கப்பட்ட மக்கள் நாளைய போராட்டத்தில் குரல் கொடுப்பார்கள் என நாம் நம்புகிறோம், அனைத்து மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு இனமும், தன்னுடைய சுதந்திரத்தை தானே போராடித்தான் பெற்றுக் கொள்ளவேண்டும். போராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என கனவுகாண முடியாது. அதற்கு எமக்கு உரிமையும் கிடையாது என்பதே சுதந்திரத்திற்காக போராடிய மாவீரர்கள் எமக்குச் சொன்ன பாடம்.
எனவே மக்கள் வெளிவந்து தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் அந்தப் போராட்டங்களே கனதியானவையாக இருக்கும், அந்தப் போராட்டங்களே உலகத்தின் மனசாட்சியை உலுக்கும். இதற்கு பலஸ்தீனமும், வியட்னாமும் சிறந்த உதாரணங்கள்.
எனவே நாளைய போராட்டத்தில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

Geen opmerkingen:

Een reactie posten