[ பி.பி.சி ]
இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோத்தபாயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அதிபர் மஹிந்த ராஜபக்ச அரசு மீது அதிகரித்து வரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று தமிழோசையிடம் தெரிவித்தார் ஹரிகரன்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளி குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிகரன், அந்த பிரச்சனையெல்லாம் 1987ம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்தார்.
ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐநா மன்றமும் கோருவது 2009ம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விவகாரங்களை அல்ல என்று கூறிய ஹரிகரன்,
அவற்றை விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோத்தபாய ராஜபக்ச விரும்பினால் ஐநாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐநாவோ சர்வதேச நாடுகளோ இதை விசாரிக்க மறுத்தால், இலங்கை அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten